சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

வேண்டாமே அணைகள்!

By ஆசிரியர்| Published: 11th October 2018 01:29 AM

இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, அதிகரித்து வரும் எரிசக்தித் தேவை. இந்தியாவின் 32 சதவீத மக்கள் நகரங்களில் வாழும் நிலையில், மின்சாரம், குடிநீர், வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதில் வியப்படைய ஒன்றுமில்லை. மரபுசாரா எரிசக்தியின் உற்பத்தி, ஒட்டுமொத்தமாக ஏனைய எரிசக்திகளை ஈடுகட்டுமளவுக்கு, அவற்றுக்கு மாற்றாக அதிகரிக்கவில்லை; அதிகரித்துவிடவும் முடியாது.
இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையில் 65 சதவீதம் அனல்மின் நிலையங்களால் பெறப்படுகிறது. 22 சதவீதம் புனல்மின் நிலையங்களாலும், 3 சதவீதம் அணுமின் நிலையங்களாலும், 10 சதவீதம் சூரிய மின்சக்தி, காற்றாலைகள் உள்ளிட்டவை மூலமும் பெறப்படுகின்றன. அணுமின் நிலையத்துக்கு எதிராக, சுற்றுச்சூழல் அடிப்படையில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், மரபுசாரா எரிசக்தியை சார்ந்து இயங்க முடியுமா என்று கேட்டால், இயலாது என்றுதான் கூறவேண்டும். 
இப்படிப்பட்ட சூழ்நிலையில், புனல்மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா என்றால், அதிலும் பிரச்னைகள் இருக்கின்றன. புனல்மின் நிலையங்கள் அமைப்பதற்காக அணைகள் கட்டியாக வேண்டும். அவை சுற்றுச்சூழலையும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. 
இந்தியா, சர்வதேச அளவில் கரியமில வாயு பிரச்னையில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அனல்மின் உற்பத்தியைக் குறைக்காமல் போனால், 2030-இல் இந்தியாவின் கரியமில வாயுவின் அளவு இரட்டிப்பாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியில் 53.7 சதவீதம் இந்தியாவிலேயே கிடைக்கிறது என்பதால் இத்தனை காலமும் நாம் அனல்மின் நிலையங்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வந்தோம். இப்போது அனல்மின் உற்பத்தியைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதிகரித்து வரும் இந்தியாவின் மின்சாரத் தேவையை ஈடுகட்ட அணுமின் நிலையங்களை அமைப்பதை, பாதுகாப்புப் பிரச்னைகளும் மக்களின் எதிர்ப்பும் தடுக்கின்றன. 
இந்தப் பின்னணியில்தான் இந்திய அரசு இமயமலையை ஒட்டிய பகுதிகளில் 292 அணைகளை அமைப்பது என்றும், அதன் மூலம் இந்தியாவின் புனல் மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்குவது என்றும் முடிவெடுத்திருக்கிறது. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாயும் 32 முக்கியமான நதிகளில் 28 நதிகளின் ஓட்டத்தைத் தடுத்து அணைகள் கட்டுவதற்கான திட்டமிடலைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. 
திட்டமிடப்படும் அணைகள் அனைத்தும் கட்டப்பட்டால், உலகிலேயே அதிகமான அணைகள் இருக்கும் பகுதியாக இமயமலைப் பகுதி உருவெடுக்கும். 32 கிலோ மீட்டருக்கு ஓர் அணை என்கிற அளவில் அணைகள் கட்டப்படும். அப்படிக் கட்டப்பட்டால், அது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலையும், சூழலியலையும் பாதிக்கும் என்பதை அரசு யோசித்துப் பார்த்ததா என்று தெரியவில்லை. 
அணைகள் எழுப்புவதன் மூலம் நதிகளின் சூழலியலுக்கு கடுமையான பாதிப்பை மனித இனம் ஏற்படுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. கட்டப்பட இருக்கும் அணைகளின் மூலம், நமது எரிசக்தித் தேவை முழுமையாக ஈடுகட்டப்படாது. ஆனால், மிக மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகள் அதனால் உருவாகக்கூடும். 
கடந்த சில ஆண்டுகளில், மக்களின் வரிப் பணத்தின் மூலம் எழுப்பப்பட்டு சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் பல புனல்மின் நிலையங்கள் இயற்கையின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை நாம் உணர வேண்டும். நில நடுக்கத்தாலும், நிலச் சரிவுகளாலும் அணைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2015-இல் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக மிகப் பெரிய இழப்பை எதிர்கொண்டது, புனல்மின் நிலையத் துறைதான். 
தற்காலிகமாக 20 சதவீத புனல்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்பதுடன், 30 புனல்மின் நிலையங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவுகளால், பாதிக்கப்பட்ட புனல்மின் நிலையங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. 
2013 ஜூன் மாதம், உத்தரகண்ட்டைத் தாக்கிய வெள்ளப் பெருக்கத்தால், செயல்பட்டுக் கொண்டிருந்த 10 பெரிய புனல்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன. 25 மெகா வாட்-க்கு குறைவாக மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டிருந்த 19 சிறிய புனல்மின் நிலையங்கள் வெள்ள பாதிப்பால் அழிவை எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து, புனல்மின் நிலையங்கள் அமைப்பது குறித்த மறு சிந்தனை எழுந்தது. இப்போது 28 அணைகளை இமயமலைப் பகுதியில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு இதையெல்லாம் உணர்ந்து செயல்பட வேண்டும். 
புனல்மின் நிலையங்கள் சுற்றுச் சூழலிலும் சூழலியலிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் நிரந்தரமானவை. அந்தப் பாதிப்புகளை சரிசெய்ய முடியாது. அதனால் இந்தியாவின் மின்சாரத் தேவையை ஈடுகட்ட அணைகளை நிறுவி, புனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்த திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 
ஆண்டுதோறும் 20 முதல் 30 சதவீதம் வரை மின் பகிர்மானத்தில் மின் இழப்பு ஏற்படுகிறது. இது இப்போதைய புனல்மின் உற்பத்தியின் அளவைவிட அதிகம். மின் பகிர்மான இழப்பையும், மின் திருட்டையும் கட்டுப்படுத்தினாலே போதும், 2030-க்கான எரிசக்தி இலக்கை எட்டிவிடலாம். இமயமலையில் அணைகள் அமைப்பதன் மூலம் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பாதிப்பை உணர்ந்து அந்தத் திட்டத்தை அரசு கைவிடுவதுதான் சரியான தொலைநோக்குச் சிந்தனையாக இருக்க முடியும்.
 

More from the section

வருமுன் காப்போம்!
விமான விபத்தும் அரசியலும்!
இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்?