திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்!

By ஆசிரியர்| Published: 01st June 2019 01:33 AM


இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. பழைமையும் - புதுமையும், அனுபவமும் - இளமையும், திறமையும் - கட்சி விசுவாசமும் கலந்த வித்தியாசமான அமைச்சரவையாகப் பிரதமர் மோடியின் இரண்டாவது அமைச்சரவை காட்சியளிக்கிறது. 
24 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் 9 இணையமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் உள்ளிட்ட பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையின் சராசரி வயது 60-க்குக் கீழே என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 27 புது முகங்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்பு வகித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் புதிய அமைச்சரவையில் இல்லை. அவர்கள் மட்டுமல்ல, சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, உமா பாரதி, மகேஷ் சர்மா, ராதா மோகன் சிங், ராஜ்யவர்த்தன் ரத்தோர், ஜெயந்த் சின்ஹா, ஜுவால் ஓராம், ராம்பிரசாத் யாதவ் ஆகியோரும் இடம்பெறவில்லை. 
உடல்நலக் குறைவால் அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டார்கள் என்றால், சிவசேனையின் வற்புறுத்தலால் சுரேஷ் பிரபுவுக்கு இடமளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. நரேந்திர மோடியின் கடுமையான விமர்சகரான வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகக் கருதப்படுபவர். அவர் அமைச்சரவையில் இடம்பெறாதது வியப்பளிக்கிறது.
கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும், 1977 ஜனதா ஆட்சிக் காலத்தைத் தவிர, ஏனைய எல்லா அமைச்சரவைகளிலும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இந்த முறை மேனகா காந்தி அமைச்சரவையில் இடம் பெறாததன் மூலம், முதல் முறையாக நேரு குடும்ப அங்கத்தினர் இல்லாத அமைச்சரவை நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேகனா காந்திக்குப் பதிலாக, வருண் காந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்கிற பரவலான எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. 
1947-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதலாவது அமைச்சரவையில் நிதியமைச்சராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே. ஷண்முகம் செட்டி இடம்பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்று முதல் இன்று வரை பெரும்பாலான அமைச்சரவைகளில் இந்தியாவின் நிதித் துறையைக் கையாளும் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்தவரையும்விட, அதிகமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்தப் பெருமை தொடர்கிறது. 
எதிர்பார்த்தது போலவே பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், உள்துறைப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவை அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றிக் காட்டியிருக்கும் அமித் ஷா, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்போதே அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பதை ஊகிக்க முடிந்தது. இரண்டு முறை பாஜக தலைவராகப் பதவி வகித்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் மரபுப்படி அவர் கட்சித் தலைவர் தொடர முடியாது என்பதும்கூட அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணம்.
மகத்தான மக்கள் அங்கீகாரத்துடன் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவை சில தெளிவான செய்திகளை வெளிப்படுத்துகிறது. இதுவரை கட்சித் தலைமையில் இருந்த அமித் ஷா, ஆட்சிப் பொறுப்புக்கு இடமாற்றமாகி இருப்பதும், அவருக்கு உள்துறை அமைச்சகப் பொறுப்பை வழங்கியிருப்பதும் அரசின் அணுகுமுறை மாற்றத்துக்கு வழிகோலக்கூடும். பாஜக தலைவராக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட, ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையேயான இடைவெளி குறைய நிறையவே வாய்ப்பிருக்கிறது. இதுவரை பின்னணியில் இருந்து செயல்பட்ட அமித் ஷா, இனிமேல் உள்துறை அமைச்சராக நேரடியாகவே அதிகாரத்தை கையாளப் போகிறார்.
யாருமே எதிர்பாராத விதத்தில்  முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெயசங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியத் தூதராகவும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சர்வதேச ஆமோதிப்பை பெற்றுத் தந்தவருமான ஜெய்சங்கர் வெளியுறவுத்  துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் உலக வல்லரசு நாடுகளுடனான உறவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்க 
இந்திய அரசு விரும்புகிறது என்பது வெளிப்படுகிறது. 
தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த முறையும் மத்திய அமைச்சரவை ஏமாற்றமளித்திருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இடம்பெறாமல் இருப்பது, 2014-இல் நரேந்திர மோடி பிரதமரானது முதல்தான். 
அந்தக் குறை தொடர்கிறது. இந்தக் குறை தொடரும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என்கிற உண்மையைப் பிரதமருக்கு யார் உணர்த்துவது?
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்
ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் குறித்த தலையங்கம்
பாலையாக மாறும் பூமி!
விரயமல்ல, வளர்ச்சிக்கான முதலீடு!
காஷ்மீரின் மறுபக்கம்!