திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

தொடங்கியது கிரிக்கெட் ஜுரம்!

By ஆசிரியர்| Published: 03rd June 2019 03:00 AM

உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கிவிட்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் ஜுரத்தில் உலகமே ஆழ்ந்திருக்கிறது. பயிற்சி ஆட்டங்களின் வெற்றி, தோல்விகள் மிகைப்படுத்தப்படுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற போட்டியில் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
 1975-இல் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இதுவரை 11 போட்டிகள் முடிந்து இப்போது 12-ஆவது போட்டியை எதிர்கொள்கிறது. ஐந்து நாள் டெஸ்ட் ஆட்டங்களையும், 20 ஓவர் டி-20 ஆட்டத்தையும்விட, உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவதுதான், கிரிக்கெட் அணிகளின் பெருமையாகவும் பெருமிதமாகவும் கருதப்படுகிறது.
 இன்றைய நிலையில், ஒருநாள் ஆட்டங்களில் இங்கிலாந்து முன்னிலையிலும் அடுத்த இடத்தில் மிக சக்திவாய்ந்த அணியாக இந்தியாவும் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டபோது, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கைதான் ஓங்கியிருந்தது. இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இப்போது அப்படி எந்தவொரு நாட்டு அணிக்கும் அதுபோன்ற தனிப் பெருமை இல்லை.
 உலகக் கோப்பை களத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படும் அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை. இவற்றில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இந்தியா இரண்டு முறையும் உலகக் கோப்பையை வென்றிருக்கின்றன. இங்கிலாந்து இதுவரை வென்றதில்லை. முன்னாள் சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகளும், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் வெற்றிக்கான வாய்ப்புடைய நியூஸிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன.
 கடந்த 2015 முதல் உலகக் கோப்பைக்கான போட்டியில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போதைய முறையில் எந்தவோர் அணியும் தொடர்ந்து நன்றாக விளையாடினால் மட்டுமே இறுதியில் கோப்பையை வெல்ல முடியும். சாதாரண போட்டிகளில் அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் எந்தவோர் அணியும் வெற்றி பெற்றுவிடலாம். இப்போதைய உலகக் கோப்பைக்கான முறையில் அதிர்ஷ்டம் மட்டுமே போதாது.
 போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வோர் அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடன் விளையாடியாக வேண்டும். அவற்றில், அந்த ஆட்டங்களிலிருந்து தேர்வு பெறும் நான்கு சிறந்த அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும். ஒருநாள் மோசமாக ஆடினால் அடுத்த ஆட்டத்தில் அதை ஈடுகட்ட முடியும். அதேபோல அதிர்ஷ்டவசமான வெற்றியின் மூலம் எந்தவோர் அணியும் தேர்வு பெற்றுவிட முடியாது. அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் அணிகள் போட்டியின் தொடக்கம் முதல் தொடர்ந்து நன்றாக விளையாடினால் மட்டுமே, உலகக் கோப்பையை நெருங்கும் வாய்ப்பைப் பெற முடியும்.
 இப்படிப்பட்ட முறையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிச் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு 38 நாள்கள் ஆகும். இந்த 38 நாள்களில் 45 ஆட்டங்கள் நடத்தப்பட்டிருக்கும். அதனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். வேறு எந்த வேலையையும் செய்ய விடாமல் அவர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கட்டி வைக்கப் போகிறது.
 அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களைப் பொருத்தவரை, இதைச் சாதகமாகவும் பாதகமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இரண்டு போட்டிகளுக்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பது அவர்களுக்கு ஓய்வெடுப்பதற்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கும் உதவக்கூடும். அதே நேரத்தில், வீரர்கள் தங்களுடைய விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், வேகத்தையும் இழந்துவிடவும் வழிகோலலாம்.
 இங்கிலாந்தில் போட்டி நடைபெறும் கால இடைவெளியில் வெயில் காலம் அதிகரிக்கத் தொடங்கும். அந்த ஒன்றரை மாத கால மாற்றத்தை அனுசரிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்த அணியால்தான் தொடர்ந்து வெற்றிகரமாக விளையாட்டில் ஈடுபட முடியும்.
 2011-இல் மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கேப்டன் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றபோது, இப்போதைய கேப்டன் விராட் கோலி புதுமுக ஆட்டக்காரராக இருந்தார். இப்போது இந்திய அணியின் கேப்டன் என்பது மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். இந்தியாவின் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பைச் சுமந்து கொண்டிருக்கும் விராட் கோலி, இந்த முறை எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
 இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையும், வேனல் காலமும் இந்திய அணிக்கு எந்த அளவுக்குச் சாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற சிறந்த ஆரம்ப பந்து வீச்சாளர்கள் உள்பட திறமையான ஆட்டக்காரர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. 1983-இல் கபில் தேவ் தலைமையில் இதே இங்கிலாந்தில் மேற்கு இந்தியத் தீவுகளைத் தோற்கடித்து இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நினைவுபடுத்துவதுபோல, இந்த முறை விராட் கோலி தலைமையிலான அணியும் கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்காக (ஜூலை 14) உலகமே காத்திருக்கும் வேளையில், மூன்றாவது உலகக் கோப்பை வெற்றிக்காக இந்தியா காத்திருக்கிறது!
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!