திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

தேவை "விழி'ப்புணர்வு!

By ஆசிரியர்| Published: 16th October 2018 02:57 AM
Advertising
Advertising

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா என்கிற ஊரில் ஒரு கல்விச்சாலை. வகுப்புத் தோழிகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, 14 வயது அன்ஷு, 12 வயது மஸ்கன், 6 வயது ஷ்ரஸ்டி மூவரும் தங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் வருவதற்காக மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தார்கள். மூவருமே கண் பார்வையற்றவர்கள். அவர்களுடன் மற்ற மாணவிகள் பேசுவது கூடக் கிடையாது. அவர்களுடன் பேசினால் தாங்களும் பார்வை இழந்து விடுவோம் என்கிற மூட நம்பிக்கை அவர்களுக்குச் சொல்லித்தரப் பட்டிருக்கிறது.
உலகிலுள்ள பார்வை இழந்தவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 80 லட்சம் பார்வை இழந்தவர்களில், 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வை இழந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. 75% பார்வைக் குறைவு அல்லது இழப்பு குணப்படுத்தக் கூடியவை என்பது கூடப் பலருக்கும் தெரியாது.
"காட்ராக்ட்' என்று பரவலாக அறியப்படும் கண் புரை நோய், "க்ளூகோமா' எனப்படும் விழி விறைப்பு நோய், விழித்திரை, படலப் பிரச்னைகள் ஆகியவை குணப்படுத்தக் கூடியவை. பார்வைக் குறைவு அல்லது இழப்புப் பிரச்னைகளில் 63% கண் புரை, 10% விழித்திரை, படலப் பிரச்னைகள், 5% விழி விறைப்பு எனும்போது, மக்கள் மத்தியில் பார்வைக் குறைவுப் பிரச்னை குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது தெரிகிறது.
இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகைக்கு 12,000 கண் மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரப்படி பார்த்தால், லட்சம் பேருக்கு ஒரு கண் மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இரண்டரை லட்சம் பேருக்கு ஒரு கண் மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள்.
அதிகரித்து வரும் சர்க்கரை நோய் பாதிப்பு, பலருக்கும் பார்வைக் குறைவை ஏற்படுத்துகிறது என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை விட, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து பார்வைக் குறைவாகத்தான் இருக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை"ரெட்டினா' எனப்படும் விழித்திரையை முறையாக சோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினாலும் கூட, இன்னும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
பார்வைக் குறைவும், பார்வை இழப்பும் அடித்தட்டு மக்களைத்தான் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. தங்களது உடல் நலம் குறித்து சிந்திக்கவிடாமல் அவர்களை வறுமை தடுக்கிறது. போதுமான கல்வி அறிவு இல்லாமல் இருப்பது, அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே போராட்டம் எனும் நிலையில் வாழ்வது, சமூக ரீதியாகப் பின்தங்கி இருப்பது ஆகியவை நகரங்களானாலும், கிராமங்களானாலும் அடித்தட்டு மக்களைத்தான் மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு கண் மருத்துவமனைகள் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம்கள் அமைத்துத் தங்களாலான தொண்டாற்றி வருகின்றன என்பதையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு முனைப்புக் காட்டுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மைகள். ஆனாலும்கூடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாமல் இருப்பதுதான் மிகப்பெரிய ஆதங்கம்.
பார்வை அற்றவர்களாக இருந்தாலும், பேச முடியாத, செவித்திறன் இல்லாதவர்களாக இருந்தாலும், வேறு ஊனத்துடன் வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் இம்சை எத்தகையது என்பதைத் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதே, நமது குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையிலான பாடத்திட்டம் வகுத்தால் கூடத் தவறில்லை. அந்தக் குழந்தைகளுக்கு, பார்வையற்றவர்களாக, பேசவும், கேட்கவும் முடியாதவர்களாக, உடல் உறுப்பு செயல்பாடு முடக்கப்பட்டவர்களாக ஒவ்வொரு நாளைத் தேர்ந்தெடுத்து சில மணித்துளிகள் செயல்முறை விளக்கம் அளிக்க முற்பட்டால், அடுத்த தலைமுறையாவது மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை உணர்ந்த தலைமுறையாக உருவெடுக்கும்.
பெரும்பாலும் நடுத்தர வயதினரும், முதியோரும்தான் கண்புரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பார்வைக் குறைவு என்பது எந்தவோர் அலுவலகத்திலும், நிறுவனத்திலும் ஊழியர்களின் செயல்திறனைக் கட்டாயம் பாதிக்கும் என்பதால், கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி, ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் கண் பரிசோதனை நடத்துவதை "தொழிலாளர் நலச் சட்ட'த்தில் கட்டாயமாக்க வேண்டும்.
முதலில் குறிப்பிட்ட விதிஷா பள்ளி மாணவிகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அக்கறை எடுத்துக் கொண்டார். சிகிச்சை அளிப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளுக்குப் பார்வை திரும்பும் என்கிற நம்பிக்கை அவர்களின் பெற்றோருக்கு இருக்கவில்லை. அறுபது கி.மீ. தொலைவிலுள்ள போபாலுக்கு அவர்களை அழைத்துச் செல்லக் கூட அவர்களிடம் வசதியில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்கும், உத்தரவாதத்திற்கும் பிறகுதான் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அந்த சமூக ஆர்வலருடன் போவதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.
இப்போது, கண் பார்வை பெற்ற அன்ஷுவும், மஸ்கனும், ஷ்ரஸ்டியும் சக மாணவிகளால் ஒதுக்கப்படாமல் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பார்வைக் குறைவுடன் முறையான சிகிச்சை பெறாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவர்களைப் போன்று பார்வை பெற்றாக வேண்டும். இனியாவது விழித்துக் கொள்வோமே!
 

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...