கண்ணீர்த் துளியின் கண்ணீர்!

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் கடந்த ஞாயிறன்று


உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் கடந்த ஞாயிறன்று மூன்று தேவாலயங்கள், நடத்திர விடுதிகள் உள்பட மொத்தம் எட்டு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை 290 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படையினர் ஏழு பேர் இலங்கைப் பிரஜைகள் என்று தெரிகிறது. இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் அமைதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள புனித அந்தோணி தேவாலயம், இலங்கையின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான நீர்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு நகரில் புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து கொண்டிருந்த சிறப்பு வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. கொழும்பு நகரிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 27-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்துமகா சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி என்று அழைக்கப்படும் இலங்கை, புராண காலம் தொட்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே தொடர்கிறது என்பது வேதனையளிக்கிறது. பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்ட மிகவும்  கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பாகத்தான் இருக்கும். இப்படியொரு கொடூரமான தாக்குதல் தீவிரமாக சிந்தித்துத்தான் திட்டமிடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மதத் தீவிரவாதிகளாகத்தான் இருக்க முடியும் என்பது, கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து தாக்கியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது. 
கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித  பயங்கரவாதத் தாக்குதலும் இல்லாமல் இருந்த இலங்கையின் அமைதியைக் குலைப்பதுபோல நடந்தேறியிருக்கும் இந்தத் தொடர் வெடிகுண்டு வெடிப்பு, யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முக்கியமான தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தையும் தற்கொலைப் படையினர் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா 10 நாள்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அதன் பின்னணியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. 
இத்தனைக்குப் பிறகும் துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனும்போது, இதற்குப் பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்பு வலிமையான, அடிப்படை கட்டமைப்புடன் காணப்படுகிறது என்று தெரிகிறது. ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் பின்னணியில், இஸ்லாமிய அல்லது பெளத்த மதத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று காவல் துறை கருதுகிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழு இருப்பதாகப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டாலும், எந்தவொரு மதக் குழுவுடனும் இந்தத் தாக்குதலைத் தொடர்புபடுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை. எந்தவோர் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை.
நியூஸிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கருதுவதும், ஆதாரமற்ற ஊகமாகத்தான் இருக்கும். 
இலங்கையைப் பொருத்தவரை, ஈழத் தமிழர் பிரச்னையேகூட தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையேயான போராட்டம் மட்டுமல்ல. இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே நடந்த போராட்டமாகவும் அதைக் காண வேண்டும். இலங்கையில் தமிழர்களின் வளர்ச்சியை பெளத்த மதத்தைச் சேர்ந்த  சிங்களர்கள், இந்து மத வளர்ச்சியாகப் பார்க்க முற்பட்டனர். அதேபோல, இப்போது அதிகரித்துவரும் கிறிஸ்தவ மதமாற்றம் சிங்களர்களை, குறிப்பாக பெளத்த பிக்குகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் விளைவாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்  என்பது புதிதொன்றுமல்ல. கடந்த 2015 முதல் தற்போது நடந்த தாக்குதல் வரை இதுவரை தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவப் பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும்  சுமார் 200 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 
2014 ஜனவரி மாதம் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2017-லும் அதேபோல வடமேற்கு இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் மதமாற்றம்தான் முக்கியமான காரணம். மதமாற்றத்தால் தங்களது சொந்த பூமியில் தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என்கிற அச்சம்தான் சிங்கள-பெளத்தர்களை இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றன.
அதிபர் சிறீசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கு இடையில் இலங்கையில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இன்னொருபுறம், இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலை எதிர்பார்த்து  அதில் அரசியல் ஆதாயம் தேட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச காத்திருக்கிறார். நடந்தேறியிருக்கும் மாபாதகத் தாக்குதலுக்குக் காரணம், மதமாகவும் இருக்கலாம், அரசியலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்காது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com