பொறுப்புணர்வுக்குப் பாராட்டு!

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பலத்த கைத்தட்டலுடன்

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றாக வேண்டிய ஒன்று. சலுகைகளை வாரிவழங்கி நிதிப் பற்றாக்குறையை அதிகரித்துக் கொள்ளாமல், மிகுந்த பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை இது.
 மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், மத்திய அரசும் சரி, ஏனைய மாநில அரசுகளும் சரி போதிய நிதியாதாரம் குறித்த கவலையே இல்லாமல் சலுகைகளையும், இலவசங்களையும், வரி விலக்குகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய சூழலில் தேர்தல் கண்ணோட்டத்துடன் அணுகாமல், தமிழகத்தின் வருங்காலம் குறித்த அக்கறையுடன் இப்படியொரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் துணிவையும் நேர்மையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு வாரி வழங்கிய இலவசத் திட்டங்களும், மக்கள் நலத் திட்டங்களும் தமிழகத்தின் நிதி நிலைமையைத் தள்ளாட வைத்திருக்கின்றன. கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் கடன் சுமைக்கும், பற்றாக்குறைக்கும் கடிவாளம் போட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது. இந்த நிதிநிலை அறிக்கை அந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக, பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிதியமைச்சரும், நிதித்துறைச் செயலாளரும் கத்தி மேல் நடந்திருக்கிறார்கள்; வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.
 அடுத்த நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1,97,721 கோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் செலவினங்கள் ரூ.2,12,035 கோடி. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.14,314 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய்ப் பற்றாக்குறையான ரூ.19,319 கோடியைவிடக் குறைவு என்பது மிகப் பெரிய ஆறுதல். வரும் நிதியாண்டுக்கான மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையும் கடந்த ஆண்டின் 2.85% என்பதிலிருந்து 2.56% என்று குறைக்கப்பட்டிருக்கிறது.
 மாநில அரசுகளின் நிதி நிர்வாகம் என்பது மிகவும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. வாக்கு வங்கி அரசியல், ஊதிய உயர்வுக்கும், மானியங்களுக்கும் வழிகோலிப் பொருளாதார சமநிலையைத் தகர்த்திருக்கின்றன. தமிழக அரசின் வருவாயில் அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக ரூ.55,399 கோடியும், பிற ஓய்வுகால பலன்களுக்காக ரூ.29,627 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசின் மொத்த வருவாயான ரூ.1,97,721 கோடியில், ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக ரூ.85,026 கோடி செலவிடப்படும் நிலையில், நிதி மேலாண்மை மிகப்பெரிய சவாலாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
 உதவித் தொகைகள், உணவு மானியம், மின்சார மானியம், கல்வி உதவித் தொகை, வீட்டுவசதித் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், விவசாயக் கடன் தள்ளுபடி என்று ரூ.85,000 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்படும் நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசு வாங்கி இருக்கும் கடன்களுக்காகக் கடந்த நிதியாண்டில் (2018-19) மட்டும் செலுத்தி இருக்கும் வட்டித் தொகை ரூ.29,624 கோடி. வரும் நிதியாண்டில் அது ரூ.33,226 கோடியாக உயரப் போகின்றன. அடுத்த நிதியாண்டின் இறுதியில் தமிழக அரசின் நிகரக் கடன் நிலுவைத் தொகை ரூ.3,97,495 கோடியாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே வேளையில், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவைக் கடன் விகிதம் அனுமதிக்கப்பட்ட 25% என்கிற அளவைவிடக் குறைவாக 23.02%தான் இருக்கும் என்பது சற்று ஆறுதல்.
 தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணம், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு தர வேண்டிய நிதி ஒதுக்கீடுகள், நிர்வாகக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. மத்திய ஜி.எஸ்.டி. (ரூ.5,454 கோடி), அனைவருக்கும் கல்வித் திட்டம் (ரூ.2,109 கோடி), தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் (ரூ.1,092 கோடி), உள்ளாட்சிகளுக்கான ஒதுக்கீடு (ரூ.3,852 கோடி), ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை (ரூ.455 கோடி) என்று மத்திய அரசு தர வேண்டிய தொகை தரப்படாமல் இருப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலைமை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.
 "வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில், வகுக்கப்பட்டுள்ள செயல் திட்டம், நீடித்த பொருளாதார வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கும், சமச்சீரான வளர்ச்சியைப் பெறுவதற்கும் வழிகோலும்' என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்புக்குரியது. தேர்தலைக் குறிவைத்து நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்காமல், தமிழகத்தின் பொருளாதார நலனைக் கருத்தில்கொண்டு தயாரித்திருப்பதற்குத் துணிவு வேண்டும்.
 இத்தனை பிரச்னைகளுக்கும், நிதி நெருக்கடிக்கும் நடுவே, ரூ.20,000 கோடியில் 36 புதிய திட்டங்களுக்குப் புதிய பல அறிவிப்புகளுடனும், நிதி மேலாண்மையில் அக்கறை காட்டி 2019-20 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டாமல், குறை கூறுவது என்பது எதிர்க்கட்சிகளின் சம்பிரதாயச் சடங்கு என்று ஒதுக்கிவிடலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com