கொலீஜியம் சர்ச்சை!

உலகிலேயே நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்ளும் விசித்திரமான நடைமுறையைப் பின்பற்றும் ஒரே ஜனநாயக நாடு


உலகிலேயே நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்ளும் விசித்திரமான நடைமுறையைப் பின்பற்றும் ஒரே ஜனநாயக நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் முறை இப்போது மீண்டும் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகிய இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றிருப்பதுதான் அதற்குக் காரணம்.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோகையும், தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்குப் பரிந்துரைத்திருந்தது. இப்போது அந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியையும், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவையும் நீதிபதிகளாக நியமித்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
கடந்த 2018 டிசம்பர் 12-ஆம் தேதி கொலீஜியம் எடுத்த முடிவை சில புதிய தகவல்களின், தரவுகளின் அடிப்படையில் மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும், கடந்த ஜனவரி 5, 6-ஆம் தேதிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட கொலீஜியத்தின் கலந்தாலோசனையின் அடிப்படையில் பழைய முடிவு மாற்றப்பட்டதாகவும் ஜனவரி 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முந்தைய கொலீஜியம் எடுத்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இப்படி முடிவுகள் எடுக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. 
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது நீதிபதி மகேஸ்வரியின் பணி மூப்பு நிராகரிக்கப்பட்டு, அவரைவிடக் குறைந்த அனுபவம் உள்ள நீதிபதி அஜய் ரஸ்தோகி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரே நாளில் அவர்கள் இருவரும் நீதிபதிகளாகப் பதவி ஏற்றதால் முதலில் பதவி ஏற்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி முன்னுரிமை பெற்றார். அதனால், அந்த நியமனம் சர்ச்சையாகவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குப் பொருத்தமானவரல்ல என்று கொலீஜியத்தால் தீர்மானிக்கப்பட்ட நீதிபதி மகேஸ்வரி இப்போது அந்தப் பதவிக்குத் தகுதியானவராகக் கருதப்பட்டிருப்பதுதான் விவாதப் பொருளாகி இருக்கிறது.
நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் நியமனமும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு முன்னால், அரசாலும், கொலீஜியத்தாலும் பணி மூப்பு நிராகரிக்கப்பட்டு பலரும் பதவி உயர்வும் உச்சநீதிமன்ற நியமனமும் பெற்றிருக்கிறார்கள். தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சீவ் கன்னாவை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தும்போது, இந்தியாவிலுள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 32 பேர் பின்தள்ளப்படுவது முறையா என்பதுதான் கேள்வி. 
கடந்த 20 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகாமல் நேரிடையாக உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டவர் சிலர் உள்ளனர். 2017-இல் நீதிபதிகள் அப்துல் நஸீரும், சந்தான கெளடும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகாமலேயே அவர்களைவிட பதவி மூப்பு அடிப்படையில் இருந்த 20 நீதிபதிகளையும் பின்தள்ளி கொலீஜியத்தால் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் ஓய்வு பெற்றார் என்கிற காரணத்தால், அவர் உறுப்பினராக இருந்த கொலீஜியம் எடுத்த முடிவில் மாற்றம் ஏற்படுத்துவது சரிதானா என்கிற கேள்வி எழுகிறது. அடுத்ததாக, முந்தைய கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட, திறமைசாலிகள் என்றும், நேர்மையானவர்கள் என்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்திரஜோக், ராஜேந்திர மேனன் ஆகியோரின் உச்சநீதிமன்றத்துக்கான பதவி உயர்வு திரும்பப் பெறப்பட்டது எந்தவிதத்தில் நியாயமான முடிவு? எதன் அடிப்படையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்? தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னாவைவிட பணி மூப்பு அனுபவமுள்ள நீதிபதிகள் மூவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்களே, அதற்கு கொலீஜியம் என்ன விளக்கம் தரப்போகிறது? 
கொலீஜியம் நீதிபதிகள் நியமன முறை என்பது 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட வழிமுறை. இதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடையாது. அரசியல் சாசனத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை அரசு நியமனம் செய்யும் என்று சட்டப் பிரிவு 124, 217-இல் கூறப்பட்டிருப்பதை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் என்று விளக்கம் கொடுத்து கொலீஜியம் முறை நீதித்துறையால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இதை அகற்றி, தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டத்தை நாடாளுமன்றம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியும்கூட, அந்த 99-ஆவது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பணி மூப்பு மீறப்படலாம் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோரின் நியமனங்களின் மூலம் உச்சநீதிமன்றகொலீஜியம் தெரிவித்திருக்கிறது. ஒரு கேள்வி - இதே அடிப்படையில் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியின் நியமனத்திலும் மத்திய அரசு செயல்படுமானால், அதை கொலீஜியமும், நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளுமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com