திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

அகதிகள் அல்ல, ஆபத்து!

By ஆசிரியர்| Published: 11th June 2019 02:50 AM

இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் அண்டை நாடுகளான மாலத்தீவுகளுக்கும், இலங்கைக்கும் தனது முதல் அரசு முறைப் பயணத்தை நரேந்திர மோடி மேற்கொண்டது, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தெற்காசியாவின் அமைதியைக் குலைக்கும் விதத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக ஏனைய அண்டை நாடுகளை இந்தியாவுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிரதமர் இறங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
 மாலத்தீவுகளையும் இலங்கையையும், நேபாளத்தையும் பூடானையும்விட, பயங்கரவாதப் பிரச்னையில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டிய நாடு வங்கதேசம்தான். கடந்த ஆண்டு இறுதியில் அங்கு நடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பிரதமர் ஷேக் ஹசீனா தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அநேகமாக ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலை. முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா, அவரது மகனைப் போலவே கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டாலும்கூட வியப்படையத் தேவையில்லை.
 அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் முழுமையாகக் கொண்டுவந்திருக்கும் நிலையிலும்கூட, பிரதமர் ஷேக் ஹசீனா, பிரச்னைகள் இல்லாமல் ஆட்சி நடத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துத் தீர்வு காணாவிட்டால், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஒரு பிரச்னை பேராபத்தாக மாறிவிடக்கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது. மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழைந்துவிட்டிருக்கும் ரோஹிங்கயா அகதிகள்தான் அந்தப் பிரச்னை.
 அதிகாரப்பூர்வமாக 7 லட்சம் என்று கூறப்பட்டாலும், 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயா அகதிகள் மியான்மர் ராணுவத்தால் விரட்டப்பட்டு, வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து நடத்தப்படும் மியான்மர் ராணுவத்தின் தாக்குதல்களால் வங்கதேச எல்லைக்குள் அவர்கள் அகதிகளாக நுழைந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களை மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச எல்லையில் பல்வேறு முகாம்களில் முள்வேலிகளுக்குள் வங்கதேச அரசு அடைத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் முடியாமல், அவர்களால் ஏற்படும் மிகப் பெரிய நிதிச் சுமையைத் தாங்கவும் முடியாமல் வங்கதேசம் தடுமாறுகிறது.
 கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் இருந்தாலும்கூட, ரோஹிங்கயா அகதிகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததால், அவர்கள் முகாம்களிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். முள்வேலிகள் உடைக்கப்பட்டு முகாம்களிலிருந்து வெளியேறி வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கயா அகதிகள் பரவத் தொடங்கியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் தொடங்கி, ஆயிரக்கணக்காகி இப்போது லட்சக்கணக்கிலான ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் மட்டுமல்லாமல், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளிலும் ஊடுருவத் தொடங்கியிருக்கிறார்கள்.
 முகாம்களிலிருந்து வெளியேறும் ரோஹிங்கயா அகதிகள், வாழ்வாதாரத்துக்காகப் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். போதை மருந்து கடத்தல், பாலியல் தொழிலுக்குப் பெண்களை கடத்திக் கொண்டுபோய் விற்பனை செய்தல் உள்ளிட்டவை மட்டுமல்லாமல், குழந்தைகளைக் கடத்திக் கொண்டுபோய் விற்பதிலும்கூட அவர்கள் ஈடுபடுவதாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் ஒப்புக்கொண்டிருப்பதிலிருந்து, ரோஹிங்கயா அகதிகள் மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருப்பது வெளிப்படுகிறது.
 பல சட்ட விரோத நடவடிக்கைகளில் பர்தா அணிந்த பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்றும், அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சரே கூறுகிறார். வங்கதேசத்திலிலுள்ள ராஜ்ஷாஹி என்கிற ஊரில் பர்தா அணிந்த ரோஹிங்கயா பெண்மணி, போலி கடவுச்சீட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டம் கூட்டமாக ரோஹிங்கயா இடைத் தரகர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் பாலியல் தொழிலுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்களை அனுப்புவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்திய எல்லையையொட்டிய ராஜ்ஷாஹி போன்ற நகரங்களில் காணப்படும் ரோஹிங்கயா அகதிகளின் செயல்பாடுகள், இந்தியாவிலும் நடைபெறுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். வங்கதேசத்துக்குள் நுழையும் ரோஹிங்கயாக்களை, பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள் அவர்களது வறுமையையும், நிலைமையையும் பயன்படுத்தி மூளைச்சலவை செய்கின்றனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத இயக்கங்களின் உலைக்களமாகப் பாகிஸ்தான் மாறியிருப்பதைப்போல, வங்கதேசத்தையும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை இந்திய அரசும், பிரதமரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 ரோஹிங்கயா அகதிகள் வங்கதேச அகதிகளுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் (தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில்கூட) ஊடுருவியிருக்கிறார்கள். ஷேக் ஹசீனாவின் வங்கதேச அரசின் உதவியும், முனைப்பும் இல்லாமல், இந்திய அரசால் அகதிகள் மூலமான பயங்கரவாதத்தை எதிர்கொண்டுவிட முடியாது. அதனால், பிரதமரின் பார்வை, வங்க தேசத்தை நோக்கித் திரும்பியாக வேண்டும்!
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!