சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ராஜதந்திர சதுரங்க ஆட்டம்!

By ஆசிரியர்| Published: 08th October 2018 03:21 AM

கடந்த வாரம் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 19-ஆவது இந்திய - ரஷிய கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்ற புது தில்லி வந்திருந்தார். இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக ரஷியாவிடமிருந்து அதிநவீன எஸ்400 ரக ஏவுகணைகளை ரூ.37,000 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையே கையொப்பமிடப்பட்டன. உலக நாடுகள் அனைத்தும் இந்த மாநாட்டில் எஸ்400 ரக ஏவுகணைகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைக் கூர்ந்து கவனித்தன. இது குறித்த அமெரிக்காவின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான்அதற்குக் காரணம்.

அதிபர் புதினின் விஜயத்திற்கு முன்னதாக ரஷியாவுடன் இந்தியா முக்கியமான ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. 2014-இல் உக்ரைனிலிருந்து ஸ்கிரினியாவைப் பிரித்து ரஷியா தன்னுடன் இணைத்துக்  கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் ரஷியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. அமெரிக்காவின் எதிரி நாடுகளை பொருளாதாரத் தடையின் மூலம் எதிர்கொள்ளும் "கேட்சா' என்கிற சட்டத்தின் கீழ் இந்தியாவும் கொண்டுவரப்படக்கூடும் என்கிற மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளும் நாடுகளும் "கேட்சா' வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்பதால் இந்தியா ரஷியாவுடன் ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டும் என்றுதான் உலக நாடுகள் அனைத்துமே எதிர்பார்த்தன. 

சோவியத் யூனியன் சிதைந்து ரஷியா தனி நாடாக உருவானது முதல் இரண்டு நாடுகளுக்குமிடையே நெருக்கமான உறவு தொடர்ந்தாலும்கூட, அந்த நட்பின் வலிமை தளரத் தொடங்கியது. அந்நிய முதலீட்டின் தேவையால் இந்தியா புதிய நட்புறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அண்டை நாடான சீனா பெரிய பொருளாதார சக்தியாக வலுப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும்கூட, இந்திய - ரஷிய உறவு தொடராமல் இல்லை. இப்போதும்கூட, அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெயும், ராணுவத் தளவாடங்களும் ரஷியாவிடமிருந்துதான் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. 

ஒரு வகையில் பார்த்தால் இப்போது பொருளாதார ரீதியாக இந்தியா ரஷியாவைவிட வலுவான நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. சர்வதேச நிதியம் இந்தியாவை உலகின் 10 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக அடையாளம் கண்டிருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி, ரஷியாவின் ஜிடிபியைவிட 70 சதவீதம் பெரிது. இந்தியாவின் அசைக்க முடியாத நட்புறவு நாடாக ரஷியா இருந்த நிலை மாறிவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவுடனான இந்தியாவின் டோக்காலாம் பிரச்னையில் ரஷியா மெளனம் காத்தது என்பதையும், பாகிஸ்தானுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

ரஷியா ஒரு மிகப்பெரிய வியூகத்தை வகுத்து இந்தியாவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறைமுகமாக கட்டாயப்படுத்தியிருப்பது சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்தவர்களுக்குத்தான் தெரியும். 

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ அதிகாரியான ஜெனரல் சுபைர் மகமூத் கயாத் ரஷியாவில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ரஷியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் இஸ்லாமாபாத்துக்கு சென்று பாகிஸ்தானின் முக்கிய ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறார். 

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு ரஷிய ராணுவக் கல்லூரிகளிலும் பயிற்சி நிலையங்களிலும் படிப்பதற்கும் பயிற்சி பெறுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கராச்சியிலுள்ள பாகிஸ்தானின் அணுமின் நிலையங்களை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ராடார்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகி இருக்கிறது. 

பாகிஸ்தானின் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து நிச்சயமாக மாலத்தீவினாலோ, இலங்கையினாலோ, வங்க தேசத்தாலோ, நேபாளத்தாலோ ஏற்பட்டுவிடப் போவதில்லை. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட இருக்கும் ராடார்கள், இந்தியாவிடமிருந்து கராச்சியிலுள்ள அணுமின் நிலையத்தையும் ஏனைய முக்கியமான இலக்குகளையும் பாதுகாப்பதற்குத்தான் என்பது வெளிப்படை. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே, மாஸ்கோ விஜயம் செய்தபோது இந்தத் தகவல் அவரிடமிருந்து மறைக்கப்பட்டது என்பதும், புதினின் இந்திய விஜயத்திற்கு முன்னால் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் இந்தியாவை ராணுவ ஒப்பந்தத்தை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்குதான் என்பது புரிந்தவர்களுக்குத் தெரியும். 

ரஷியா ஒரேயடியாக, பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்துவிடாமல் இருக்கவும், அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும், சீனாவுக்கும் தன்னுடைய பாதுகாப்பை முன்னுறுத்தி எந்த முடிவையும் இந்தியா எடுக்கும் என்று தெரிவிப்பதற்கும் ரஷியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் ரஷியாவும் இந்தியாவும் கவனமாகக் காய்களை நகர்த்தியிருக்கின்றன. இதன் பின்னணியில் வெற்றி - தோல்வியைவிட அவரவர் பாதுகாப்புதான் முன்னுரிமை பெறுகிறது.

More from the section

வருமுன் காப்போம்!
விமான விபத்தும் அரசியலும்!
இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்?