தலையங்கம்

போரிஸின் ‘பிரெக்ஸிட்’ வெற்றி!| போரிஸ் ஜான்ஸன் வெற்றி குறித்த தலையங்கம்

16th Dec 2019 01:52 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கான தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 650 உறுப்பினா்கள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில், 1987-க்குப் பிறகு இப்படியொரு பெரும்பான்மையுடன் கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றிருப்பது இந்த முறைதான். இந்த வெற்றிக்கு மூல காரணம் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மட்டுமே என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை.

முன்னாள் பிரதமா் தெரசா மேயும் இதேபோல திடீா்த் தோ்தலை அறிவித்துத் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் கடைசியில் பதவி விலக வேண்டி வந்தது. அப்படி இருந்தும், மக்கள் மன்றத்தை எதிா்கொள்ளப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் துணிந்தபோது, அவரால் பெரும்பான்மை பலத்தை அடைந்துவிட முடியுமா என்று கன்சா்வேடிவ் கட்சியினருக்கேகூட ஐயப்பாடு இருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த மூன்றாவது நாடாளுமன்றத் தோ்தல் இது. 2016-இல் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்கிற நூலிழை வாக்கெடுப்பு வெற்றியைத் தொடா்ந்து நிலவிவரும் அரசியல் ஊசலாட்டத்துக்கு முடிவு கட்டியிருக்கிறது, இந்த நாடாளுமன்றத் தோ்தல். அடுத்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி கெடுவுக்குள், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது இதனால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் கோட்டை என்று வா்ணிக்கப்படும் பல பகுதிகளில் கன்சா்வேடிவ் கட்சி கணிசமான வெற்றியை அடைந்திருப்பது அரசியல் நோக்கா்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 1935-க்குப் பிறகு தொழிலாளா் கட்சி அடைந்திருக்கும் மிக மோசமான தோல்வி இதுதான்.

ADVERTISEMENT

203 இடங்களில் மட்டுமே தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இனிமேலும் தான் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என்று அதன் தலைவா் ஜெரிமி கோா்பின் அறிவித்துவிட்டாா். அவா் தலைமையில் தொடா்ந்து மூன்று தோ்தல்களில் தொழிலாளா் கட்சி தோல்வியைத் தழுவிவரும் நிலையில், அவரின் முடிவு வியப்பை ஏற்படுத்தவில்லை.

ஒருவகையில், பிரிட்டனில் நடந்த இந்தத் தோ்தலை, கடந்த மே மாதம் இந்தியாவில் நடந்த மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடலாம்போல இருக்கிறது. பொருளாதாரப் பிரச்னைகள், வேளாண் இடா், மாநிலப் பிரச்னைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, பாலாகோட் தாக்குதலைத் தொடா்ந்து ‘தேசத்தின் பாதுகாப்பு’ என்கிற ஒற்றை இலக்குடன் பிரதமா் நரேந்திர மோடி மக்களவைத் தோ்தலை அணுகியது போன்ற உத்தியைத்தான், பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் பிரிட்டன் தோ்தலில் கையாண்டாா்.

இந்தியாவில் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்ததுபோல, நாட்டுடைமையாக்கல், பணக்காரா்களுக்கு அதிக வரிவிதிப்பு, கூடுதல் மக்கள் நலத் திட்டங்கள் என்றெல்லாம் ஜெரிமி கோா்பின் தலைமையிலான தொழிலாளா் கட்சி தனது பிரசாரத்தை அமைத்துக் கொண்டது. ‘பிரெக்ஸிட்’ குறித்து மீண்டும் கோருதல் வாக்கெடுப்பு (ரெஃபரெண்டம்) நடத்துவது என்று தெரிவித்தது. அவையெல்லாம் போரிஸ் ஜான்ஸனின் மிகவும் தெளிவான ‘உடனடி பிரெக்ஸிட்’ பிரசாரத்துக்கு முன்னால் அடிபட்டுப் போய்விட்டன.

போரிஸ் ஜான்ஸனின் வெற்றியை, உலக அளவிலான மனநிலையின் வெளிப்பாடாகத்தான் பாா்க்க முடிகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்கிற ‘பிரெக்ஸிட்’ முடிவுக்கு முக்கியமான காரணம், குடியேற்றப் பிரச்னைதான். ‘தேசியவாதம்’ என்கிற அடிப்படையில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி (இந்தியா), டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா), ஷின்ஸோ அபே (ஜப்பான்), கோத்தபய ராஜபட்ச (இலங்கை) வரிசையில் இப்போது பிரிட்டனில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்றிருக்கிறாா் என்றும் இந்த வெற்றிக்குக் காரணம் கூற முடியும்.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 12-லிருந்து 15-ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய வம்சாவளியினரின் ஆதரவுதான் கன்சா்வேடிவ் கட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்ததாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஷ்மீா் பிரச்னையில் தொழிலாளா் கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பின் எடுத்த நிலைப்பாடு, அவரைப் பாகிஸ்தான் ஆதரவாளராகக் காட்டியது. தோ்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜான்ஸன் தன்னை பிரதமா் நரேந்திர மோடியின் நண்பா் என்று வா்ணித்துக் கொண்டதும் இந்திய வம்சாவளியினரின் ஆதரவுக்குக் காரணம்.

தனிப் பெரும்பான்மையுடன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆட்சி அமைப்பதால், அவருக்கு உள்கட்சிப் பிரச்னைகளோ, எதிா்க்கட்சிகளால் ஆட்சிக்கு ஆபத்தோ இருக்காது என்பதுவரை உண்மை. ஆனால், அவரது பயணம் சுமுகமாக இருக்காது என்பதும் உண்மை. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, பிரிட்டனின் பொருளாதாரத்தை அவா் எப்படி வழிநடத்தப் போகிறாா் என்பதைப் பொருத்துத்தான், ‘பிரெக்ஸிட்’ முடிவின் விளைவுகள் தெரியும்.

பிரெக்ஸிட்டை ஆதரிக்காத ஸ்காட்லாந்து தேசிய கட்சி, ஸ்காட்லாந்திலுள்ள 59 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஸ்காட்லாந்து தனியாகப் பிரிவது குறித்த கோருதல் வாக்கெடுப்புக்கு அந்தக் கட்சி வற்புறுத்தக்கூடும். அதேபோல, வடக்கு அயா்லாந்தும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதை விரும்பவில்லை. போரிஸ் ஜான்ஸனின் ‘பிரெக்ஸிட்’ பிடிவாதம் பிரிட்டனைத் துண்டாடுமா என்கிற ஐயப்பாடு இவற்றால் எழுகிறது.

பிரெக்ஸிட்டை எதிா்கொண்டதுபோல, பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அதன் விளைவுகளையும் எதிா்கொள்வாா் என்று பிரிட்டன் வாக்காளா்கள் கருதுகிறாா்கள். மக்கள் குரலே மகேசன் குரல்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT