அரசியலாக்கப்படும் ஐயப்பாடு!

அவசியமே இல்லாமல்

அவசியமே இல்லாமல் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக அமைந்திருப்பது லண்டனில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம். அந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் கலந்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

லண்டனில் இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. அதேபோல, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்கம் என்பது பல்வேறு நாடுகளில் கிளைகளுடன் கூடிய பெரிய அமைப்பு. இதற்கென்று தனியாகக் கட்டடம், அலுவலகம், தங்கும் விடுதி உள்ளிட்ட எல்லா வசதிகளும் உண்டு. கடந்த திங்கள்கிழமை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இணைந்து இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் லண்டனில் ஒரு நிருபர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிருபர் கூட்டத்தில், தன்னை ஒரு "சைபர்' தொழில்நுட்பத் திறனாளி என்று வர்ணித்துக் கொள்ளும் சையத் ஷுஜா என்பவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதுதான் அந்த நிருபர் கூட்டத்தில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டு. அமெரிக்காவில் வாழும் இந்தியரான சையத் ஷுஜா, 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் மூலம்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்திருப்பதுதான் மிகப்பெரிய விமர்சனத்துக்கு  வழிகோலியிருக்கிறது. 

சாதாரணமாக இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்தும் பத்திரிகையாளர் கூட்டங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த கூட்டம் மட்டும் ஏன் இலவசமாக நடத்தப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. கபில் சிபல் அந்த நிகழ்ச்சியில் நேரிடையாகக் கலந்து கொண்டிருப்பதிலிருந்து, இந்த நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியால் மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமோ என்கிற நியாயமான ஐயப்பாடும் எழுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்கள் ஆரம்பம் முதலே பலமுறை எழுப்பப்பட்டு, அத்தகைய ஐயப்பாடுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாடுதழுவிய அளவில் 2004 மக்களவைத் தேர்தலில்தான் முதன்முதலாக அனைத்துத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும், வாஜ்பாய் தலைமையிலான அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யக்கூடும் என்கிற சந்தேகம் காங்கிரஸால் எழுப்பப்பட்டது.

தேர்தலில் வாஜ்பாய் அரசு தோற்கடிக்கப்பட்டவுடன், காங்கிரஸூம் தனது குற்றச்சாட்டை மறந்துவிட்டது. 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைத் தழுவியபோதும் இதேபோல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாஜக-வால் கேள்வி எழுப்பப்பட்டது. 2014 தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெற்றபோது, குற்றச்சாட்டும் அர்த்தமற்றதாகிவிட்டது...

2014-இல் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தன. தேர்தல் ஆணையம் பலமுறை அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், முறைகேடு செய்து காட்டுவதற்கும், தங்களது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கும் நேரிடையாகவே வாய்ப்பளித்தது. இப்போது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் சையத் ஷுஜா உள்பட யாருமே நேரில் சென்று அந்த இயந்திரங்களில் முறைகேடு செய்து காட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.

தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளான ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளேகூட இன்னும் வாக்குச்சீட்டு முறையைத்தான் பின்பற்றுகின்றன என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நிராகரிப்பதற்கான வலுவான காரணமாகத் தெரியவில்லை. மக்கள்தொகை குறைந்த, கல்வி அறிவும், வாழ்க்கைத்தரமும் அதிகமாக உள்ள அந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த பிறகு கள்ள வாக்குப்பதிவு செய்வது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, குண்டர்களின் உதவியுடன் மொத்தமாக வாக்குப்பதிவையே நடத்துவது போன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாகக் குறைந்து விட்டிருக்கின்றன. செல்லாத வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. வாக்குப்பதிவு விகிதமும் அதிகரித்திருக்கிறது.

இதற்கு முன்னால் குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்களின் போதும், சமீபத்தில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின்போதும்கூட காங்கிரஸூம் எதிர்க்கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பின. அந்தத் தேர்தல்களில், பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கு சரியாகப் பதிவாகி இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வழிகோலப்பட்டது. ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அந்தத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை.

இந்தியாவிலுள்ள அமைப்புகளில் தேர்தல் ஆணையத்துக்கு என்று தனி மரியாதையும், கெளரவமும், நம்பகத்தன்மையும் இருக்கிறது. அதைக் குலைப்பது என்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் கருதப்பட வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளில் காங்கிரஸ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்காது என்று நம்புவோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த ஐயப்பாட்டை எழுப்புவது தவறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com