காத்திருப்பில் தமிழகம்!

பதினேழாவது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்திருக்கிறது. 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன்பிரதேசத்தில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற


பதினேழாவது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்திருக்கிறது. 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன்பிரதேசத்தில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முற்றிலுமாக அமைதியாக நடைபெற்றது என்று கூற முடியாமல் செய்துவிட்டிருக்கிறது கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், மாநிலக்  கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆளும் பாஜகவைப் பொருத்தவரை நேற்று நடந்த இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் கடந்த தேர்தலில் பெற்ற 27 இடங்களையும், காங்கிரஸ் பெற்ற  12 இடங்களையும் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடுகின்றன. ஒடிஸா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிஸா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் தங்களது மக்களவை எண்ணிக்கை பலத்தை அதிகரிக்கும் முனைப்பில் இருக்கின்றன.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கர்நாடக மாநிலம் தும்கூரு தொகுதியில் இருந்தும், முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் இருந்தும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அந்த மாநிலத்தில் பிஜேப்பூர், ஹிஞ்சிலி சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் மக்களின் அங்கீகாரத்துக்காக நேற்று களம் கண்ட தலைவர்களில் சிலர். இரண்டாவது கட்டத் தேர்தலில் 1,606 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் பட்டதாரிகள் 48% என்றால், கோடீஸ்வரர்கள் 27%  பேர். மகளிர் 8% என்றால், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் 16% பேர்.
நேற்று நடந்த மக்களவைக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் கூர்ந்து கவனிக்கப்படுபவை ஒடிஸா சட்டப்பேரவைக்கும், தமிழக சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்குமான போட்டிகள்தான். தமிழகத்தைப் பொருத்தவரை, மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களும் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கானவையா, இல்லை திமுகவுக்கு ஏமாற்றமானத்துக்கானவையா என்பதைத் தீர்மானிப்பவையாக அமையும். ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக இது அமைய இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவும், அதிமுகவில் தினகரன் அணியால் ஏற்பட்ட பிளவும், கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புவரை திமுக 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததும், அந்தக் கட்சி ஏற்படுத்திக் கொண்ட வலுவான கூட்டணியும் திமுகவின் நூற்றுக்கு நூறு வெற்றி என்கிறக் கனவைத் தகர்த்து, இப்போது போட்டியை நீயா, நானா என்கிற அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
கடந்த 26 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில், தமிழகம் முழுவதும் 8,000 கி.மீ. பயணித்து, நாள்தோறும் பத்துக்கும் அதிகமான தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்தித்  தன்னை தமிழகம் முழுவதும் அறிந்த தலைவராக நிலைநிறுத்திக் கொண்டு விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அவரது ராஜதந்திரம், தேர்தலிலும் வெற்றியாக முடியுமானால், அவர் கூறியிருப்பதுபோல, பழனிசாமியின்அரசியல் வாழ்க்கை இனிதான் தொடங்கப் போகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குத்தான் முதல்வர் பழனிசாமியை விடவும், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமானவையாக இருக்கப் போகின்றன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அவரால் கட்சித் தலைமையைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை என்பதும், அதற்குப் பிறகு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் தொகையைக்கூடப் பெற முடியவில்லை என்பதும், தொண்டர்கள் மத்தியிலேயே அவரது தலைமை குறித்த சந்தேகத்தை எழுப்பியதை மறுக்க முடியாது.
இந்தப் பின்னணியில்தான், இப்போது மக்களவைக்கான தேர்தலும், 22 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்றன. மக்கள் மத்தியில் அதிமுக குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. அதிமுக அதிக மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறாமல் போனாலோ, இடைத் தேர்தல்களில் கணிசமான தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளாமல் போனாலோகூட யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், குறைந்தது 30 மக்களவைத் தொகுதிகளிலாவது திமுகவும் அதன் கூட்டணியும் வெற்றி பெறாமல் போனால், மு.க.ஸ்டாலினின் தலைமை குறித்த ஐயப்பாடு எழும்பக்கூடும். 
அதிமுகவுக்கு தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள இடைத்தேர்தல்களில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். திமுக 22 இடங்களில் 21 இடங்களை வென்றால்தான், ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி அமைக்கவோ முடியும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டால், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும். கட்சியில் பிளவு ஏற்பட்டாலும் வியப்படையத் தேவையில்லை.
டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் இருவரின் வருங்காலமும், திமுக தலைவர் ஸ்டாலினின் எதிர்காலமும் நேற்று நடந்த வாக்குப்பதிவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதிமுக அரசு ஆட்சியில் தொடருமா, தொடராதா என்பதும்தான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com