சலுகை மழை எனும் சாபக்கேடு!

எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாத குறையை நமது அரசியல் கட்சிகள் சலுகை மழை பொழிந்து ஈடுகட்டுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கான


எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாத குறையை நமது அரசியல் கட்சிகள் சலுகை மழை பொழிந்து ஈடுகட்டுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கான நாள் நெருங்க நெருங்க போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும், மானியங்களையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் அறிவித்தவண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு எவ்வழி, மாநில அரசுகளும் அவ்வழி. ஒன்றன் பின் ஒன்றாக மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள் சலுகைகளையும், மானியங்களையும் அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. 
பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாமில் நிதியமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா ரூ.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமான முடைய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்துக்கு 12  கிராம் தங்கம் வழங்கப்போவதாக புதன்கிழமை  அறிவித்திருக்கிறார். 12-ஆவது வகுப்பில் 60% அதிகமான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இ-பைக் வழங்குவது, 45 வயதுக்கும் குறைவான கணவனை இழந்த மகளிருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, கலைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ரூ.50,000 ரொக்க மானியம் என்று ஒரு சலுகைப் பட்டியலையே அறிவித்திருக்கிறார்.
அஸ்ஸாமைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசமும், ராஜஸ்தானும் பாஜகவுக்குக் காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றன. வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 வழங்குவது என்று மத்தியப் பிரதேச அரசு கடந்த வியாழக்கிழமை தீர்மானித்திருக்கிறது. ரூ.3,000-ம் வழங்குவதாக ராஜஸ்தான் அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு முன்னால் இதுபோன்ற அறிவிப்புகளை ஏனைய மாநிலங்களும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அறிவிக்க இருக்கின்றன. 
பொருளாதார நிபுணர்கள் இந்த அறிவிப்புகளைப் பார்த்து திகைத்துப் போய் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எல்லா மாநிலங்களும் எதிர்கொள்ளும் நிலையில், அறிவிக்கப்படும் சலுகைகளையும், மானியங்களையும் நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்துப் பொருளாதார நிபுணர்கள் அச்சமடைவதில் வியப்பென்ன இருக்கிறது? 
எல்லாத் துறைகளிலும் சலுகை அரசியல் அல்லது தற்காலிகத் தீர்வுகள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. பிரச்னைகளை  அறிவியல்பூர்வமாக எதிர்கொண்டு ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காணும் எண்ணம் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியினரிடத்திலும் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய போக்கு. இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக  விவசாயம்தான் இருக்கிறது. ஏறத்தாழ 60% இந்தியர்கள் விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், மொத்த தேசிய வருமானத்தில் 15% மட்டும்தான் அவர்களுக்கானது என்கிற நிலையில், எந்தவோர் அரசும் வேளாண் பிரச்னை குறித்து ஆக்கப்பூர்வமான பார்வையில் சிந்திப்பதாக இல்லை. 
வேலைவாய்ப்பு என்று எடுத்துக்கொண்டால், ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு என்ற பயனளிக்காத தீர்வு மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அரசின் கொள்கைகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் தேக்கம்  நிலவுகிறது. வேலைவாய்ப்புக்கு அடிப்படையான நிலம், தொழிலாளர்கள், முதலீடு, தொழில்நுட்பம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்படாத காரணத்தால், வேலைவாய்ப்பு உருவாவதற்கான வாய்ப்பு தொழில் துறையில் காணப்படவில்லை. கடந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்  ஏற்படுத்தப்பட்டு, ரூ.55,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் விளைவாக  எந்தவிதப் புதிய வேலைவாய்ப்பும் உருவானதாகத் தெரியவில்லை. 
எல்லா அரசியல் கட்சிகளும் கல்வி குறித்தும், பெண் குழந்தைகள் குறித்தும் கவலை தெரிவிக்கின்றன. ஆனால், தண்ணீரும், மின்சாரமும் இல்லாத பள்ளிக்கூடங்கள், போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, தரமான கல்வி, கல்வி முறையில் மாற்றம் இவை குறித்தெல்லாம் விவாதமும் இல்லை, கவலைப்படவும் இல்லை. சுகாதாரம் எனும்போது ஆரம்ப சுகாதாரத்தையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளிலும் எந்தவித முதலீடும் செய்யாமல், மருத்துவக் காப்பீடு மட்டுமே விடை என்கிற போக்குதான்  காணப்படுகிறது. 
கடந்த நிதியாண்டில் மானியங்களின் அளவு ரூ.1.29 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.29 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட வாங்கிய கடன் ரூ.2.33 லட்சம் கோடியிலிருந்து ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்தது.  கடந்த 10 ஆண்டுகளில் அரசு வாங்கிய கடனுக்குத் தரப்பட்ட  வட்டியின் அளவு ஆண்டொன்றுக்கு ரூ.1.92 லட்சம் கோடியிலிருந்து, ரூ.5.30 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்படியே போனால் எங்கே போய் முடியப் போகிறது என்கிற அச்சம், தேசம் பற்றிய அக்கறை உள்ளவர்களைக் கவலை கொள்ளச் செய்கிறது. 
பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் சலுகைகளையும், மானியங்களையும் வழங்குவது கடலில் பெருங்காயத்தைக் கரைப்பது போல, விரயத்துக்கு வழிவகுக்குமே தவிர விடிவுக்கு வழிகோலாது. தற்காலிக அரசுத் திட்டம் என்று ஒன்று கிடையாது. 
2019 மக்களவைத் தேர்தல் கொள்கைக்கான அல்லது மாற்றுத் திட்டத்துக்கான போட்டியாக இருக்கப் போவதில்லை. மானியங்களுக்கும், சலுகைகளுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கப் போகிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com