இதுதான் இந்தியா!

திருவனந்தபுரத்தை அடுத்த  நெய்யாற்றங்கரை என்கிற ஊரில் வாழ்கிறது சந்திரனின் குடும்பம்.

திருவனந்தபுரத்தை அடுத்த  நெய்யாற்றங்கரை என்கிற ஊரில் வாழ்கிறது சந்திரனின் குடும்பம். நண்பர் ஒருவரை சந்திரன் சந்திக்கச் சென்றிருந்தபோதுதான் அவருக்கு அந்தத் தகவல் கிடைத்தது. அவரது வீட்டிலிருந்து வந்த அலறல் சப்தமும், உள்ளேயிருந்து வரும் புகையும் அக்கம்பக்கத்தவர்களைத் திடுக்கிட வைத்தன. 
செய்தி கேள்விப்பட்ட சந்திரன் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு தாழிடப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் துணையோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால், நெருப்பில் கருகிக் கொண்டிருந்தார்கள் அவருடைய 42 வயது மனைவி லேகாவும், 19 வயது மகள் வைஷ்ணவியும். தீயை அணைக்கும்போதே மகள் வைஷ்ணவி இறந்திருக்கிறாள். மனைவி லேகாவை, உடனடியாகத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றாலும்,  அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிரும் பிரிந்தது. 
15 ஆண்டுகளுக்கு முன்பு தனது 10 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து நெய்யாற்றங்கரை கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார் சந்திரன். அந்தப் பணத்தில்தான் அந்த இடத்தில் வீடு கட்டி, சந்திரனின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு வட்டியும் அசலுமாகப் பல தவணைகளில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் வரை அவர் செலுத்தியிருக்கிறார். அவ்வப்போது, தவணைகள் தவறியதுண்டு. அதனால் வட்டி அதிகரித்திருக்கிறது. இப்போதைய நிலையில் வட்டியும் முதலுமாக இன்னும் ரூ.6.85 லட்சம் திருப்பித் தரவேண்டும். 
கடந்த சில மாதங்களாக அவர்  தவணைத் தொகையைச் செலுத்தவில்லை என்பதால்,  நெய்யாற்றங்கரை கனரா வங்கி அவர் மீது  நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்து அவர்களை அகற்றி, வீட்டையும் நிலத்தையும் பறிமுதல் செய்ய கனரா வங்கி நடவடிக்கை  எடுக்க முற்பட்டது.
வீட்டை விற்று கனரா வங்கியின் கடன் தொகையைச் செலுத்திடும் முயற்சிகளை சந்திரனின் குடும்பம் மேற்கொண்டது. அவர்களது கடைசி நம்பிக்கையாக இருந்த தரகர் ஒருவரும் கைவிட்ட நிலையில்தான், செய்வதறியாது தனது நண்பரின் உதவியை நாட சந்திரன் சென்றிருந்தார். செவ்வாய்க்கிழமை மதியத்துக்குப் பிறகு அவர்களது வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் நேரில் வந்து மிரட்டியிருக்கிறார்கள்.
வங்கி அதிகாரிகள் ஜப்திக்கு நேரம் குறித்துவிட்டார்கள் என்பதறிந்து, லேகாவும் மகள் வைஷ்ணவியும் மனமொடிந்து விட்டனர். ஜப்தி நடவடிக்கையால் அக்கம்பக்கத்தினரின் அவமானத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல்  நடந்து கொண்டிருக்கும் நிலையில், எந்தவொரு விவசாயக் கடன் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேரள அரசின் தடை உத்தரவு இருக்கிறது. அதையும் மீறி,  நெய்யாற்றங்கரை கனரா வங்கி அதிகாரிகள் எப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்க முற்பட்டார்கள் என்ற  கேள்வியை பொதுமக்கள் மட்டுமல்ல, அரசே கேட்கிறது.  
சாமானியர் சந்திரன் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு,  வட்டியும் முதலுமாக ரூ. 8 லட்சம் செலுத்தியும்கூட, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால்,  நமது பொதுத் துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பித் தராதவர்களும், மோசடி செய்து பணம் கொள்ளையடித்தவர்களும் தடையே இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நமது பொதுத் துறை வங்கிகளில் நடத்தப்பட்ட மோசடிகளில் ஏற்பட்டிருக்கும் இழப்பு சுமார் ரூ.70,000 கோடி. 2015-16-இல் ரூ.16,409 கோடி, 2016-17-இல் ரூ.16,652 கோடி, 2017-18-இல் ரூ.36,694 கோடி, 2017-18 நிதியாண்டில் மட்டும் நமது அரசுத் துறை வங்கிகளில் நடந்திருக்கும் மோசடிகள் 6, 500. இதில் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி கூட்டணி நிகழ்த்திய ரூ.12, 000 கோடி மோசடியும் அடக்கம்.
2017-18-ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,461 கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.2,390 கோடி), பேங்க் ஆஃப் இந்தியா (ரூ. 2,224 கோடி),  அலாகாபாத் வங்கி (ரூ.1,520 கோடி), ஆந்திரா வங்கி (ரூ.1,303 கோடி), யூகோ வங்கி (ரூ.1,224 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.1,116 கோடி), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.1,095 கோடி),  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.1,084 கோடி), பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (ரூ. 1,029 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.1,015 கோடி) ஆகியவை ரூ.1,000 கோடியிலும்   அதிகமாக மோசடிகளில் இழந்திருக்கின்றன. ஏனைய வங்கிகளும் இழக்காமலில்லை. ஆனால், அவை ஆயிரம் கோடியை எட்டவில்லை, அவ்வளவே!
மோசடிகளில் இழந்த பணம் இவ்வளவு என்றால், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.4,00,000 கோடி.  
சந்திரன் குடும்பத்தினரைப் போல அவமானங்களுக்குப் பயப்படும் நடுத்தர வர்க்க  இந்தியர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 
அழுத்தம் தாள முடியாமல் அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால்,  விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் எந்தவிதக் குற்ற உணர்வே இல்லாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி மேலைநாடுகளில் குடியேறி சொகுசாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் பிறப்பதாக இருந்தால் கோடீஸ்வரர்களாக மட்டும்தான் பிறக்க வேண்டும்!  வங்கிகளில் கடன் வாங்குவதாக இருந்தால்  கோடிகளில்தான் கடன் வாங்க வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com