நம்பிக்கை ஏற்படுத்தவில்லை...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு, குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு, குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படாமல் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  
இது குறித்து உச்சநீதிமன்றம்  திங்கள்கிழமையன்று அறிக்கை வெளியிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ஊழியர் சுமத்திய குற்றச்சாட்டுகளில் எந்தவித ஆதாரமும் காணப்படவில்லை என்பதுடன் அந்த அறிக்கை முடிந்துவிட்டது. 
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான தன்னுடைய குற்றச்சாட்டுகளை 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரத்தின் வாயிலாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட குழுவின் விசாரணையில் அவர் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். 
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை விசாரித்தது. எதிர்த்தரப்பு வாதமில்லாமல் நடத்தப்பட்ட விசாரணை முடிவு இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 
நீதிபதி பாப்டே குழுவின் விசாரணையில் தனக்கு நீதி கிடைக்காது என்றும், விசாரணைக் குழு நேர்மையான விசாரணை நடைமுறையைக் கடைப்பிடிக்காது என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார் அந்தப் பெண் ஊழியர். நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு எதிராக தான் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், தனது தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்குச் சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
அவருடைய கூற்றுப்படி, நீதிமன்ற விசாரணை வெளிப்படையாக இல்லை. விசாரணை நடைமுறை குறித்துத் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை, விசாரணை பதிவு செய்யப்படவில்லை, தன்னுடைய வாக்குமூலத்தின் நகல் தனக்குத் தரப்படவில்லை என்பவையெல்லாம் விசாரணையிலிருந்து தான் விலகிக் கொண்டதற்கான காரணங்கள் என்று அந்தப் பெண் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். குற்றஞ்சாட்டிய பெண் ஊழியர் வழக்குரைஞரை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது அவர் விசாரணையில் கலந்துகொள்ளாததற்கு மிக முக்கியமான காரணம்.
குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மீது; விசாரணைக் குழுவில் இருப்பவர்கள் சட்டத்தின் அத்தனை அம்சங்களையும் கரைத்துக் குடித்த அனுபவசாலிகளான உச்சநீதிமன்ற நீதிபதிகள். இந்தப் பின்னணியில் சட்டம் குறித்த புரிதல் இல்லாத உச்சநீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர், தன் சார்பில் வாதாட வழக்குரைஞரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட்டது இயற்கை நீதியல்ல. அதுமட்டுமல்லாமல், விசாரணை நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் மட்டுமல்ல, தனது வழக்குரைஞரிடமேகூட அவர் தெரிவிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததில் வியப்பொன்றுமில்லை. விசாரணை நடத்தப்படும் சூழலே தன்னை அச்சுறுத்துவதாகவும், அச்சம் ஏற்படுத்துவதாகவும் இருந்ததால்தான் தொடர்ந்து விசாரணையில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்ததாக அந்தப் பெண் ஊழியர் தெரிவித்திருக்கிறார். 
பாலியல் தொந்தரவு வழக்குகளில் சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையை நீதிபதி பாப்டே குழு ஏன் பின்பற்றவில்லை என்பது வியப்பளிக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு என்பதால், நேர்மையான விசாரணையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். முறையான சட்ட நடவடிக்கையோ, விசாகா குழுவின் விதிமுறைகளோ, இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் வழங்கிய தீர்ப்புகளோ விசாரணைக் குழுவை அமைத்ததிலும், அதன் நடைமுறையிலும் பின்பற்றப்படாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. 
குழுவின் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிபதிகள். குழுவின் தலைமைப் பொறுப்பில் பெண் நீதிபதி இல்லை. நீதித்துறைக்கு தொடர்பில்லாத ஒருவர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், முன்னாள் உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். 
விசாரணைக் குழுவுக்கு கடந்த மே 2-ஆம் தேதி நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். குற்றஞ்சாட்டியிருக்கும் பெண் ஊழியர் கலந்துகொள்ளாத நிலையில், ஒரு தரப்பு விசாரணையாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான விசாரணை தொடரக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த வாரம் விசாரணைக் குழுவைச் சந்தித்து தன்னுடைய கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார். குற்றஞ்சாட்டியிருக்கும் பெண் ஊழியரின் வேண்டுகோளின்படி, வழக்குரைஞரை வைத்துக்கொள்ள விசாரணைக் குழு அனுமதிக்க வேண்டும் அல்லது நடுநிலையார் ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது நீதிபதி சந்திரசூட் அளித்த ஆலோசனை. 
நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, நீதி முறையாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். நீதிபதி பாப்டே குழுவினர் அளித்திருக்கும் நற்சான்றிதழ், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு வேண்டுமானால் ஆறுதல் அளிக்கலாம். நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கப் பயன்படாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com