வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ரஞ்சன் கோகோய் எதிர்கொள்ளும் சவால்!

By ஆசிரியர்| Published: 15th September 2018 01:53 AM


தனக்கு எதிரான விமர்சனங்களை வளரவிட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை கடைசி நேரத்தில் பொய்யாக்கி, அவர்கள் முகத்தில் கரியைப் பூசுவது பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர உத்திகளில் ஒன்று. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி இருக்கிறது மத்திய அரசின் முடிவு. மரபுப்படி உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். 
அரசியல் சாசனம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம் குறித்து எதுவும் கூறவில்லை. பணி மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படும் மரபு பின்பற்றப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதியுடன் இப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறுகிறார். அவரது பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் மூத்த நீதிபதியை அவர் பரிந்துரைக்க, அது மத்திய சட்ட அமைச்சகத்தால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நீதிபதிகள் செலமேஸ்வர், மதன் பி.லோந், குரியன் ஜோசப் ஆகியோருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர் நீதிபதி ரஞ்சன் கோகோய். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பதும், தலைமை நீதிபதிக்கு நெருக்கமான பணி மூப்புக் குறைந்த நீதிபதிகளின் அமர்வுக்கு முக்கியமான, சர்சைக்குரிய வழக்குகள் வழங்கப்படுகின்றன என்பதும் அவர்களது குற்றச்சாட்டுகள். எந்த அமர்வுக்கு எந்த வழக்கை ஒதுக்குவது என்பது உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் தலைமை நீதிபதியின் தனி உரிமை என்கிற மரபின் செயல்பாட்டுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட நான்கு நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். 
நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு இடையே இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது புதிதல்ல. இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முதலாக நீதிபதிகள் செலமேஸ்வர் தலைமையில் நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தலைமை நீதிபதி மீதான தங்களது விமர்சனங்களைப் பொதுவெளியில் தெரிவித்தது மிகப்பெரிய பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அதனால், நீதிபதி ரஞ்சன் கோகோயை தனக்குப் பிறகு தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தயங்கக்கூடும் என்று நீதிபதி செலமேஸ்வரே சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
சுதந்திர இந்தியாவில் பணி மூப்பு அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படும் மரபு இரண்டு முறை மீறப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு மரபு மீறலுக்கும் காரணம், அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி. நீதிபதி கே.எஸ் ஹெக்டேயை நிராகரித்து, நீதிபதி ஏ.என். ரேயையும், நீதிபதி ஹெச்.ஆர். கன்னாவை புறக்கணித்து, நீதிபதி எம்.எச். பேக்கையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
களாக அன்றைய இந்திரா காந்தி அரசு நியமித்தபோது, ஹெக்டேயும், ஹெச்.ஆர். கன்னாவும் பதவி விலகி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அது போன்ற சூழல் இப்போது ஏற்படக்கூடும் என்றும், இந்திரா காந்தியின் வழியில் பிரதமர் நரேந்திர மோடியும் பணி மூப்புக்கு முன்னுரிமை அளிக்காமல் தனக்கு சாதகமான ஒருவரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் துணையுடன் நியமிக்கக்கூடும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன.
காங்கிரஸ்காரரான, அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசவ் சந்திர கோகோயின் மகன்தான் நீதிபதி ரஞ்சன் கோகோய். பல வழக்குகளில் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்பதும், நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர் என்பதும் மரபு மீறலுக்கான நியாயங்களாக ஆளும் கட்சியால் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகாமல், மரபு மீறப்படாமல் நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதற்கு நரேந்திர மோடி அரசைப் பாராட்ட வேண்டும். 
1954-ஆம் ஆண்டு பிறந்த ரஞ்சன் கோகோய் 1978-ஆம் ஆண்டில் வழக்குரைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்து 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இப்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அக்டோபர் 3-ஆம் தேதி அன்று பதவியேற்க இருக்கிறார். இவருக்கு முன்னர் பதவி வகித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளைப் போலவே, இவரையும் எதிர்நோக்குகிறது நீதிமன்றங்களில் தீர்ப்புக்காகக் காத்துக்கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள். 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகிக்கும் அடுத்த ஓராண்டு காலத்திலாவது, தேங்கிக்கிடக்கும் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு, காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஓரளவுக்காவது குறைக்கப்பட்டால், அதுவே அவரது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். 2019 பொதுத்தேர்தல் நடக்கும்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கப் போகிறார் என்பதுதான் அவரது நியமனத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!