விமான விபத்தும் அரசியலும்!

மூன்று வாரங்களுக்கு முன்புதான் பெங்களூரில் மிராஜ் 2000 பயிற்சி விமான விபத்தில் இரண்டு இந்திய விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.


மூன்று வாரங்களுக்கு முன்புதான் பெங்களூரில் மிராஜ் 2000 பயிற்சி விமான விபத்தில் இரண்டு இந்திய விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். இப்போது செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு விபத்து. பெங்களூரில் நடக்கும் 12-ஆவது ஏரோ இந்தியா கண்காட்சிக்கான பயிற்சியின்போது இரண்டு சூரியகிரண் விமானங்கள் வானத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் விபத்து நேர்ந்திருக்கிறது. விங் கமாண்டர் சாஹில் காந்தி உயிரிழந்திருக்கிறார். விங் கமாண்டர் விஜய் ஷெல்கேயும்,  க்வாட்ரன் லீடர் தேஜேஸ்வர் சிங்கும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி 28-ஆம் தேதி ஜாகுவார் விமான விபத்திலும், பிப்ரவரி 12-ஆம் தேதி நடந்த மிக் 27 ரக விமான விபத்திலும் நல்ல வேளையாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நான்கு பெரிய விபத்துகள் ஏற்பட்டிருப்பது விமானப் படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த விபத்துகளுக்கான சரியான காரணம் முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.  இந்திய ராணுவத்தில் அதிக அளவில் விமான விபத்துகள் ஏற்பட்டு வருவது விமானங்களின் பராமரிப்பு குறித்தும், பயன்பாடு குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. 2015-16 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் முப்படைகளில் 40-க்கும் அதிகமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியிருக்கின்றன. 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
2018-இல் மட்டும் சுகோய், ஜாகுவார், மிக் ரக விமானங்கள் பல விபத்தில் சிக்கின. இந்திய விமானப் படையில் 2012 வரையிலான 40 ஆண்டுகளில் 482 மிக் ரக விமானங்கள் விபத்தில் சிக்கி நொறுங்கி இருக்கின்றன. அதனால், மிக் ரக விமானங்களைப்  பறக்கும் சவப்பெட்டிகள் என்று விமானப்படையினர் கேலியாகவும், கேவலமாகவும் விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டது. 
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பெங்களூரில் விபத்தில் சிக்கிய மிராஜ் 2000  விமானம் மிகவும் மோசமானது என்று தள்ளிவிட முடியாது. 1984-இல் இந்திய விமானப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட மிராஜ் 2000 விமானங்கள் கார்கில் போரின்போது  மிகத் துல்லியமாகக் குண்டுகளை வீசி, மலை உச்சியில் ஊடுருவி இருந்த  தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தானிலிருந்து உணவும், வெடி பொருள்களும் வருவதைத் தடுத்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
2011-இல் மிராஜ் 2000  விமானங்களைத் தரம் உயர்த்துவதற்காக  அதன் பிரெஞ்சுத் தயாரிப்பாளர்களிடம் 2.4 பில்லியன் டாலர் (ரூ.17,040 கோடி) அளவிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரண்டு மிராஜ் 2000  விமானங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டன.  அங்கே அளிக்கப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் மீதமுள்ள மிராஜ் 2000  விமானங்களை தரம்  உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் விளைவுதான் இந்த விபத்து என்கிற குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்து விடுவதற்கில்லை.
இந்த விபத்துகள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் தொழில்நுட்பத் திறமை குறித்த ஐயப்பாட்டை அதிகரிக்கிறது. மிராஜ் ரக விமானங்களை தரம் உயர்த்துதல் மட்டுமல்லாமல், அந்த அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏனைய பல தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புகளும் முறையாகவும், காலதாமதம் இல்லாமலும் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
இந்திய விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. நமது ராணுவத்தை நவீனப்படுத்துவதிலும்,  ராணுவத்துக்குத் தேவையான விமானங்கள், தளவாடங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதிலும் மிக அதிகமான காலதாமதம் ஏற்படுகிறது என்கிற குற்றச்சாட்டை  முப்படையினரும் முன்வைக்கின்றனர்.
விமான ஓட்டிகளுக்கு இந்திய விமானப்படை மிகவும் கடுமையான பயிற்சிகளை அளிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விமானங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற பயிற்சிகள் விமான ஓட்டிகளுக்குக் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மூன்றாவதாக சரியான பராமரிப்பு இல்லாமையும், விமானங்கள் தரம் உயர்த்தப்படாமல் தொடர்வதும் விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன. 
இந்திய ராணுவத்தில் அதிலும் குறிப்பாக, இந்திய விமானப்படையில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடு, தேவைக்கேற்ப அதி நவீன விமானங்கள் இல்லாமல் இருப்பது. ராணுவக் கொள்முதலில் விமர்சனங்கள் எழுவதும், அவை அரசியலாக்கப்படுவதும், ராணுவம் நவீனமயமாக்கப்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. போஃபர்ஸ், ரஃபேல் ஒப்பந்தங்கள் உதாரணங்கள். 
வெளிநாடுகளிலிருந்து போர் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் கோரும்போது போட்டியில் வாய்ப்பிழந்த நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் சில தவறுகளையோ, குறைபாடுகளையோ பெரிதுபடுத்தி, எதிர்க்கட்சிகளின் துணையோடு அரசியலாக்க முனைகின்றன. அவர்களது கார்ப்பரேட் யுத்தத்தில் நமது அரசியல்வாதிகள் சிக்கிக் கொள்வதால்,  பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.
விமர்சனத்துக்குப் பயந்து வெளிநாடுகளிலிருந்து வாங்குவதையும் நிறுத்தி, உள்நாட்டில் உற்பத்தியும் செய்யாமல் இருப்பதால் ஏற்கெனவே இருக்கும்  பழைய விமானங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். விபத்துகளுக்கு அதுதான் முக்கியமான காரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com