என்ன செய்யும் சீனா?

ஹாங்காங் மக்களின் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வரும்

ஹாங்காங் மக்களின் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை வழக்கு விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அறிவித்தவுடன் தொடங்கியது இந்தப் போராட்டம். அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்தும்கூட, போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக இல்லை. 
இந்த நாடு கடத்தல் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை. கடந்த வாரம் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி அடக்க முற்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டக்காரர்களின் புதிய கோரிக்கை. அதனால்தான் வெள்ளிக்கிழமை போராட்டம் காவல்துறை தலைமையகத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டது. 
ஹாங்காங் அரசின் தலைவரான கேரி லாம், மக்களின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். ஹாங்காங் நகரத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை சீனாவின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் மாற்ற முற்பட்டதை இந்த அளவுக்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான்  சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் ஹாங்காங் நிர்வாகம் நிலை தடுமாறுகிறது. 
நாடு கடத்தல் மசோதாவை தலைவர் கேரி லாம் தற்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறாரே தவிர, முற்றிலுமாகக் கைவிட்டு விடவில்லை. அவரது முக்கிய ஆலோசகர்களில் பலரும், அந்த மசோதாவை கைவிடும்படி கேட்டுக்கொண்டும்கூட கேரி லாம் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கு சீனாவின் மறைமுக உத்தரவுதான் காரணம் என்று தெரிகிறது. ஏற்கெனவே சீனாவுடன் ஹாங்காங் இணைவதை விரும்பாத மக்கள் மத்தியில், புதிய சட்டம் அச்சத்தையும், பீதியையும் எழுப்பியிருப்பதில் வியப்பில்லை.
1997-இல் ஹாங்காங்கிலிருந்து  பிரிட்டிஷார் வெளியேறியபோது, அந்தத் தீவை சீனாவிடம் ஒப்படைத்தனர். அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங் சீனாவின் பகுதியாக இருந்தாலும்கூட, சிறப்பு அந்தஸ்துடன் ஒரே நாடு, இரு நிர்வாகம் என்கிற கொள்கையின் அடிப்படையில் செயல்படும் என்கிற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,  2047 வரை ஹாங்காங் சுயாட்சி உரிமையுடன் தனி நாணயம், அதற்கென்று அரசியல் நீதிபரிபாலன முறை ஆகியவற்றுடன் செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 
இந்தப் பின்னணியில்தான் தலைவர் கேரி லாம், புதிய நாடு கடத்தல் மசோதாவை அறிமுகப்படுத்த முற்பட்டார். 
இந்த நாடு கடத்தல் சட்ட மசோதாவின்படி, முன்பு போல ஹாங்காங்கில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள், ஹாங்காங்கில் மட்டுமே விசாரித்து நீதி வழங்கும் முறை கைவிடப்படும். சீனா சந்தேகப்படும் எவரையும் ஹாங்காங் நிர்வாகம் கைது செய்து விசாரணைக்கு சீனாவுக்கு அனுப்ப முடியும். சீனாவில் நீதித் துறை தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வழங்கப்படும்  தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவுக்கு எதிரான விமர்சகர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சீனாவுக்கு எதிரான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏற்கெனவே பதவி விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்; ஆட்சிக்கு எதிரானவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஓர் அரசியல் கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது; வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நாடு கடத்தல் மசோதா, மறைமுகமாக ஹாங்காங்கை சீனாவின் முழுமையான கண்காணிப்புக்கும், அதிகாரத்துக்கும் உள்படுத்தும் முயற்சி என்று போராட்டக்காரர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
2014-இல் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்த முற்பட்டபோது, ஹாங்காங் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். 
எல்லோரும் குடையை ஏந்திக்கொண்டு தெருவில் இறங்கிப் போராடியதால், அந்தப் போராட்டம் அம்பர்லா மூவ்மெண்ட் என்று வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது. 
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு  தொடுக்கப்பட்டது என்பதால், இந்த முறை புதுமையான ஓர் அணுகுமுறையை போராட்டக்காரர்கள் கையாண்டிருக்கிறார்கள். யாரையுமே போராட்டத் தலைவர்கள் என்று அடையாளப்படுத்தாமல் முழுக்க முழுக்க சமூக ஊடகத்தின் உதவியுடன் போராட்டம் நடைபெறுகிறது. 
ஹாங்காங் போராட்டம் சீனாவுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டிருக்கிறது. ஹாங்காங்கிலிருந்து முதலீடுகள் ஏற்கெனவே  வெளியேறத் தொடங்கிவிட்டன. ஹாங்காங்கில் நிலவும் நிலையற்ற தன்மை, பலரையும் சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தங்களது சொத்துகளுடன் குடியேற வைத்திருக்கிறது. 
சீனா பொறுமை காக்குமா அல்லது அடக்குமுறையை ஏவி விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும். போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக இல்லை. சீனா பின்வாங்குமா, இல்லை பழிவாங்குமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com