திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

வெற்றியின் சவால்!

By ஆசிரியர்| Published: 06th June 2019 11:53 PM

பொருளாதாரத்தைப் புத்துணர்ச்சி பெறச் செய்வதற்காகவும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் பிரதமரின் தலைமையில் இரண்டு அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார மந்த நிலையை மாற்றுவதில் மோடி அரசு  முனைப்புக் காட்டுவது பாராட்டுக்குரியது.
கடந்த 2018}19}ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி, 5.8% என்கிற அளவில்தான் பொருளாதார வளர்ச்சி இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், மிகக் குறைவான வளர்ச்சி விகிதம் இதுதான். இதே காலாண்டில் சீனா 6.4% வளர்ச்சியை அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவின் வளர்ச்சி, சீனாவைவிடக் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வேலையில்லா நிலைமை 2017}18 நிதியாண்டில் 6.1%}ஆக அதிகரித்திருக்கிறது. இது 45 ஆண்டுகளில் மிகவும் அதிகமான அளவு என்று கூறப்படுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர், தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் வேலைக்காகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த இணையதளத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின் அளவு வெறும் 3.5 லட்சம் மட்டுமே. இந்தப் பின்னணியில்தான், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பின்மையையும் போர்க்கால அடிப்படையில் அணுக  மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. 
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் விவசாயம் மட்டுமல்லாமல், தொழில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று எல்லாத் துறைகளுமே மந்த கதியில் இயங்கி இருக்கின்றன. மூன்றாவது காலாண்டில் 2.8%}ஆக இருந்த விவசாய உற்பத்தி, கடைசி காலாண்டில் 0.1% குறைந்திருக்கிறது. 2017}18}இன் கடைசி காலாண்டில், விவசாயம் 6.5% வளர்ச்சியைக் கண்டது. பருவமழை பொய்த்ததுதான் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்குக் காரணம் என்று  கூறப்படுகிறது.
விவசாயம் மட்டுமல்ல, தொழில் உற்பத்தியும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் காணவில்லை. மூன்றாவது காலாண்டில் 6.4%}ஆக இருந்த வளர்ச்சி, நான்காவது காலாண்டில் 3.1%}ஆகக் குறைந்துவிட்டது. ஆறுதலளிப்பது என்னவென்றால், பொது நிர்வாகம், பாதுகாப்பு, நிதித்துறை, மனை வணிகம், சேவைத் துறை உள்ளிட்டவை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. அதற்குக் காரணம், கணிசமான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்ததுதான்.
ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. வரி வசூல் பாராட்டும்படியாக  இல்லை. மத்திய ஜி.எஸ்.டி.யின் வசூல் 2018}19}க்கு ரூ.6.03 லட்சம் கோடி என்று முதலில் மதிப்பிடப்பட்டது. பிறகு, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அதுவே ரூ.5.03 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டது. கணக்குத் தணிக்கை அதிகாரிகளால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி, வரி வசூல் ரூ.4.57 லட்சம் கோடியைவிடக் குறைவு என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2019}20  நிதியாண்டில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் 33.5% அதிகரித்தாக வேண்டும். அப்போதுதான், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கான ரூ.6.1 லட்சம் கோடியை எட்ட முடியும். இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல், மே}இல் வரி வசூல் சற்று அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட, இலக்கை  எட்டுவது சாத்தியம் என்று தோன்றவில்லை.
நடப்பு நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. வசூல் ரூ.13.7 லட்சம் கோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில ஜி.எஸ்.டி-க்கள் இரண்டும் ரூ.6.1 லட்சம் கோடி வசூல் வழங்கும் என்பதன் அடிப்படையில் போடப்பட்டிருக்கும் கணக்கு அது. அதாவது, மத்திய ஜி.எஸ்.டி மாதந்தோறும் ரூ.50, 833 கோடி வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான மதிப்பீடு. எதிர்பார்த்த அளவில் இல்லாமல், கடந்த இரண்டு மாதங்களாக வசூலாகும் ஜி.எஸ்.டி}இன் அளவு சராசரியாக ரூ.41, 721 கோடி மட்டுமே. வரி வசூல் மட்டுமே கணக்கிடப்படுகிறதே தவிர, திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை கழிக்கப்படவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜி.எஸ்.டி. வசூல் மட்டுமல்ல, நேரடி வரி வசூலும் புதிய அரசுக்குப் பாதகமாகவே அமைந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட் இலக்கான ரூ.5.29 லட்சம் கோடிக்குப் பதிலாக, 
வசூலான வருமான வரியின் அளவு ரூ.4.61 லட்சம் கோடிதான். நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கான ரூ.6.1 லட்சம் கோடியை எட்ட வேண்டுமானால், வருமான வரி வசூல் 34.8% அதிகரிக்க வேண்டும். அந்த இலக்கை எட்டுவது அசாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு பெற்றிருக்கும் தேர்தல் வெற்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவில் பலமான, நிலையான 
அரசுக்கு வழிகோலியிருக்கிறது. இந்த அரசு பலமாகவும், நிலையாகவும் தொடர வேண்டுமானால், பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் அரசின் முழுமையான கவனத்தைப் பெற்றாக வேண்டும். பிரதமர் அதை உணர்ந்திருக்கிறார் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறது பிரதமர் நரேந்திர மோடி அரசு. அதுதான் வெற்றிக்குக் கிடைத்திருக்கும் பரிசு!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!