வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பாதி கிணறு கடந்தது...

By ஆசிரியர்| Published: 30th April 2019 02:41 AM


பாதி கிணறு தாண்டியிருக்கிறது 2019 மக்களவைத் தேர்தல். 
17-ஆவது மக்களவைக்கான தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு  வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களிலுள்ள 72 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.  
2019 மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 282 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகள் நான்காவது வாக்குப்பதிவு நடந்திருக்கும் மாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை. பாஜக 2014-இல் பெரும் வெற்றியடைந்த மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு என்பதால் நான்காவது கட்டம் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 
வாக்குப்பதிவு நடந்த 72 தொகுதிகளில், கடந்த தேர்தலில் பாஜக 56 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதனால், இப்போது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அந்தத் தொகுதிகள் அனைத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நான்காவது கட்ட வாக்குப்பதிவில் மகாராஷ்டிரத்தில் 17, ராஜஸ்தானில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஏற்கெனவே 302 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், இப்போது நடந்த 72 தொகுதிகளையும் சேர்த்தால் இதுவரை 374 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அடுத்த மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா, கிடைக்காதா என்பதை இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவுகள் அநேகமாக முடிவு செய்திருக்கும்.
சராசரியாக 64% வாக்குகள் நான்காம் கட்டத் தேர்தலில் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. இதில் மேற்கு வங்கத்தில் சராசரியைவிட அதிகமாக 76.47% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிகரித்த வாக்குப்பதிவு முதல்வர் மம்தா பானர்ஜிக்கோ அல்லது பிரதமர் நரேந்திர மோடிக்கோ உள்ள ஆதரவின் அறிகுறியா அல்லது திரிணமூல் காங்கிரஸுக்கோ பாஜகவுக்கோ காணப்படும் எதிர்ப்பலையின் அறிகுறியா என்பதை தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும். 
அந்த மாநிலத்தில் நடந்த எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவின்போது சில வாக்குச்சாவடிகளில் மோதல் ஏற்பட்டிருப்பதும், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின்  வாகனத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அடித்து நொறுக்கியிருப்பதும், கும்பலைக் கலைக்க காவல் துறையினர் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதும் தேர்தல் முடிவுகளைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கின்றன. 
மகாராஷ்டிரத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்த 17 தொகுதிகளிலும் கடந்த 2014 தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. மும்பை, கொங்கண், வட மகாராஷ்டிரா பகுதிகளில் உள்ள இந்த 17 தொகுதிகளின் முடிவை ஒட்டித்தான் மகாராஷ்டிர மாநிலத்தின் 48 தொகுதிகளின் முடிவுகளும் இருக்கக்கூடும். 
கடந்த 2014 தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து மாநில ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராகவும், இரண்டு முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்தனர். இந்த முறை ஆட்சிக்கு எதிரான மனநிலையை பாஜக - சிவசேனை கூட்டணி எதிர்கொள்கிறது. மகாராஷ்டிரத்தில் பரவலாகக் காணப்படும் வறட்சியும், வேளாண் இடரும் பாஜக கூட்டணியால் கடந்த முறை வெற்றி பெற்ற 17 தொகுதிகளையும் இந்த முறை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற ஐயப்பாட்டுக்குக் காரணமாகின்றன.
அதேபோல, ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்திருக்கிறது. தேர்தல்களின்போது எல்லைப்புற மாநிலமான ராஜஸ்தானில் எப்போதுமே தேசப் பாதுகாப்பு முக்கியமான பங்கு வகிப்பது வழக்கம். இந்த முறை பாலாகோட் தாக்குதலும், பயங்கரவாத அமைப்புகள் மீதான துல்லியத் தாக்குதல்களும் எந்த அளவுக்கு பாஜகவுக்கு கை கொடுக்கும் என்பதைப் பொருத்து ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் அமையும். 
ராஜஸ்தானில் கடந்த டிசம்பர் மாத சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும்கூட, அதிக வாக்கு வித்தியாசம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இருக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு வாக்குறுதி அளித்ததுபோல விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்பது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ராஜஸ்தானில் ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த 13 தொகுதிகளில், 12 தொகுதிகளில் கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை பாஜகவுக்கு எதிராக பலமான சமாஜவாதி - பகுஜன்சமாஜ் கூட்டணி களத்தில் இருந்தாலும்கூட, கான்பூர், உன்னாவ், ஃபருக்காபாத், ஜான்சி உள்ளிட்ட பல முக்கியமான தொகுதிகளில் காங்கிரஸ் முனைப்புடன் களமிறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியிருப்பதால் அது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும். 
எந்த ஓர் அலையும் இல்லாத தேர்தலில், வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பது ஆளுங்கட்சிகளின் பலத்தைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும், பலவீனமும்தான். அதை பாஜக நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான், இந்துத்துவாவை முன்னிறுத்தாமல் நான்காம் கட்ட தேர்தலில் ஜாதி அரசியலை முன்னிறுத்த முற்பட்டிருக்கிறது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அமெரிக்கா படுத்தும் பாடு!| வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழல் குறித்த தலையங்கம்
மூதறிஞரின் மூதுரை!| தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்த தலையங்கம்
புதை குழியில் பிஎஸ்என்எல்...| மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் வீழ்ச்சிக்கான காரணம் குறித்த தலையங்கம்
சோனியா எதிர்கொள்ளும் சவால்! | சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மீண்டும் எழ முடியாதது குறித்த தலையங்கம்
கலாசாரக் கோளாறு! | அதிகரித்துவிட்டிருக்கும் 'கட்அவுட்' - பேனர்' கலாசாரம் குறித்த தலையங்கம்