வெற்றியும்...கவலையும்...

ஒன்றன் பின் ஒன்றாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மாதம் வெளிவந்த மாநில பிளஸ் 2 தேர்வில்



ஒன்றன் பின் ஒன்றாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மாதம் வெளிவந்த மாநில பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.30 % என்றால், கடந்த வாரம் வெளியான சிபிஎஸ்இ என்று பரவலாக அறியப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவின் தேர்ச்சி விகிதம் 83.40%. தமிழகத்தைப் பொருத்தவரை, மாநிலக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,69,423 மாணவ, மாணவியரில் கடந்த சில ஆண்டுகளைப் போலவே மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு சற்று (0.5%) குறைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளைவிட (92.48%) அரசு உதவி பெறும் பள்ளிகளும் (94.53%) மெட்ரிக் பள்ளிகளும் (99.05%) அதிகத் தேர்ச்சி விகிதத்தை அடைந்திருப்பதும் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 
பிளஸ் 2 தேர்வில் கலந்து கொண்ட 7,083 மேல்நிலைப் பள்ளிகளில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்திருக்கின்றன. இந்தியாவிலுள்ள 12,441 பள்ளிகளைச் சேர்ந்த 12,05,484 பேர் எழுதிய சிபிஎஸ்இ முறை பிளஸ் 2 தேர்வில், 83.40% மாணவ, மாணவியர் தேர்ச்சி  பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தைவிட (83.01%) இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகம். சிபிஎஸ்இ பிரிவிலும் மாணவர்களைவிட மாணவியர்தான் அதிக விழுக்காடு அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
சிபிஎஸ்இ பிரிவின் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதில இந்திய அளவில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும் (98.20%), சென்னை மண்டலம் (92.93%) இரண்டாமிடத்தையும், தில்லி மண்டலம் (91.87%) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. அகில இந்திய அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா, முஸாஃபர்நகரைச் சேர்ந்த கரீஷ்மா அரோரா ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜி. கார்த்திக் பாலாஜி 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்துகள்.
தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், இப்போது மாணவ, மாணவியரின் கவனமும், முனைப்பும் அடுத்தாற்போல எந்தக் கல்லூரியில், என்ன படிப்பில் சேரலாம், இடம் கிடைக்கும் என்பது குறித்துத் திரும்பியிருக்கிறது. நுழைவுத் தேர்வுகளை எழுதினால் மட்டுமே இடம் பெற முடியும் என்பது போன்ற படிப்புகளும் ஏராளம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, பிளஸ் 2 தேர்வைவிட நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிரிவின் பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதியவர்களில் 94,299 பேர், 90%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அதிக மதிப்பெண்களை வாரி வழங்கும்போது, பல படிப்புகளுக்கான நுழைவு மதிப்பெண் உச்சத்தை எட்டிவிடுகிறது. சில படிப்புகளுக்கு 100% மதிப்பெண் பெற்றிருந்தால்தான் இடம் கிடைக்கும் என்பதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பிளஸ் 2  தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தரமான பல்கலைக்கழகங்களில் சில படிப்புகளுக்கான அனுமதியை உறுதி செய்யாது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கல்வித் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது என்றாலும், இரண்டு முக்கியமான பிரச்னைகள் முன்னுரிமையும், முக்கியத்துவமும் பெறுகின்றன. ஒருபுறம் தரமான உயர்கல்வி நிலையங்கள் அதிக அளவில் இல்லாமல் இருக்கின்றன. இன்னொருபுறம், மதிப்பெண் சார்ந்த கல்வி முறையால் நமது மாணவர்களின் கல்வித் தரமும், புரிதலும் குறைவாகக் காணப்படுகின்றன. இந்திய உயர்கல்வி  நிறுவனங்களில் படித்து வெளிவரும் மாணவர்களில் 53% பேர் அவர்கள் படித்த துறையில் வேலை பார்க்கத் தகுதியற்றவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பிரச்னையும் எழுந்திருக்கிறது. பிளஸ் 2  தேர்வு முடிவுகளின்படி மாணவர்களைவிட மாணவியர்தான் அதிக மதிப்பெண்களும், அதிக அளவில் தேர்ச்சியும் பெறுகின்றனர். அதேபோல, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அப்படிப் படித்து வெளிவரும் பெண்களுக்கு, அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றனவா என்றால் இல்லை. பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டங்கள் தீட்டும்போது, அப்படிப் படித்துத்  தேர்ச்சி பெறும் மகளிருக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், அதிகரிக்கவும் எந்தவித முயற்சியும் எடுக்கப்படாமல் போவது, உளவியல் ரீதியிலான பாதிப்பைப் பலருக்கும் ஏற்படுத்துகிறது.
மதிப்பெண்கள் பெற்றால் மட்டும்தான் வருங்காலம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைப் பள்ளிகளும், பெற்றோர்களும் மாணவ, மாணவியரின் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள், மதிப்பெண் பெற்றும் தாங்கள் விரும்பிய படிப்பில் இடம் பெற முடியாதவர்கள், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆகியோர் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்படுவது அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் தற்கொலைக்குத் துணிந்துவிடுகிறார்கள். தெலங்கானாவின் மாநில வாரியத் தேர்வு முடிவுகள் 20 மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாகி இருக்கிறது.
தேர்வு முடிவுகளும், அதிகரித்த தேர்ச்சி விகிதமும் மகிழ்ச்சி அளிப்பதைவிட, வருங்காலம் குறித்த திகைப்பைத்தான் அதிகரிக்கிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com