சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

உலகமயம் வாழ்க!

By ஆசிரியர்| Published: 01st May 2019 01:33 AM

உலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குக் கதவுகளை திறந்துவிடும்போது அதன் பின்விளைவுகளையும் தேசம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதைக் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது பெப்சிகோ நிறுவனத்தால் வழக்கு தொடரப்பட்டிருக்கும் குஜராத் மாநில விவசாயிகளின் பிரச்னையும் சேர்ந்து கொள்கிறது. 
பெப்சிகோ நிறுவனம் பெப்சி குளிர்பானம் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் லேஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிப் பொருள்களையும் இந்தியாவில் சந்தைப்படுத்துகிறது. அதற்குத் தேவைப்படும் உருளைக்கிழங்கை ஒப்பந்த முறையில் விவசாயிகளிடமிருந்து அந்த நிறுவனம் பெறுகிறது. இதற்காக எஃப்.எல்.2027 என்கிற ஒரு புதிய ரக உருளைக்கிழங்கை தனது ஆராய்ச்சியின் மூலம் அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.  
பெப்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்க நிறுவனமான அட்லாண்டிக்கும் ஏ.டி.எல். என்கிற உருளைக்கிழங்கு ரகத்தை சந்தைப்படுத்தியிருக்கிறது. இதற்கு எந்தவிதக் காப்புரிமையும் கிடையாது. இதன் மூலமும், எஃப்.சி.5 என்கிற உருளைக்கிழங்கு ரகத்தின் மூலமும், எஃப்.எல்.2027 ரகத்திற்கு நிகரான தரத்திலுள்ள உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடியும். இவை மட்டுமல்லாமல், லேடி ரொஸட்டா என்கிற டச்சு நாட்டு ரக உருளைக்கிழங்கும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. 
இந்தப் பின்னணியில்தான் இப்போது பெப்சிகோ, குஜராத் மாநிலம் சபர்கந்தாவிலுள்ள நான்கு விவசாயிகள் மீது ரூ.1 கோடி இழப்பும், ஆரவல்லி மாவட்டத்திலுள்ள பல விவசாயிகள் மீது ரூ.20 லட்சம் இழப்பீடும் கோரி ஆமதாபாத் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001-இன் அடிப்படையில், தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்குக்கு 2016-இல் காப்புரிமை பெற்றிருப்பதாகவும், அதனால் அந்த ரக உருளைக்கிழங்கைப் பயிரிட்டதற்கு தனக்கு இழப்பீடு தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறது. 
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் எந்தவிதத்திலும் பெப்சிகோவின் உரிமையை மீறவில்லை என்று வாதிடுகிறார்கள். பாஜகவின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான அமைப்புகள் பெப்சிகோ தனது வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.
பெப்சிகோவைப் பொருத்தவரை 24,000 விவசாயிகள் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கை பயிரிடுகின்றனர். ஆண்டொன்றுக்கு 3 லட்சம் டன் அளவில் உருளைக்கிழங்கை விவசாயிகளிடமிருந்து பெப்சிகோ நிறுவனம் கொள்முதல் செய்கிறது. அவர்களுக்கு தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கு விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையில் விற்பனை செய்கிறது. 
ஒரு கிலோ விதைக்கு 11 முதல் 13 மடங்கு உற்பத்தியை எஃப்.எல்.2027 வழங்கும் என்று கூறப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் விவசாயிகளிடமிருந்து உற்பத்தியான உருளைக்கிழங்கை பெறும் பெப்சிகோ நிறுவனம், 45 எம்.எம்.க்கும் குறைவான அளவுள்ள உருளைக்கிழங்குகளை நிராகரிப்பதுடன், பச்சையாக இருப்பவை, கருப்புப் புள்ளி இருப்பவை ஆகியவை 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது. 
பெப்சிகோவால் நிராகரிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் அல்லது விதைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்படி விதைகளுக்குப் பயன்படுத்துவதை பெப்சிகோ அனுமதிக்க மறுக்கிறது. இதுதான் அடிப்படைப் பிரச்னை. இந்திய விவசாயிகள் இரண்டு சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். இந்திய காப்புரிமைச் சட்டம், பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001 இவற்றின் அடிப்படையில் 3,500-க்கும் அதிகமான பல்வேறு பயிர் வகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், வியாபார ரீதியாக அந்தப் பயிர்களை உற்பத்தி செய்யவும்,  விற்கவும், விநியோகம் செய்யவும், ஏற்றுமதி செய்யவும் விவசாயிகள் உரிமை பெறுகிறார்கள். பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001, விவசாயிக்குத் தன்னுடைய விளைபொருளைச் சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ, பயிரிடவோ, விற்பனை செய்யவோ உரிமையைத் தருகிறது. ஆனால், அவற்றை இலச்சினை உடைய தனிப் பெயரில் சந்தைப்படுத்த முடியாது, அவ்வளவே. இதன் அடிப்படையில் பார்த்தால் குஜராத் விவசாயிகள் எந்த வகையிலான அறிவுசார் சொத்துரிமையையும் மீறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
பெப்சிகோவுக்கு போட்டியாக பாலாஜி வேபர்ஸ் என்கிற நிறுவனமும் விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்கிறது. 65 பில்லியன் டாலர் (ரூ.4,52,140 கோடி) மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம், சாமானிய இந்திய விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்திருப்பது, வேறு நிறுவனங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து விவசாயிகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் முயற்சி. 
பெப்சிகோ நிறுவனம், தங்களது ஒப்பந்தத்தின் கீழ் வருவதாக இருந்தால் வழக்குகளை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று குஜராத் அரசு தெரிவித்திருப்பது தற்காலிக ஆறுதல் மட்டுமே. 
இந்தப் பிரச்னைக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால், இந்திய விவசாயமும், விவசாயிகளும் பெப்சிகோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும், ஜாக்கிரதை!
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தலைவலியல்ல, புற்றுநோய்!
சட்டம் கடமையைச் செய்யட்டும்!
வரவேற்கிறோம், ஆனால்...
வீழ்ச்சியும், கேள்வியும்!
மக்கள்தொகையும் பிரச்னையும்!