சட்டம் கடமையைச் செய்யட்டும்!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும்,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு விசாரணைக்காக கைது செய்திருக்கிறார்கள்.  
உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்தின் தில்லி ஜோர் பாக்  இல்லத்தில் அழைப்பாணையை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை  சிபிஐ அதிகாரிகள் கதவில் ஒட்டினார்கள். அந்த அழைப்பாணைக்கு இணங்க அவர் விசாரணைக்குச் செல்லாததால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தன்னை விசாரிப்பதைத் தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் பெற்றுவந்த ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றத் தடை பெறுவதற்கான ப.சிதம்பரத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்தபோது, அவர்  சிபிஐ விசாரணைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்துக்கும், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் சென்ற ப.சிதம்பரம் தனது ஜோர் பாக் பங்களாவில் நுழைந்து, கதவை உள்ளுக்குள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதும், அதிகாரிகள் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்குக் கட்சித் தொண்டர்களை நிறுத்தியிருந்ததும், திட்டமிட்டே  வலுக்கட்டாயமாக சிபிஐ அதிகாரிகளால் தான் கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்த விரும்பினார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இரவு நேரத்தில் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சுவரேறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததில்  வியப்பில்லை. அவராகவே முன்வந்து  விசாரணைக்கு ஒத்துழைத்திருந்தால், சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருக்க வேண்டிய  அவசியம் ஏற்பட்டிருக்காது.
மத்திய அரசு தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சிபிஐ அமைப்பை தவறாகப் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டிலும் அர்த்தமில்லை. நீண்ட நாள்களாகவே  இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும், விசாரணையை முடக்கவும், தாமதப்படுத்தவும் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அனைத்து வழிமுறைகளையும் செய்து வந்தனர் என்பதையும் கருத்தில் கொண்டால், இந்தக் குற்றச்சாட்டும் அரசியல் ரீதியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலும் பல அரசியல் தலைவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடுத்தபோது, அவையெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கைகளாகக் கருதப்படாதபோது, சிதம்பரத்தின் கைது மட்டும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்படுவது விசித்திரமாக இருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிப்பதற்கு வலுவான பல காரணங்கள் இருக்கின்றன. ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குதாரர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி அரசுத் தரப்பு சாட்சியாக  மாறியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்குப் பிரதி உபகாரமாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்று  நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்திராணி முகர்ஜியையும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியையும் கேட்டுக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் உதவியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
செஸ் மேனேஜ்மெண்ட், அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் ஆகிய இரு நிறுவனங்களின் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்குப் பணம் வழங்கியிருப்பதாக  சிபிஐ விசாரணையில் இந்திராணி முகர்ஜி தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரத்தையும், ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரித்து வருகிறது.  சிபிஐ எழுப்பும் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. 
ப.சிதம்பரத்துக்கும் அவரது மகன் கார்த்திக்குக்கும் சொந்தமான நிழல் நிறுவனங்கள் என்னென்ன? பிரிட்டிஷ் வெர்ஜின் தீவிலிருந்து கார்த்திக்குக்குப் பணம் வந்திருப்பது எதற்காக? பார்சிலோனா டென்னிஸ் க்ளப் மட்டுமல்லாமல்,  இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்க சிதம்பரத்துக்கும் அவரது மகனுக்கும்  எங்கிருந்து பணம் வந்தது? - இவையெல்லாம் சிபிஐ எழுப்பியிருக்கும் சில கேள்விகள்.
ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், இப்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் ப.சிதம்பரம் நான்கு முறை நிதியமைச்சராக இருந்தவர். நாடறிந்த பிரபல வழக்குரைஞர். மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்த அனுபவசாலி. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பதிவான உடனேயே சிபிஐ-யின்  கேள்விகளுக்குத் தெளிவாகவும், விளக்கமாகவும்  சிதம்பரமும் அவரது மகனும்  நேரடியாகவும், பொதுவெளியிலும்  பதிலளித்திருக்க வேண்டும். 
சிபிஐ-யின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்கிற அவரது வாதம் சரியாக இருக்குமானால்,  சட்டத்தைக் கரைத்துக் குடித்த ப.சிதம்பரம் சுலபமாக அதை  எதிர்கொள்ள முடியும்.  பிறகு ஏன்  முன்ஜாமீன் மனுவுடன் உயர்நீதிமன்றத்துக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் போக வேண்டும் என்கிற கேள்விக்குப் பதில் சொல்லாதவரை, சிபிஐ-யின் பழிவாங்கும்  நடவடிக்கை என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. 
பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருந்தாலும்கூட, ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முந்தைய அரசின் முறைகேடுகளும், அதில் பதவி வகித்தவர்களின் தவறுகளும் அடுத்த ஆட்சியால் விசாரிக்கப்படுவதில் தவறேயில்லை. அதை அரசியல் பழிவாங்குதல் என்று கருதக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுக்காமல் போனால், ஊழல்களும் முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com