பயணத்தின் பின்னணி!

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பூடான் அரசு முறைப் பயணத்துக்கு சில காரணங்கள் உண்டு. ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையால் மேற்கு எல்லையில் பாகிஸ்தானுடனான உறவு சீர்குலைந்திருக்கும் நிலையில், கிழக்கு எல்லையில் நட்புறவை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வங்கதேசத்துடனும் பூடானுடனும் இந்தியாவுக்கு இருக்கும் நெருக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் அரசு முறைப் பயணத்தை நாம் கருத வேண்டும்.

கடந்த சனிக்கிழமை பூடான் தலைநகர் திம்பு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும், அதைத் தொடர்ந்து பிரதமர் லோதே ஷேரிங்குடனான சந்திப்பும் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர நட்புறவைப் பறைசாற்றின. இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தாயின. 

கடந்த முறை பிரதமராக 2014-இல் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு தனது முதல் அரசு முறைப் பயணத்துக்கு பூடானைத்தான் தேர்ந்தெடுத்தார். அதன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பலவீனப்பட்டிருந்த இந்திய-பூடான் உறவை பிரதமர் நரேந்திர மோடி அரசு ஓரளவுக்குச் சீரடைய வைத்தது. நேபாளத்தையும் பூடானையும் மிகவும் சாதுர்யமாக கையாளாமல் போனால் அவை சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் அபாயம் நிறையவே இருப்பதுதான் அதற்குக் காரணம்.

பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே, பூடான் பிரதமர் லோதே ஷேரிங்கும் கடந்த நவம்பர் மாதம் தனது முதல் அரசு முறைப் பயணத்துக்கு தேர்ந்தெடுத்தது இந்தியாவைத்தான். பூடானின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு (2018-23) ரூ.4,500 கோடியை இந்தியா வழங்குகிறது. அதேபோல, பூடானின் பாதுகாப்பை 2017-இல் சீனாவின் டோக்காலாம் ஆக்கிரமிப்பின்போது இந்தியா உறுதிப்படுத்தியது. இவையெல்லாம்தான் இரு நாடுகளின் உறவையும் நெருக்கமாக வைத்திருக்க உதவுகின்றன. 

இமயமலையின் பனிபடர்ந்த சிகரங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பூடானை இதுவரை எந்தவோர் அந்நிய நாடும் அடிமைப்படுத்தியதில்லை, தனது காலனியாக மாற்றியதில்லை. அதனால்தான் பூடானின் தனித்துவமான கலாசாரமும், வாழ்க்கை முறையும் பாதுகாக்கப்படுகின்றன. முன்னாள் அரசர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக், 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஜனநாயக சீர்திருத்தத்திற்குப் பிறகுதான், சுமார் 8 லட்சம் மக்கள் வாழும் பூடான் மிகப் பெரிய மாற்றங்களைக் காணத் தொடங்கியது. அதன் விளைவாக பூடானின் பொருளாதாரம் வளரத் தொடங்கியது என்றாலும், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. 

இந்திய - பூடான் உறவில் மிக முக்கியமாக பங்கு வகிப்பவை நீர் மின்சக்தித் திட்டங்கள்தான். ஏறத்தாழ 30,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் பூடானுக்கு இருக்கிறது. அதில் இதுவரை 1,614 மெகாவாட் மின் உற்பத்தியைத்தான் அந்த நாடு எட்டியிருக்கிறது. பூடானின் மொத்த வருவாயில், மூன்றில் ஒரு பங்கு வருவாய் மின்சக்தியிலிருந்துதான் கிடைக்கிறது. அந்த நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 10% மின்சாரத்தின் மூலம் பெறப்படுகிறது. 2020-இல் உலகின் 15 பெருநகரங்கள் தெற்காசியாவில் இருக்கப்போகின்றன. இந்தச் சூழலில், பூடானால் சுற்றுச்சூழலைப் பாதிக்காத சுத்தமான எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தால், இந்திய - பூடான் உறவின் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

இந்தியாவின் உதவியுடன் நிறுவப்பட்ட மாங்க்டெச்சு நீர்மின் நிலையத்தை அரசு முறைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். இதேபோல, மேலும் பல நீர்மின் நிலையங்கள் இந்தியாவின் உதவியுடன் பூடானில் நிறுவப்படுகின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தை பூடான் பிற நாடுகளுக்கு விற்பதற்கு இந்தியா தேவைப்படுகிறது. பூடான், வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே மின் உற்பத்தி, மின் பகிர்மானம் குறித்த ஒப்பந்தம் ஏற்கெனவே இருக்கும் நிலையில், வங்காள விரிகுடாவை ஒட்டிய ஏனைய நாடுகளுக்கும் உற்பத்தியாகும் மின்சாரத்தை பூடானால் வழங்க முடியும். இரு நாடுகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத உறவுக்கு அது ஒரு முக்கியமான காரணம்.

கடந்த பத்து ஆண்டுகளாக இயந்திரங்கள், சிமெண்ட் என்று தொடங்கி பொம்மைகள் வரை சீனப் பொருள்கள் பூடானுக்குள் வரத் தொடங்கியிருக்கின்றன. இறக்குமதியை மிக அதிகமாகச் சார்ந்திருக்கும் நாடாக பூடான் இருப்பதால், சீனா அதைப் பயன்படுத்திக் கொள்கிறது. என்னதான் மானியமாகவும், கடனாகவும் பூடானுக்கு இந்தியா வாரி வழங்கினாலும், சீனா அளவுக்கு பொருளாதார ரீதியாக நம்மால் உதவ முடிவதில்லை. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், விளையாட்டு, சுற்றுலா என்றும் பெளத்த மத ரீதியாகவும் பூடானில் சீனா நுழைந்திருக்கிறது. சீனப் பல்கலைக்கழகங்களில் பூடானிலிருந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இவை மூலம் பூடானுடனான தனது நெருக்கத்தை சீனா அதிகரித்து வருவதன் பின்னணியில், ஆக்கிரமிப்பு நோக்கமும் இருக்கக் கூடும்.

இந்தப் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முறைப் பயணத்தை அணுகினால் அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com