சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தன்னம்பிக்கையின்மை!

By ஆசிரியர்| Published: 29th April 2019 02:20 AM

அரசியலில் துணிச்சலுடன் முடிவெடுப்பவர்கள்தான் அநேகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி, தனக்குத் தொடர்பில்லாத உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் களமிறங்கியபோது, அவரது துணிச்சலை ஒட்டுமொத்த இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது.  அதேபோன்றதொரு வாய்ப்பு இந்த முறை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான நேரு குடும்பத்து வாரிசு பிரியங்கா காந்திக்கு இருந்தும்கூட அதை அவர் நழுவவிட்டது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கே மிகப் பெரிய அரசியல் சறுக்கல் என்றுதான் குறிப்பிட வேண்டும். 
அகில இந்திய அளவில் 17-ஆவது மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சியாக வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் இருக்கும்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்களை அந்தக் கட்சி வென்றாக வேண்டும். அப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் சமாஜவாதி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி-ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணியில் இணையாமல் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ். அப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்கிற முடிவை பிரியங்கா காந்தி எடுத்திருக்கிறார்.
வாராணசியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தனது வேட்
பாளரை அறிவிப்பதற்காக சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி காத்திருந்தது. ஒருவேளை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக இருந்தால், ராகுல் காந்தி  போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி  போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளைப் போலவே வாராணசியிலும் தங்களது  வேட்பாளரை நிறுத்தாமல் பிரதமர் மோடியை தோற்கடிக்க பிரியங்கா காந்தியை ஆதரிக்க அந்தக் கட்சிகள் தயாராகவே இருந்தன. பெரிய எதிர்ப்பு இல்லாமல் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக காங்கிரஸ் உதவியிருக்கிறது என்று கூடக் கூறலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் தொகுதியான வாராணசியில் உலகத் தரத்திலான புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரு நகரங்களுக்கு நிகரான அளவில் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகருக்கு வரும் நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. வாராணசியின் வளர்ச்சிக்காக ரூ.21,762 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும்போது இவையெல்லாம் வியப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் எல்லாம் வாராணசியின் சாமானிய வாக்காளரின் அன்றாட வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
நரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான புனித கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக ரூ.20,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வாராணசிக்கு விஜயம் செய்யும்போது, கங்கையில் இருந்து அசுத்தமான தண்ணீர் அகற்றப்பட்டு நல்ல தண்ணீர் அவர் வரும் சில மணிநேரங்களுக்கு முன்னால் கொட்டப்படுகிறது என்பதுதான் உண்மை. 
வாராணசியின் பாரம்பரிய நெசவாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதைவிட மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் வாராணசி வாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில், நரேந்திர மோடி பாணி  வளர்ச்சியின் மாயத்தோற்றம் என்கிற பலூனை உடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு கிடைத்தும்கூட அவர் அதை நழுவவிட்டதன் பின்னணி பல காங்கிரஸ்காரர்களுக்கே புரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் கணிசமான வெற்றியைப் பெறாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்கிற உண்மையை நரேந்திர மோடி புரிந்து வைத்திருக்கும் அளவுக்குக்கூட, பல தலைமுறை வாரிசு அரசியல் அனுபவமுள்ள  நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெரிந்துகொள்ளவில்லை. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டது முதல் அவருக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பும் ஆதரவும் வாராணசியில் அவர் துணிந்து நரேந்திர மோடிக்கு எதிராகக் களமிறங்கி இருந்தால், வாராணசியிலும் உத்தரப் பிரதேசத்திலும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு சாதகமான ஆதரவு அலையையே எழுப்பியிருக்கக்கூடும். 
அமேதியில் வெற்றி பெற முடியாதோ என்கிற சந்தேகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் பாதுகாப்பான வயநாடு தொகுதியில் போட்டியிடுவதும், வாராணசியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் பிரியங்கா காந்தி களமிறங்காததும் காங்கிரஸ் கட்சி தன்னம்பிக்கையில்லாமல்தான் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தலைவலியல்ல, புற்றுநோய்!
சட்டம் கடமையைச் செய்யட்டும்!
வரவேற்கிறோம், ஆனால்...
வீழ்ச்சியும், கேள்வியும்!
மக்கள்தொகையும் பிரச்னையும்!