இஸ்ரேலில் - இனி...?

இஸ்ரேலின் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் நடந்தும்கூட, எந்த ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு,


இஸ்ரேலின் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் நடந்தும்கூட, எந்த ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, மறு தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முடிவடைந்த இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸ்ùஸட்டுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியும்கூட, கூட்டணி ஆதரவு இல்லாததால் பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. இப்போது இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடக்க இருக்கிறது. 
120 இடங்களைக் கொண்ட நெஸ்ùஸட்டில், லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய டோரா யூதர் கட்சி ஏழு இடங்களும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸின் தலைமையிலான புளு அண்ட் வொயிட் கட்சிக்கு 35 இடங்களும் கிடைத்தன. இஸ்ரேல் தேர்தல் முறைப்படி, விகிதாச்சார அடிப்படையில்தான் இடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் லிக்குட் கட்சிக்கு 26.27% வாக்குகள் கிடைத்ததால், அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக முடிந்ததே தவிர, ஆட்சி அமைக்கும் அளவிலான பெரும்பான்மை கிட்டவில்லை. 
கடந்த 2015 தேர்தலில் ஐக்கிய டோரா யூதர் கட்சி ஆறு இடங்களையும், ஷாஸ் என்கிற யூத மதவாதக் கட்சி ஏழு இடங்களையும் வென்றன என்றால், இந்த முறை இரண்டு கட்சிகளுமே தலா எட்டு இடங்களைப் பெற்றிருக்கின்றன. ஐக்கிய வலதுசாரி கட்சிகளும், இஸ்ரேல் பெட்னு (இஸ்ரேல் நமது தேசம்) கட்சியும் தலா ஐந்து இடங்களிலும், குலானு கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்துமே பிரதமர் நெதன்யாகுவுக்கு ஆதரவு அளித்திருந்தால், 120 உறுப்பினர்களைக் கொண்ட நெஸ்ùஸட்டில் அவருக்குப் பெரும்பான்மை பலம் கிட்டியிருக்கக் கூடும். 
ஆனால், இஸ்ரேல் பெட்னு கட்சியின் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேல் பெட்னு கட்சித் தலைவர் அவிக்டார் லைபர்மேன் முன்வைத்த நிபந்தனைதான் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 35 இடங்களைக் கைப்பற்றியும்கூட எதிர்க்கட்சியான புளு அண்ட் வொயிட் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை எனும் நிலையில், இனி அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புடன் தேர்தலுக்கு இஸ்ரேல் காத்திருக்கிறது. 
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலின் நெஸ்ùஸட்டில், அந்த நாடு உருவான 1948 முதல் இதுவரை எந்த ஒரு கட்சிக்குமே தனிப்பெரும்பான்மை கிடைத்தது இல்லை. இஸ்ரேலைப் பொருத்தவரை இதுவரை நான்கு முறை பிரதமராகவும், கடந்த மூன்று முறை தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டவராகவும் இருக்கும் நெதன்யாகு, ராஜதந்திர ரீதியாக மிகப் பெரிய சாதனைகளை அந்த நாட்டுக்கு சாதித்துக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. 
இஸ்ரேலின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உதவியுடன் சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டது அவரது மிகப் பெரிய வெற்றி. இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஜருசலேமை ஏற்றுக்கொண்டது இன்னொரு வெற்றி. இவ்வளவெல்லாம் இருந்தும்கூட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.
இஸ்ரேல் என்கிற நாடு உருவானது முதல், அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டாக வேண்டும் என்றும், தேசிய சேவையில் சில வருடங்களாவது பங்களிப்பு நல்கியிருக்க வேண்டும் என்பதும் சட்டம். ஆனால், யூத மத ஆசாரங்களை நிலைநிறுத்தும் மதப் பிரசாரகர்களுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 
தங்களுக்கென்று தனி நாடு உருவானதைத் தொடர்ந்து, யூத மதம் அழிந்துவிடாமல் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், யூதர்களின் மொழியான ஹீப்ரூ வழக்கொழிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றும் முதலாவது பிரதமர் டேவின் பென்குரியன் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. யூத மத சேவைக்கு இஸ்ரேல் முன்னுரிமை அளித்தது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 10%-க்கும் அதிகமாக இருக்கும் மதப் பிரசாரகர்கள் தங்களது முழு நேரத்தையும் மத நூல்களைப் படிப்பதிலும், மதத்தை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பரப்புவதில் மட்டுமே செலவழிக்கிறார்கள்.
இவர்களுக்கு ராணுவ சேவையிலிருந்தும், தேச சேவையிலிருந்தும் அளிக்கப்பட்ட விலக்கை அகற்றுவது என்றும் முடிவெடுத்தது நெதன்யாகு தலைமையிலான கூட்டணி. அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அந்த மசோதாவைக் கைவிட்டால் நெதன்யாகுவுக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள்முற்பட்டன. ஆனால், அவிக்டார் லிபர்னானின் இஸ்ரேல் பெட்னு கட்சி அந்த மசோதாவைநிறைவேற்றுவதை நிபந்தனையாக முன்வைத்தது. இதனால், ஆட்சி அமைக்க முடியாமல் இப்போது இன்னொரு தேர்தலை இஸ்ரேல் எதிர்கொள்கிறது.
நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த விசாரணை அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவுமே நடந்து முடிந்த தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்தல், அநேகமாகப் பிரதமர் நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமையலாம், அமையாமலும் போகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com