திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

வருமுன் காப்போம்!

By ஆசிரியர்| Published: 08th June 2019 01:39 AM


தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாகக் குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. 
கர்நாடக அரசு போதிய அளவில் தண்ணீர் திறந்து விடாததும், அதனால் மேட்டூர் அணையின் மதகுகளைத் திறக்கும் அளவுக்குத் தண்ணீர் இல்லாமல் இருப்பதும்தான் காரணம். போதுமான அளவு மழை இல்லாததால், தங்களுக்கே விவசாயத்துக்கும், குடிநீருக்குமே தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கை விரிக்கிறது. அந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, முழுமையாக மறுத்துவிடவும் முடியாது.
"எல் நினோ' தாக்கத்தால் தொடர்ந்து சில ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம், புயல் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் பல பாதிப்புகளை தமிழகம் எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது. இந்தப் பின்னணியில் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பயிர்க் காப்பீடு மட்டும்தான். 
நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய திட்டங்களில் ஒன்று விவசாயப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பதில் ஐயப்பாடில்லை. அந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருக்கின்றன என்றாலும், விவசாயிகளின் பிரச்னைக்கு அதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
"பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி யோஜனா' எனப்படும் "பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்' என்பது கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மோடி அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் முதல் முடிவாக அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 
இந்தியாவிலுள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு நேரடி மானியமாக 2019-20 நிதியாண்டில் ரூ.87,217.50 கோடி வழங்கப்பட இருக்கிறது. விதை, உரம் வாங்குவது உள்ளிட்ட அடிப்படை விவசாயச் செலவுக்கு உதவுவதற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.
பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டமும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், வேளாண் இடர் பெருமளவில் எதிர்கொள்ளப்படும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை. ஆண்டுதோறும் காரிஃப், ராபி பருவ காலங்களில் விவசாயிகள் பயிரிடுவதற்காகக் கடன் வாங்குவதும், இயற்கை ஏமாற்றுவதால் இழப்பை எதிர்கொள்வதும், அதன் காரணமாகக் கடனாளிகளாவதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், பொறுப்பற்ற விதத்தில் கடன் தள்ளுபடிகளை அறிவித்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முற்படும் போக்குக்கு, அரசின் நிதியுதவித் திட்டமும், பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஓரளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த நிதியாண்டில், 24 லட்சம் தமிழக விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அவர்களில் ஏறத்தாழ 21 லட்சம் விவசாயிகள் ரூ.5,291 கோடி அளவிலான இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும் 35.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டது. 
காப்பீடு பெற்ற 24 லட்சம் விவசாயிகளில் 19.24 லட்சம் விவசாயிகள் வேறு எந்த விவசாயக் கடனும் பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழக அரசின் முனைப்பை நாம் பாராட்ட வேண்டும். விவசாயிகள் மத்தியில், காப்பீடு பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவர்களை இணைப்பதிலும், இழப்பீடு பெற்றுத் தருவதிலும் தமிழக அரசின் வேளாண் துறை பெரும் பங்களிப்பு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 35.30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் எட்டு லட்சம் விவசாயிகள் மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருந்தனர் என்பதையும், அவர்கள் இழப்பீடாக ரூ.650 கோடி மட்டுமே பெற முடிந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது விளங்கும்.
விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் விவசாயப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எல்லாவித விவசாய இடர்களும் இழப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த நேரத்தில் முழுமையான இழப்பீடு வழங்காமல் இருப்பதுதான், இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய குறை. 2016-17 
நிதியாண்டுக்கான இழப்பீடு பெறாத விவசாயிகள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.
2016-17-இல் 93,000 விவசாயிகளும், 2017-18-இல் 86,000 விவசாயிகளும் தங்களது பயிர்களுக்குக் காப்பீடு பெற்றனர். அவர்களில் 60% விவசாயிகள்தான் முழுமையான இழப்பீடு பெற்றிருக்கிறார்கள். இதற்குக் காரணம், காப்பீட்டு நிறுவனங்களா, இல்லை அவர்களிடமிருந்து இழப்பீட்டை பெற்று விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களா என்பது தெரியவில்லை.
இந்த ஆண்டும் தமிழகம் வறட்சியை எதிர்கொள்ளக்கூடும் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பா
விட்டாலும், டெல்டா மாவட்ட சாகுபடிப் பருவத்துக்கான அளவு தண்ணீர் கிடைத்தாலேகூடப் போதும். அதுவும்கூட சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழையை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
அனைத்து விவசாயிகளும் முறையாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவதும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு நிலுவையைப் பெற்றுத் தருவதும் தமிழக அரசின் கடமை.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!