அரசியல்... அரசியல்... அரசியல்...

இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசமைப்புச் சட்டத்துடன் குடியரசாகி 69 ஆண்டுகள் ஆகிவிட்டன.


இந்தியா விடுதலை பெற்று 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசமைப்புச் சட்டத்துடன் குடியரசாகி 69 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை 16 பொதுத் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். 
12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இன்னும்கூட நாம் பல்வேறு பிரிவினரையும் திருப்திப்படுத்த இடஒதுக்கீடு என்கிற ஊன்றுகோலை வழங்கி வருகிறோமே தவிர, எந்த ஒரு பிரிவினரும் தாங்கள் வளர்ந்து விட்டதாகக் கருதாத நிலைமை தொடர்கிறது. 
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்து வாக்களித்திருந்தால் மசோதா நிறைவேறி இருக்காது. ஆனால், எந்த ஒரு கட்சியும் எதிர்த்து வாக்களித்து அரசியல் ரீதியாக வாக்குகளை இழக்கத் தயாராக இல்லை. திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
காங்கிரஸ் தனது 2014 தேர்தல் வாக்குறுதியில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த மசோதாவை எதிர்க்கும் தார்மீகத் துணிவு அந்தக் கட்சிக்கு இருக்கவில்லை. காங்கிரஸின் நம்பிக்கை எல்லாம் இந்த மசோதா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறாது என்பதுதான். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமல்லாமல், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்த்தாலும் மாநிலங்களவை வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்ததுதான் வேடிக்கை. 1990-இல் மண்டல் கமிஷன் பிரச்னையில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக களமிறங்கிய பாஜக, இப்போது 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழிகோலியிருப்பது அதைவிட வேடிக்கை.
1948 நவம்பர் 30-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது சட்ட அமைச்சர் அம்பேத்கர், இடஒதுக்கீடு என்பது மிகக் குறைந்த அளவிலான இடங்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும், அதிலும் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற முடியாத மிகமிக பிற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக மட்டுமே தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக இடஒதுக்கீடு என்பது அநேகமாக நிரந்தரமாகிவிட்டிருப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டும் வருகிறது. அதன் உச்சகட்டம்தான் இப்போதைய பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு.
இந்த ஒதுக்கீட்டின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர் என்கிற வரம்பிற்குள் ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் குறைவானவர்கள், ஐந்து ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், 1,000 சதுர அடிக்கும் குறைவாக நகர்ப்புறத்தில் வீடு வைத்திருப்போர் ஆகியோர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 95% மக்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் வரம்புக்குள் வருவார்கள் என்பதால் அநேகமாக இந்தியாவில் வாழும் எல்லோருமே இடஒதுக்கீடு பெறுபவர்களாக மாற்றப்பட்டுவிடுவார்கள். 
வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டொன்றுக்கு ரூ.2.5 லட்சம் இருக்கும் நிலையில், ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது கண்துடைப்பு என்றுதான் கூற வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட ஜாதிய இடஒதுக்கீட்டில் இடம் பெறாதவர்களும் இனிமேல் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். இதுவரை இடஒதுக்கீடு இல்லாத கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இடஒதுக்கீடு பெறுவர். இந்த நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு எந்த அளவில் செயல் வடிவம் பெறும் என்பதை புரிந்துகொள்ளலாம். 
ஏற்கெனவே வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. 1990-91-க்கும், 2011-12-க்கும் இடையில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 7% குறைந்திருந்தது. அது இப்போது மேலும் அதிகரித்திருக்கக் கூடும். நமது மக்கள்தொகை கடந்த 30 ஆண்டுகளில் 30% அதிகரித்திருக்கிறது. இந்தப் பின்னணியில் இடஒதுக்கீட்டின் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு யாருக்கும் கிடைத்து விடாது. 
1992-இல் இதேபோல அன்றைய நரசிம்ம ராவ் அரசு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவர முற்பட்டபோது உச்சநீதிமன்றம் அதை நிராகரித்திருக்கிறது. பொருளாதார அடிப்படை பிற்படுத்தப்பட்ட தன்மைக்குக் காரணமாக இருக்க முடியாது என்பது உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு. அதேபோல, 50%-ற்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசனப் பிரிவு 15, 16-க்கு எதிரானது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப்பேரவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே சட்டமாகும். இன்னும் இரண்டு மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கு அறிவிப்பு வரும் நிலையில், அது சாத்தியம் தானா என்பது முதல் கேள்வி. அப்படியே சாத்தியம் ஆனாலும் உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறுமா என்பது அதைவிட மிகப்பெரிய கேள்வி. 
இதெல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாகவே தெரியும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். அதனால்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com