தேர்தல் அரசியல்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா காவல் துறை ஆணையரை மேகாலய மாநிலத் தலைநகர்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா காவல் துறை ஆணையரை மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்றும் விசாரணையின்போது அவர் கைது செய்யப்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நியாயமான உத்தரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் அவர்கள் கோருவதுபோல எந்த விதத்தில் சாதகமான தீர்ப்பு என்பது புரியவில்லை.  
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மத்திய அரசின் தலையீடு இல்லையென்று கூறிவிட முடியாது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியாமல் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா காவல் துறை ஆணையரை விசாரிக்க முற்பட்டிருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
கடந்த 5 ஆண்டுகளாக சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து முடிவுக்குக் கொண்டு வராமல் இப்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடவடிக்கை எடுக்க முற்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் குறை காண முடியாது. 
அதேநேரத்தில், சிபிஐ அதிகாரிகளுக்கும் மாநில காவல் துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்படும்போது அதை சுமுகமாகத் தீர்த்து வைக்கவேண்டிய முதல்வர் மம்தா  பானர்ஜி, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கிலிருந்து தன்னையும் தன் கட்சியினரையும் காப்பாற்றிக் கொள்ளவும், மத்திய அரசால் பழிவாங்கப்படுகிறார் என்கிற அனுதாபத்தை தேடிக்கொள்ளவும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த முற்பட்டது மிகவும் கீழ்த்தரமான அரசியல். 
சாரதா நிதி நிறுவனம் என்பது 19 ஆண்டுகளுக்கு முன்பு சுதீப்தோ சென் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கூட்டு முதலீட்டுத் திட்டம். சாரதா குழுமம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்தி சிறு முதலீட்டாளர்களிடமிருந்து ஏறத்தாழ ரூ.2,500 கோடியைப் பெற்றது. முதலீடு பெற்றுத் தரும் முகவர்களுக்கு 25% ஊக்கத் தொகை வழங்கி, மேற்கு வங்கம், ஒடிஸா, அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 17 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்தது.
சாரதா நிறுவனம் 239 நிறுவனங்களை நடத்தி வந்தது. சுற்றுலா, பயண ஏற்பாடு, மனை வணிகம், நிதி நிறுவனம், இரு சக்கர வாகனத் தயாரிப்பு என்று மக்களிடமிருந்து பெற்ற பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது. 5 மொழிகளில் 8 பத்திரிகைகளை நடத்தி வந்தது. அதில் 1,500 பத்திரிகையாளர்கள் வேலை பார்த்தனர். ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. அதன் தலைவராகச் செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான குணால் கோஷுக்கு மாதம் ரூ.14 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. 
2009-இல் சாரதா நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின.  தனது அனுமதியில்லாமல் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கக்கூடாது என்று 2012-இல் செபி'  உத்தரவிட்டது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் குறைந்தது ரூ.50,000 வீதம் சாரதா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தனர். முதலீடுகளை திரும்பக் கோரும்போது சாரதா நிறுவனம் பணத்தை வழங்குவதில் தாமதப்படுத்தியதன் விளைவாக, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாயின. நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள், ஏப்ரல் 2013-இல் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது நிறுவனத்தின் தலைவர் சுதீப்தோ சென் தலைமறைவானார்.
பல அரசியல் தலைவர்கள் தன்னை மிரட்டி மிகவும் மோசமான முதலீடுகளுக்கு வற்புறுத்தியதால் தனது நிறுவனம் இழப்பைச் சந்திக்க நேரிட்டதாக தலைமறைவானதற்கு முன்பு சுதீப்தோ சென் குற்றஞ்சாட்டினார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2013 ஏப்ரல் 20-ஆம் தேதி காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். ஆரம்ப கால விசாரணைகளில் துபை, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் என்று பல வெளிநாடுகளில் பணத்தை சுதீப்தோ சென்  முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. வேறு வழியில்லாமல் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை மம்தா பானர்ஜி அரசு அமைத்தது. கடந்த மே 2014-இல் எல்லா வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
மேற்கு வங்க அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தன்னிடமுள்ள அனைத்து ஆவணங்கள், சாட்சிகள், தான் கைது செய்த குற்றவாளிகள் ஆகியோரை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் உத்தரவு. அதனடிப்படையில்தான், இப்போது மேற்கு வங்க மாநில சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்த கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ முனைந்தது.
சிபிஐ-யின் கூற்றுப்படி, அந்த  ஆவணங்கள் தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. இது தொடர்பாக, ராஜீவ் குமாருக்கு கடந்த 2017 முதல் இதுவரை 5 அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும் அவர் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் சிபிஐ-யின் குற்றச்சாட்டு. 
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை ஆத்திரப்பட வைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியத்தை ரூ.1.08 கோடி கொடுத்து சுதீப்தோ சென் பெற்றிருப்பது, வருமானவரித் துறை கணக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பல முக்கியமான தலைவர்கள்-அவர்களில் சிலர் இப்போது பாஜகவில் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்- தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். நிதி நிறுவன மோசடியின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் நேர அரசியல் மோசடி வெளிப்படையாகவே தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com