நொறுங்கும் நகரங்கள்!

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தில்லியின் குதுப்மினாரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுரமும் கோடை வசந்தம் மழை பல கண்டும், அதிகம் உணரப்படாத எத்தனையோ நிலநடுக்கங்களை எதிர்கொண்டும்கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயர்ந்து நிற்கின்றன. ஆனால், நவீன கட்டடக்கலை வல்லுநர்களால் பொறியியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டப்படும் கட்டடங்கள் நொறுங்கி விழுகின்றன. 

உலகின் பல்வேறு நாடுகளில் மேம்பாலங்களும், கட்டடங்களும் இடிந்து விழுந்திருக்கின்றன என்றாலும், இந்தியா எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்துமே கவனக்குறைவாலும், போதிய கண்காணிப்பு இல்லாததாலும், ஊழலின் காரணமாகவும் நிகழ்கின்றன என்பதால் இவற்றை விபத்து என்று ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. 

மும்பை மாநகரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழைய கட்டடம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். தென் மும்பையில் உள்ள டோங்ரி என்கிற அதிக மக்கள்தொகையுள்ள பகுதியில் இருந்த அந்தக் கட்டடத்தின் இடிந்து விழுந்த பகுதி, முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்ததாக இப்போது மும்பை மாநகராட்சி தெரிவிக்கிறது. அனுமதியில்லாமல் அந்தப் பகுதி கட்டப்பட்டிருந்ததை இத்தனை நாளும் தெரியாமலோ, தெரிந்தும் அகற்றாமலோ இருந்தது யாருடைய குற்றம் என்று மாநகராட்சியை யாரும் கேள்வி கேட்பதில்லை.

நான்கடுக்கு கட்டடம் காலை 11.40 மணிக்கு இடிந்து விழுந்திருக்கிறது. இது குறித்துத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது 12.10 மணிக்கு. நவீன தகவல் தொடர்பு யுகத்தில் விபத்து குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏறத்தாழ அரை மணி நேரம் தேவைப்படுகிறது என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது?

கீழ் மத்திய தரப் பிரிவினர் வாழ்ந்துவந்த கட்டடம் அது. ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் தங்கி இருந்தன. ஏறத்தாழ 15 குடும்பங்கள் வாழ்ந்து வந்த அந்தக் கட்டடம், குடியிருப்பதற்கு ஏற்றதல்ல என்றும், இடிக்கப்பட வேண்டியது என்றும் ஓராண்டுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும், யாரும் அங்கிருந்து அகற்றப்படவில்லை.

"கேசர்பாய்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், 2018-இல் காலியாக விடப்பட்டு விட்டதாக மாநகராட்சி ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கட்டடம் அப்படியே இருந்திருக்கிறது. அதில் குடியிருப்போர் யாரும் காலி செய்யாமல் இருந்திருக்கிறார்கள். அந்தக் கட்டடத்தில் குடியிருப்போருக்கு வேறு இடம் வழங்கப்படாததால் அவர்களைக் காலி செய்ய வற்புறுத்த முடியவில்லை என்பது சட்டப்பேரவை உறுப்பினர் அமின் படேலின் வாதம். 

அனுமதியில்லாத கட்டடங்களில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு எல்லாம் மாற்று இடவசதி செய்து கொடுத்துத்தான் பழைய கட்டடங்களைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எந்தவோர் அரசாங்கத்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது. 

"கேசர்பாய்' என்கிற கட்டடம், ஓர் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு அங்கே புதிதாகக் கட்டடம் எழுப்ப அறக்கட்டளை முயற்சித்தபோது, குடியிருந்தவர்கள் மிக அதிகமான இழப்பீட்டுத் தொகை கேட்டு வற்புறுத்தியதன் விளைவுதான் இப்போது கட்டடமும் இடிந்து, 13-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 

இப்படி பழைய கட்டடங்கள் இடிந்து விழுவது மும்பைக்குப் புதிதொன்றுமல்ல. 2013-இல் மும்புரா பகுதியில் லக்கி காம்பவுண்ட் கட்டடம் இடிந்து விழுந்ததில் 76 பேர் மரணமடைந்தனர், 64 பேர் காயமடைந்தனர். அதே ஆண்டில் ஜூன் மாதம் மாஹிமிலுள்ள அல்டாஸ் மேன்ஷன் இடிந்து விழுந்ததில் 10  பேர் உயிரிழந்தனர். 2017-இல் ஏற்பட்ட கட்டட விபத்தில் 30 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆண்டில் காட்கோபரில் இதேபோல  பழைய நான்கு மாடி கட்டடம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ள பழைய கட்டடங்கள் என்று 500-க்கும் மேற்பட்ட   கட்டடங்களை பிருஹான் மும்பை மாநகராட்சி  அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் பருவமழை அதிகரிக்கும்போது கட்டடச் சுவர்கள் இடிந்து விழுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் மும்பையில் வழக்கமாகிவிட்டிருக்கிறது. 

கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவின் நகர்ப்புறங்களில் கட்டட விபத்துகளும், மேம்பால விபத்துகளும்,  தீ விபத்துகளும் சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரப்படி, 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான இடைவெளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததன் மூலம் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000. 

இந்த விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நகராட்சி அமைப்புகளும், வீட்டு வசதி வாரியங்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் (தெரியாமல்) தவிக்கின்றன. பழைய கட்டடங்களின் வாடகையை அதிகரிக்க வீட்டு வாடகைச் சட்டம் அனுமதிக்காமல் இருப்பதும்கூட ஒரு காரணம். கணிசமான வாடகை வருவாய் இல்லாததால் போதுமான பராமரிப்பை கட்டட உரிமையாளர்கள் மேற்கொள்ளாமல் இருப்பதால் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாகத் திகழ்கின்றன.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகையில் சரிபாதி பேர் நகரங்களில் வாழப் போகிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் புகலிடமாக மாற இருக்கின்றன. பாதுகாப்பற்ற நிலைமை தொடருமானால்... நினைக்கவே நடுங்குகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com