வாடிக்கை வேடிக்கைகள்!

ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  வரவர தேர்தல் அறிக்கைகள் என்பவை இலவசங்களை வாரி வழங்கும் அறிவிப்புகளாக மாறிவருகின்றன

ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  வரவர தேர்தல் அறிக்கைகள் என்பவை இலவசங்களை வாரி வழங்கும் அறிவிப்புகளாக மாறிவருகின்றன.  அதிமுகவும், திமுகவும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் அதற்கு விதிவிலக்கல்ல.  பெரும்பாலான பிரச்னைகளில் இரண்டு தேர்தல் அறிக்கைகளும் ஏறத்தாழ ஒரே கருத்தைப் பிரதிபலிக்கின்றன. வேடிக்கை என்னவென்றால்,  கடந்த 40 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், தொடர்ந்து ஒரு சில வாக்குறுதிகளை எழுத்துப் பிசகாமல் அப்படியே வலியுறுத்தி வருகின்றன என்பதுதான்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை,  அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் கருத்துடன் முரண்பட்டு, பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இது குறித்து எதுவும் கூறப்படவில்லை.  ஈழப் படுகொலை குறித்து விசாரணை கோருவதுடன், அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸும், திமுகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது அதிமுக அறிக்கை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதும், அந்தத் திட்டத்துக்கு அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் என்று பெயரிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. வருங்காலத்தில் வாக்களிப்பதற்கு நமது அரசியல் கட்சிகள் மானியம் வழங்காமல் இருந்தால் சரி.  
திமுகவின் தேர்தல் அறிக்கை முன்வைக்கும்  கோரிக்கை, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது.  மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தையும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்வதும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும் என்பதும் திமுக தேர்தல் அறிக்கை அளிக்கும் முக்கியமான வாக்குறுதிகள். அதேபோல, அனைத்துப் பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அது தெரிவிக்கிறது. 
தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர்களாகவும்,  50 லட்சம் கிராமப்புறப் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாகவும் நியமிக்கப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. கூடவே, நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்பதும் அந்தத் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளில் ஒன்று.
அதிமுகவும் சரி, திமுகவும் சரி இரண்டுமே கல்விக்கடன் ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றுவது, நீட் தேர்வுக்கு விதிவிலக்குப் பெறுவது,  புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து கோருவது, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது, மத்திய அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் சேர்க்கப்படுவது,  தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாள்களை அதிகரிப்பது, ராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்துவது, கச்சத்தீவை மீட்பது, தமிழர்கள் அதிகமாக வாழும் அயல் நாடுகளில் தமிழர்களை இந்தியாவின் தூதர்களாக நியமிக்க வலியுறுத்துவது, கேபிள் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தங்களது தேர்தல் அறிக்கைகளில் இணைத்திருக்கின்றன.  
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதிமுகவும், திமுகவும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை எனும்போது, அந்த வாக்குறுதி வெறும் உதட்டளவு ஆதரவுதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிக மதிப்பு செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும்,  வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்துக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகைகள் முழுவதும் வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும் என்றும் திமுக வாக்குறுதியில் கூறப்பட்டிருப்பது நகைப்பை வரவழைக்கிறது.  வார்த்தைகளை நிரப்புவதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளைப் பயன்படுத்துவதை  திமுகவைப் போன்ற அரசியல் வரலாறு உள்ள கட்சிகள் மேற்கொள்ளக் கூடாது.
இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுமே அந்தக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைத்துவிடுவது போலவும், அவர்களது கொள்கைகளும், திட்டங்களும், வாக்குறுதிகளும் நடைமுறைப்படுத்தப்படுவது போலுமான கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தருவது என்று அதிமுகவும், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்துதான் ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று திமுகவும் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.
நதிநீர் இணைப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு, கச்சத்தீவை மீட்பது என்று பல  வாக்குறுதிகள் இரண்டு கட்சிகளின் அறிக்கைகளிலும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இடம்பெறுகின்றன.  
அதிமுகவாவது 1998-99 ஓராண்டு மட்டுமே மத்திய கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றது. ஆனால், 1989, 1996, 1999, 2004, 2009 என்று ஏறத்தாழ 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக இடம்பெற்றது.  திமுகவின் ஆதரவால்தான் அப்போதெல்லாம் மத்தியில் ஆட்சியே அமைந்தது. இருந்தும்கூட, கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து காணப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்  இருப்பதை வாடிக்கையான வேடிக்கை என்று விமர்சிப்பதல்லால்  வேறு என்னென்பது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com