தலையங்கம்

கார்கில் உணர்த்திய பாடம்!

29th Jul 2019 04:03 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடுத்த கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலை இந்தியப் படைகள் வெற்றிகரமாக எதிர்கொண்டு பாகிஸ்தானுக்குப் பாடம்  புகட்டியது என்பது மட்டுமல்லாமல், ராஜாங்க ரீதியாக இந்தியாவின் மிகப் பெரிய சாதனை கார்கில் போரின் போதான நமது அணுகுமுறை. பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல, இந்தியா குறித்த சர்வதேச நாடுகளின் பார்வையைக் கார்கில் மாற்றியமைத்தது என்பது உண்மை.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும், இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகமாகத் தொடுத்த கார்கில்  போர் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதான முயற்சியில் ஈடுபடுவது ஆரம்பம் முதலே பாகிஸ்தான் ராணுவத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா சற்றும் எதிர்பாராமல் எதிர்கொண்ட அந்த மறைமுகப் போருக்குப் பின்னால் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப் பெரிய திட்டமிடல் இருந்தது என்பதுதான் உண்மை.  

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பும், அவரது தளபதிகளான லெப்டினன்ட் ஜெனரல் அஜீஸ் கான், லெப்டினன்ட் ஜெனரல் மஹமுது, லெப்டினன்ட் ஜாவேத் ஹஸன் ஆகியோர் அடங்கிய "கார்கில் குழு' என்று அறியப்படும் நால்வர் அணிதான் ஊடுருவல் முயற்சிக்குக் காரணம்.  

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அந்த நால்வருமே பணியாற்றியிருந்ததால், எல்லையைச் சுற்றிய பகுதிகள் குறித்த முழுமையான புரிதல் அவர்களுக்கு இருந்தது. லடாக் பகுதியுடன் ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் துண்டித்துவிட்டால் இந்தியத் துருப்புகளை வட எல்லைப் பகுதிக்கு இந்தியா ராணுவத்தால் நகர்த்த முடியாமல் தடுக்கப்படும் என்று அவர்கள் திட்டமிட்டனர். 

ADVERTISEMENT

கார்கில் பகுதியிலுள்ள உயரமான பனிச் சிகரங்களில் இந்திய பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. அங்கே இருக்கும் 15 அல்லது 20 சிகரங்களை ஊடுருவல் மூலம் பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிவிட்டால், இந்தியாவால் அவர்களை அங்கிருந்து அகற்ற முடியாது. அந்தச் சூழலை சற்றும் எதிர்பார்க்காத இந்தியா பதற்றத்தில் சர்வதேச நாடுகளை உதவிக்கு அழைக்கும். தெற்காசியாவில் அணுஆயுதப் போர் மூண்டுவிடக் கூடாது என்கிற அச்சத்தில் உலக நாடுகள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை வற்புறுத்தும். வேறு வழியில்லாமல் காஷ்மீர் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும், சியாச்சின் பனிச் சிகரங்களிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு ஏற்படும் என்பதுதான் பாகிஸ்தான் கார்கில் குழுவினரின் ரகசியத் திட்டம்.

கார்கில் திட்டம் குறித்து பல மாதங்களுக்குப் பிறகுதான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கே கூறப்பட்டது. காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் என்று வரலாற்றில்  இடம்பெறுவீர்கள் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பர்வேஸ் முஷாரப்பும், தளபதி அஜீஸ் கானும் ஆசை காட்டினார்கள். கார்கில் திட்டத்துக்குப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் ஒப்புதல் அளித்தார். 

கார்கில் குழு திட்டமிட்டபடி 15, 20 பனிச் சிகரங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆர்வக் கோளாறில் பாகிஸ்தான் ராணுவத்தின் இளம் வீரர்கள் ஏறத்தாழ 120 சிகரங்களைக் கைப்பற்றி ஊடுருவினர். இதுதான் பாகிஸ்தானின் கார்கில் திட்டம் தோல்வியைத் தழுவுவதற்கு மிக முக்கியமான காரணமாக மாறியது. 

என்ன விலை கொடுத்தாலும் இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தான் வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தீர்மானமாக இருந்தார். இந்திய ராணுவத்துக்கு போஃபர்ஸ் பீரங்கிகள் மிகப் பெரிய அளவில் கைகொடுத்தன. பனிச் சிகரங்களில் முகாமிட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு உணவும் ஆயுதமும் அனுப்பப்படுவதை இந்திய விமானப் படை முடக்கியது. ஆரம்பத்தில் வீரர்களை இழந்த நமது ராணுவம், மிகப் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானிய ராணுவத்துக்கு எதிர்பாராத அளவில் அழிவை ஏற்படுத்தியது. அப்போதுதான் கார்கில் திட்டம் மிகப் பெரிய தவறு என்பதை பாகிஸ்தான் ராணுவம் உணரத் தொடங்கியது.

ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், ராஜாங்க ரீதியாகவும் இந்தியா மிகப் பெரிய வெற்றியை சாதித்தது. ஊடுருவியவர்கள் முஜாஹிதீன்கள் அல்ல, பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் என்பதை இந்தியா நிரூபித்தபோது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், வெளியுறவுத் துறைச் செயலர் ரகுநாத் ஆகியோரின் உதவியுடன் கார்கில் ஊடுருவலை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எதிர்கொண்ட துணிவும் சாதுர்யமும் வரலாற்றில் இடம்பெற வேண்டியவை.

 கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியாவை ஊடுருவல் மூலமும், நேரடிப் போர் மூலமும் அடிபணிய வைக்க முடியாது என்பதைப் பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்த பாகிஸ்தான், இன்னும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் மட்டும்தானா, கார்கில் போரும் அதற்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்று வரும் ஊடுருவல்களும், தாக்குதல்களும் இந்தியாவை விழிப்படையச் செய்திருக்கிறதா என்றால், நாமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் கூறத்  தோன்றுகிறது. 

இன்னும்கூட நாம் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதிலும், போர் விமானங்களை வாங்குவதிலும் விவாதமும் சர்ச்சையும் நடத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, சாதுர்யமாக நமது முப்படைகளையும் வலிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT