திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

அதிபருக்குக் கிடைத்த ஆறுதல்!

By ஆசிரியர்| Published: 08th November 2018 03:50 AM
Advertising
Advertising

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவைக்கும், செனட் எனப்படும் மேலவைக்கும் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. பரவலாக எதிர்பார்த்தது போலவே அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி மக்களவையில் பெரும்பான்மை பலம் இழந்திருக்கிறது. மேலவையில் தனது பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது ஒருவகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்றாலும்கூட, மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருப்பது அதிபர் டிரம்ப்பின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தும் வாய்ப்பை அளித்திருக்கிறது.
 மிகுந்த எதிர்பார்ப்பை இந்த இடைக்காலத் தேர்தல் ஏற்படுத்தியிருந்தது. பொதுவாகவே அமெரிக்க மக்களவையைப் பொருத்தவரை இடைக்காலத் தேர்தல் என்பது அதிபர்களின் செல்வாக்குக்கு உரைகல்லாக கருதப்படுகிறது. வழக்கமாக ஏறத்தாழ 90 சதவீத உறுப்பினர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதால், அமெரிக்க மக்களவையில் ஒருவித தேக்கம் காணப்படுவது தவிர்க்க முடியாதது. 10 உறுப்பினர்களுக்கு மேல் மக்களவையில் இடைக்காலத் தேர்தல்களில் உறுப்பினர்கள் பதவி இழப்பதில்லை. இந்த முறை 42 மக்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதால், இப்போது நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் புதிதாகப் பல உறுப்பினர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
 இடைக்காலத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் அதிபர் டிரம்ப்பின் குடியேற்றம் குறித்த கடுமையான நிலைப்பாட்டுக்கு எதிரான மனோநிலை காணப்படுவதை எடுத்தியம்புகிறது. குறிப்பாக, படித்த வாக்காளர்கள் அதிபர் டிரம்ப் வலியுறுத்திவரும் குடியேற்ற படையெடுப்பை நிராகரித்திருக்கிறார்கள். அதேநேரத்தில் தொழிலாளர்களும், கிராமப்புறத்தினரும் அதிபர் டிரம்ப்பின் கருத்தை ஆதரிப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 இதுபோன்ற இடைக்காலத் தேர்தல்களில் கடந்த 30 ஆண்டுகளில் வெள்ளை மாளிகையில் ஆட்சியிலிருக்கும் கட்சி மேலவையில் தனது எண்ணிக்கை பலத்தை அதிகரித்ததில்லை. விசித்திரமாகவும் விபரீதமாகவும் ஆளும் குடியரசுக் கட்சி அமெரிக்க மேலவையில் தனது பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இன்டியானா, மிசெüரி, டென்னஸி, வடக்கு டகோட்டா, டெக்சாஸ் உள்ளிட்ட மிக முக்கியமான மேலவை தேர்தல்களில் தோல்வியைத் தழுவியதால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மேலவைப் பெரும்பான்மை கனவு தகர்ந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான பின்னடைவு என்பது மட்டுமல்லாமல், அதிபர் டிரம்ப்புக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆறுதல் என்றும் குறிப்பிட்டாக வேண்டும்.
 மக்களவையில் ஜனநாயகக் கட்சிப் பெரும்பான்மை, அதிபர் டிரம்ப்பின் ஆளும் குடியரசுக் கட்சியின் நிர்வாக மேலதிகாரத்தை அடுத்த இரண்டாண்டுகள் கட்டுப்படுத்தும். மருத்துவப் பாதுகாப்பு, குடியேற்றம், அரசின் செலவினத் திட்டங்கள் ஆகியவை குறித்து இனிமேல் அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. மேலவையில் மட்டுமல்லாமல் நிர்வாகமும், நீதித்துறையும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றாலும்கூட, ஜனநாயகக் கட்சிக்கு அரசைத் தட்டிக்கேட்கும் உரிமையும் அதிகாரமும் இந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் கிடைத்திருக்கிறது.
 அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட அல்லது அதிகாரபூர்வமான தவறுகள் குறித்தும், சர்ச்சைக்குரியதாகி இருக்கும் அவரது வருமான வரித் தாக்கல்கள் குறித்தும் கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. 2016 தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப்பின் ரஷியாவுடனான தொடர்பு, ஜனநாயகக் கட்சியின் தலைமையில் இயங்க இருக்கும் அவைக் குழுக்களால் விசாரிக்கப்படலாம்.
 72 வயது அதிபர் டிரம்ப்பைப் பொருத்தவரை ஜனநாயகக் கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை கிடைத்தாலும்கூட, மேலவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருப்பது மிகப்பெரிய ஆறுதல். கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் பிரசாரத்தில் ரஷியத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் உறுதிப்படுத்தப்பட்டாலோ அல்லது அந்த விசாரணையில் அதிபர் டிரம்ப்பின் தலையீடு இருந்தது என்பது தெரியவந்தாலோ அவரைப் பதவி நீக்கம் செய்ய மக்களவைப் பெரும்பான்மை போதுமானது. அதே நேரத்தில் மேலவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிபரின் பதவி நீக்கம் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, அவரை வெள்ளை மாளிகையில் இருந்து அகற்ற முடியும். அதனால், மேலவைப் பெரும்பான்மை அதிபர் டிரம்ப்புக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆறுதல்.
 இந்தியாவைப் பொருத்தவரையும், உலக நாடுகளைப் பொருத்தவரையும் இந்தத் தேர்தல் முடிவு சற்று ஆறுதலை அளிக்கிறது. காரணம், இனிமேல் அதிபர் டிரம்ப் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு ஜனநாயகக் கட்சி சாதகமாக இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 மக்களவை உறுப்பினர்களான அமி பேரா, பிரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோஹித் கன்னா ஆகிய நான்கு பேரும் தங்களது இரண்டாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மறு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. "சமோசா படையினர்' என்று அழைக்கப்படும் இந்த இந்திய - அமெரிக்கர்களின் மறுதேர்தல் வெற்றிக்கு நமது வாழ்த்துகள். இந்தியாவுக்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப நான்கு பேர் இருக்கிறார்கள்!
 
 

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...