நிறைவு தரவில்லை!

புதன்கிழமையுடன் 16-ஆவது மக்களவை நிறைவுக்கு வந்தபோது, நாடாளுமன்றம் நிறைவாகச் செயல்பட்டு அடுத்த தேர்தலுக்கு இந்தியா தயாராகிறது என்கிற நிறைவு ஏற்படவில்லை. 

புதன்கிழமையுடன் 16-ஆவது மக்களவை நிறைவுக்கு வந்தபோது, நாடாளுமன்றம் நிறைவாகச் செயல்பட்டு அடுத்த தேர்தலுக்கு இந்தியா தயாராகிறது என்கிற நிறைவு ஏற்படவில்லை. 
மாநிலங்களவை அளவுக்கு மக்களவையின் செயல்பாடு மோசமாக இருக்கவில்லை என்றாலும்கூட, முறையான விவாதக் கலாசாரத்துடன் நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்தாக வேண்டும். 
மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து  நாடாளுமன்றம் 2014 ஜூன் 4-ஆம் தேதி கூடியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதால் நாடாளுமன்றம் முறையாகவும் அமைதியாகவும் செயல்பட்டு சாதனை படைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாமல் இருந்தது  என்றாலும் நரேந்திர மோடி அரசு எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் 180 மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. இதற்கு முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய 179 மசோதாக்களைவிட ஒரு மசோதா அதிகமாக நிறைவேற்றி இருக்கிறோம் என்று வேண்டுமானால் அரசுத் தரப்பு ஆறுதல் அடையலாம். முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 248 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 
நாடாளுமன்றப் புள்ளிவிவரங்களின்படி, 2014-லிருந்து 2019 வரையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் 180 மசோதாக்களில் 47 மசோதாக்கள் நிதி மசோதாக்கள். அதனால், மாநிலங்களவையின் ஒப்புதல் தேவைப்படவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது நிறைவேற்றப்படாத 46 மசோதாக்கள் காலாவதியாகிவிடும். 
மக்களவை கடந்த ஐந்து ஆண்டுகளில் 331 அமர்வுகள் கூடியிருக்கிறது. 730 நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. மாநிலங்களவை 321 அமர்வுகளைக் கண்டது. அதில் 154 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2004-09-இல் 259 மசோதாக்களும், 2009-14-இல் 188 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இப்போதைய மாநிலங்களவையின் கடந்த ஐந்து ஆண்டுகளின் செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை. 
முந்தைய மக்களவையில் 372 தனிநபர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றால், இந்த மக்களவையில் 1,117 தனி நபர் மசோதாக்கள் விவாதத்துக்கு வந்தன. தமிழகத்திலிருந்து 
39 மக்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர்கூட தனிநபர் மசோதா எதையும் 16-ஆவது மக்களவையில் கொண்டுவரவில்லை என்பது நமது உறுப்பினர்களின் செயல்பாட்டை வெளிச்சம் போடுகிறது.  
16-ஆவது மக்களவை பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிப்புக்கான ஜிஎஸ்டி மசோதா, காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு வழிகோலும் மசோதா, மனை வணிகத் துறை ஒழுங்காற்றுச் சட்டம், பினாமி சொத்துகளை முடக்கும் சட்டம், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம், எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதிப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஆகியவை 16-ஆவது மக்களவையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்று வரலாறு பதிவு செய்யும்.
அதேநேரத்தில் 16-ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் 24% மட்டுமே நிலைக்குழுவின் பரிந்துரைப்படி தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 14-ஆவது மக்களவையில் (2004-09) 51%, 15-ஆவது மக்களவையில் (2009-14) 71% மசோதாக்கள் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. விவாதம் இல்லாமல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவது என்பது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஏற்புடைய செயல்பாடு அல்ல. 
அந்த விதத்தில் 16-ஆவது மக்களவை முறையாகக் கடமையாற்றியது என்று  பாராட்ட முடியவில்லை. 
16-ஆவது மக்களவை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நிறைவேற்றப்படாத சில முக்கியமான மசோதாக்கள் காலாவதியாகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கும் குடியுரிமைத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, ஆதார் உள்ளிட்ட சட்டங்கள் திருத்த மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கியமான சில மசோதாக்கள் 16-ஆவது மக்களவையின் அங்கீகாரம் பெறாததால் காலாவதியாகிவிட்டன.
16-ஆவது மக்களவை முடிவுக்கு வந்து அடுத்த 17-ஆவது மக்களவைக்கான தேர்தலுக்கு இந்தியா காத்திருக்கிறது. முந்தைய மக்களவைகளைப் போலல்லாமல், அடுத்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் மக்களவையிலாவது முறையான விவாதக் கலாசாரம் பின்பற்றப்பட்டு, கூச்சல் குழப்பத்தில் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாமல் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் 16-ஆவது மக்களவைக்கு விடை கொடுப்போம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com