தங்கமே தங்கம்!

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. திடீரென்று தங்கத்தின் விலை உயர்வது என்பது யாருமே எதிர்பார்க்காத


தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. திடீரென்று தங்கத்தின் விலை உயர்வது என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், சர்வதேச அளவிலான விலையேற்றம்தான் இது என்பதை நாம் உணர வேண்டும்.
சர்வதேசச் சந்தையில் காணப்படும் தேவைக்கு ஏற்ப, தங்கத்தின் உற்பத்தி இல்லை என்பதுதான் இந்த விலையேற்றத்துக்குக் காரணம். இதன் விளைவாக தங்கத்துக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது போலவே, உலகிலுள்ள வளரும் பொருளாதாரங்களின் செலாவணிகளும் தங்கத்துக்கு நிகரான மதிப்புக் குறைவை எதிர்கொள்கின்றன.
அநேகமாக எல்லா குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களும் இதுவரை இல்லாத அளவிலான தங்கத்தின் விலையுயர்வை எதிர்கொள்கின்றன; அல்லது எதிர்கொள்ள இருக்கின்றன. இதில் விதிவிலக்காக இருப்பது அமெரிக்க டாலர் மட்டும்தான். 
சர்வதேச அளவிலான தங்கத்தின் விலை உயர்வின் பின்னணியில், உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் வீழ்ச்சி குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும். மேலை வல்லரசு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது நிதிக் கொள்கைகளில் கடுமையாக கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. இதனால், இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்திலிருந்து முதலீடுகள் மீண்டும் மேலை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு அதுதான் முக்கியமான காரணம்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போட்டியும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதும், சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்படக்கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதனால், தங்களது செலாவணிகளின் நம்பகத்தன்மையையும், மதிப்பையும் தக்க வைத்துக்கொள்ள பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்புத் தங்கத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன. இதுவும்கூட தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
தங்கத்தின் விலையேற்றத்துக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் உண்டு. 2012-ஆம் ஆண்டு தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து தங்கச் சுரங்க அதிபர்கள், தங்களது சுரங்கத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. மேலும், உற்பத்திக்குத் தேவையான புதிய முதலீடுகள் செய்வதை அவர்கள் தவிர்த்தனர். இதன் விளைவாக தங்கத்தின் உற்பத்தி குறைந்திருக்கிறது. அதுவும்கூட விலையேற்றத்துக்கு மிகப் பெரிய காரணம்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் தங்கத்துக்கான தேவை சராசரியாக ஆண்டொன்றுக்கு 838 டன்னாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் விற்பனை 760.4 டன் என்றால், 2019-இல் அதுவே 750 முதல் 850 டன்னாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த பத்தாண்டு சராசரியைவிட அதிகத் தேவை ஏற்படக்கூடும் என்று அரசும் எதிர்பார்க்கிறது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும், பொதுத்தேர்தல் ஆண்டு என்பதாலும் அரசு அறிவித்திருக்கும் வரிச் சலுகைகளும், மானியங்களும் மக்கள் மத்தியில் அதிக அளவிலான பணப் புழக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள், மறைமுகமாக தங்கத்தின்  தேவையை அதிகரிக்கும். தங்கத்தில் முதலீடு செய்து பாதுகாப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளும், ஊரகப் பகுதியினரும்தான் என்பதுதான் அதற்குக் காரணம்.
கடந்த ஆண்டில் தங்கத்தின் தேவை சற்று குறைந்து காணப்பட்டது. மொத்தத் தேவை 1.4% குறைந்தது. தங்க நாணயங்கள், கட்டிகள் என்று சேமிப்பு அல்லது முதலீடாகச் சேர்த்து வைக்கப்படும் தங்கத்தின் தேவை 4% குறைந்தது. இதற்கு அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவால்,  கணக்கில் காட்டப்படாத பணத்தின் புழக்கம் தடுக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
கடந்த 2013 ஆகஸ்ட் மாதத்தில், முந்தைய மன்மோகன் சிங் அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 10%-ஆக உயர்த்தியது முதல், தங்கத்தைக் கடத்துவது பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பும்கூடத் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுவதற்குக் காரணமாக இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 115 டன் முதல் 120 டன் வரையிலான தங்கம் கடத்தப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. இதைத் தடுப்பது என்பது இயலாது என்றும் கூறுகின்றனர்.
தங்கத்துக்கான தேவை அதிகரிப்பதற்கு மனை வணிகம், பங்குச்சந்தை, வங்கி வைப்பு நிதிகள் ஆகியவற்றின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதுதான் மிகவும் முக்கியமான காரணம். மனை வணிகம் தொடர்பான அரசின் திட்டங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்போது, தேவையில்லாத பிரச்னையில் முதலீட்டாளர்கள் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள். வங்கி முதலீட்டுக்கான வட்டி குறைவாகவே வழங்கப்படும்போது, அதைவிடப் பாதுகாப்பானதாகத் தங்கத்தின் மீதான முதலீடு கருதப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி சீராகவும், குறிப்பிடும்படியாகவும் இல்லாமல் போகும்போது, பங்குச் சந்தையும் அதையொட்டி மந்த நிலையை அடைந்து விடுகிறது. பங்குச் சந்தை முதலீடு என்பது பாதுகாப்பானதல்ல என்கிற எண்ணம் மேலோங்கும்போது, முதலீட்டாளர்களின் கவனம் உடனடியாகத் திரும்புவது தங்கத்தின் மீதுதான்.
தங்கத்துக்கு எதிரான செலாவணிகளின் மதிப்பு குறைந்து, தங்கம் விலை கடுமையாக உயர்வது என்பது சர்வதேச அளவிலான விலைவாசி ஏற்றத்துக்கு வழிகோலும். சர்வதேச மத்திய வங்கிகள் தங்களது கொள்கைகளைத் தளர்வு செய்து தங்கத்தைப் பதுக்கிக் கடுமையான விலைவாசி உயர்வுக்கு வழிகோலக்கூடும். தங்கத்தின் விலை அதிகரிப்பு குறித்து அரசு கவனம் செலுத்துவது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com