சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மரபு நிலை திரியின்...

By ஆசிரியர்| Published: 09th October 2018 01:35 AM

சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஐயப்ப பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியளித்திருக்கிறது என்றால், இப்போது அந்தத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்கிற கேரள அரசின் முடிவு அவர்களை ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது. கேரள மாநிலமே கொந்தளித்து எழுந்திருக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் மட்டுமல்ல இந்திய எல்லைக்கு அப்பாலும் உள்ள லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
சபரிமலையில் வயது வரம்பில்லாமல் அனைத்துப் பெண்களும் பதினெட்டு படிகள் ஏறி, ஐயப்ப தரிசனம் செய்யலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்தக் கோயில் குறித்தோ, ஐயப்ப வழிபாட்டு முறை குறித்தோ எந்தவிதப் புரிதலும் இல்லாமல், பெண்ணுரிமை குறித்த மேலைநாட்டுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதுதான் உண்மை. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையில் அமைந்த அமர்வில், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்திருக்கும் ஒரே பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்கு இருந்த புரிதல், ஏனைய நீதிபதிகளுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கூட சபரிமலை கோயிலுக்குச் சென்றவர்கள் அல்ல. அவர்கள் சபரிமலையில் தவமிருக்கும் தர்ம சாஸ்தாவின் தத்துவம் குறித்த புரிதல் உள்ளவர்களும் அல்ல. சமயச் சம்பிரதாயச் சடங்குகளை, ஆண்- பெண் சமத்துவம் என்கிற கண்ணோட்டத்தில் அணுக முற்பட்டதிலிருந்து, நீதிபதிகள் சமயச் சம்பிரதாயங்களை சமூக நடைமுறையிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.
இறைத்தத்துவம் என்பதே நம்பிக்கையின்பாற்பட்டது. அதிலும் பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறையினரால் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயங்கள் குறித்து விதி எழுதும் முன்பு நீதிபதிகள், மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டுத் தங்களது கருத்தை நிலைநாட்ட முற்படுவது, அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது. 
இந்து சமய ஆலயங்கள் என்பவை பொது இடங்களல்ல. அவை பிரார்த்தனைக்காக பக்தர்கள் கூடிக் கலையும் இடமுமல்ல. தெய்வங்களின் உறைவிடங்கள் என்கிற நம்பிக்கையுடன் பக்தர்கள் கூடும் இறைத்தலங்கள். ஒவ்வோர் ஆலயத்திலும் உள்ள தெய்வத்திற்கு, அதாவது தேவதைக்கு, அதுஅதற்கான சில குணாதிசயங்கள் உண்டு என்பதும், வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அகற்றிவிட்டால் அந்த தெய்வமில்லை என்பது பக்தர்
களின் நம்பிக்கை. இதை ஏற்காதவர்கள், இது குறித்துக் கருத்துக் கூறலாம்; ஆனால், அந்த நம்பிக்கையில் தலையிடக்கூடாது.
சபரிமலையையே எடுத்துக் கொண்டால், சந்நிதானத்தில் இருக்கும் விக்கிரகம் மட்டுமே ஐயப்பனல்ல. 41 நாள்கள் விரதம், இருமுடிகட்டி மேற்கொள்ளும் பயணம், எரிமேலி பேட்டை துள்ளல், பந்தள அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள், பதினெட்டாம் படியும் அதன் புனிதமும், மகர ஜோதி என்றுஅதனுடன் தொடர்புடைய அனைத்தும் அடங்கியதுதான் ஐயப்பன் என்கிற தர்ம சாஸ்தா வழிபாடு. இதில் பிரம்மச்சரியம் என்பது பிரிக்கவோ தவிர்க்கவோ முடியாத அம்சம். இந்த சம்பிரதாயங்கள் இல்லையென்றால் சபரிமலை ஐயப்பனுக்கு மகத்துவம் இல்லை. அதுவும் ஏனைய நூற்றுக்கணக்கான ஐயப்பன் கோயில்களில் ஒன்றாகிவிடும். 
சபரிமலை குறித்த வழக்கொன்று தங்களுக்கு முன்னால் வரும்போது, குறைந்தபட்சம் அமிக்கஸ் க்யூரி எனப்படும் நடுநிலை அறிவுரையாளர் குழுவை அமைத்து, அவர்களின் கருத்தை அறிந்த பிறகு தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். சபரிமலை ஐயப்ப வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத, நூற்றாண்டுகால நம்பிக்கையை வெறும் ஆண்- பெண் சமத்துவம் என்கிற குறுகிய கண்ணோட்டத்தில் அணுகும் முற்போக்கு சிந்தனாவாதிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் தீர்ப்பை வழங்கி இருப்பதை, பெரும்பான்மைப் பெண்களே ஒத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் கடந்த சில வாரங்களாகப் பரவலாக நடக்கும் பேரணிகள் எடுத்துரைக்கின்றன.
கேரள மாநிலத்தில், 1957-இல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் தலைமையில், உலகிலேயே முதன் முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அமைச்சரவைக்கு எதிராக 1959-இல் நடந்த விமோசன சமரம் போல, இப்போது பினராயி விஜயன் தலைமையினான இடதுசாரி அரசுக்கு எதிராகக் கேரளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. இறை நம்பிக்கை இல்லாத அரசுக்கு எதிராக, ஐயப்ப பக்தர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள். இதனால், ஆட்சி உடனடியாகக் கவிழாமல் இருக்கலாம், ஆனால் இடதுசாரிகளின் கடைசிக் கோட்டையும் சரியக்கூடும்.
மண்டல பூஜைக்கு சபரிமலை திறக்கப் போகிறது. நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என்பதற்காக இறை நம்பிக்கையுள்ள 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டுவிடப் போவதில்லை. ஆனால், லட்சக்கணக்கான ஐயப்பன்மார்களுக்கு மத்தியில் வறட்டுப் பெண்ணுரிமை பேசும் இறை நம்பிக்கை இல்லாத சில முற்போக்குவாதிப் பெண்கள் பிடிவாதமாகச் செல்லக்கூடும். அவர்களின் பாதுகாப்புக்காக நூறோ, ஆயிரமோ பெண் காவல்துறையினர் பணி அமர்த்தப்படலாம். வீம்பு, விபரீதத்தில் முடியாமல் இருக்க வேண்டும்.
சபரிமலையில் பெண்களின் சம உரிமையை நிலைநாட்ட முற்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் ஒரு கேள்வி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32. இதில் சரிபாதி வேண்டாம், கால் வாசி இடங்கள் கூட பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லையே ஏன்? வெறும் இரு பெண் நீதிபதிகள் மட்டுமே இருக்கிறார்களே, எங்கே போயிற்று நீதிமன்றங்களில் பெண்களுக்கான சம உரிமை?
 

More from the section

வருமுன் காப்போம்!
விமான விபத்தும் அரசியலும்!
இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்?