திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

நேதாஜியின் கனவு நனவாகிறது!

By ஆசிரியர்| Published: 05th November 2018 02:27 AM
Advertising
Advertising

"சைனிக் ஸ்கூல்'  என்று பரவலாக அறியப்படும் ராணுவப் பள்ளிக்கூடங்களில் பெண்களையும் சேர்த்துக் கொள்வது என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு கடந்த மாதம் எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிக்கூட அமைப்பின் கீழ் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடங்கள், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனனின் கனவத் திட்டங்களில் ஒன்று. இந்தியாவின் முப்படைகளிலும் உள்ள அதிகாரிகள் மத்தியில் காணப்பட்ட சமச்சீரின்மையை மாற்றி, எல்லா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புப் படையில் இருப்பதை உறுதிப்படுத்துவதுதான் சைனிக் பள்ளிக்கூடங்களின் நோக்கம். 

இந்தப் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேரும் மாணவர்கள் புணேயை அடுத்த கடக்வாஸ்லாவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியிலும், தேசிய கடற்படை அகாதெமியிலும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்போது 26 சைனிக் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. முழுக்க முழுக்க ஆண் குழந்தைகள் மட்டுமே இந்தப் பள்ளிக்கூடத்தில் இதுவரை சேர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். 

1993-இல் 25 பெண் அதிகாரிகள் கொண்ட முதல் குழு ஆலிவ் பச்சை நிறத்திலான அதிகாரிகளின் சீருடைகளை அணிந்துகொண்டு இந்திய ராணுவத்தில் நுழைந்ததில் தொடங்கி, தொடர்ந்து முப்படைகளிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கடற்படையிலும், விமானப்படையிலும் நேரிடையாகப் போர்க்களத்தில் ஈடுபடும் பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்தாண்டு இந்திய ராணுவத் தளபதி விபின் ராவத், இந்திய ராணுவத்திலும் போர் முனையில் பங்கேற்க பெண் வீரர்களுக்கும் அனுமதி வழங்கியது முதல் பாதுகாப்புப் படையில் பெண்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்திருக்கிறது. 

பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை இப்போதைக்கு வெறும் 2.5% மட்டுமே. அதிலும்கூட, அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவப் பிரிவிலும், நிர்வாகப் பிரிவிலும்தான் பணியாற்றுகிறார்கள். கடந்தாண்டு முதல்தான் போர்க்களத்தில் நேரிடையாக ஈடுபடும் பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் லாரா. ஜெ. ரிச்சர்ட்சன் என்கிற பெண் அதிகாரி அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பிரிவான போர்ஸஸ் கமாண்டின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த போர்ஸஸ் கமாண்ட் என்பது 7,76,000 படை வீரர்களையும், 96,000 அலுவலர்களையும் கொண்ட அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பிரிவு என்பதை நாம் உணர வேண்டும். அதேபோல, இஸ்ரேல் உருவான 1948 முதல் அந்த நாட்டு ராணுவத்தில் பெண்கள் பெருமளவில் பங்கு வகிக்கிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளில் உள்ள ஏறத்தாழ 90 விழுக்காடு பொறுப்புகளில் பெண்கள் பங்கேற்கிறார்கள். அநேகமாக எல்லா மேலைநாட்டுப் பாதுகாப்புப் படைகளிலும் சரிசமமாக இல்லாவிட்டாலும், பெண் வீரர்கள் கணிசமான பங்கை வகிக்கின்றனர். 

ராணுவத்தில் பெண்கள் பங்கு பெறுவது என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றும் அல்ல. இரண்டாம் உலகப் போரின்போது 1943-இல் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவம் ஒன்றை ஏற்படுத்தினார். அதில் ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்று பெண் வீரர்களுக்கான ஒரு தனிப்பிரிவே இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் வாழும் பலரும் பங்கு பெற்ற இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி ரெஜிமெண்ட்டின் தலைமைப் பொறுப்பில் லட்சுமி ஷெகால் என்று பரவலாக அறியப்படும் கேப்டன் லட்சுமி சாமிநாதன் இருந்தார். அதில் ஜானகி தேவர் என்கிற தமிழரும் முக்கியப் பொறுப்பு வகித்தார். பெண்கள் ராணுவத்தில் சரிசமமாக பங்கு பெறுவதற்கு நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் 70 ஆண்டுகளுக்கு முன்பே வழிகோலியிருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பெண் ஒருவர் இருக்கும் நிலையில், அடுத்தகட்ட நகர்வாக ஆண்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் தேசிய பாதுகாப்பு அகாதெமியிலும் இனிமேல் பெண்களுக்கும் பயிற்சி பெறும் வாய்ப்பு அளிக்கப்படுவதற்கான முன்னோட்ட முடிவுதான் சைனிக் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கும் இடமளிப்பது என்கிற இந்த முடிவு. சைனிக் பள்ளிக்கூடங்கள் வழக்கமான பள்ளிப்பாடங்களுடன், ராணுவத்துக்குத் தேவையான எல்லா உடற்பயிற்சிகளையும் துப்பாக்கி சுடுதல், மலையேறுதல், நீச்சல் அடித்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவை
களையும் கற்றுத்தருகின்றன. இதில் படித்துத் தேறியவர்கள் தேசிய பாதுகாப்பு அகாதெமிக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிறார்கள். 

யுத்தத்துக்கான அணுகுமுறையும், தொழில்நுட்பமும் பெரிய அளவில் மாறிவிட்டிருக்கின்றன. முன்புபோல முப்படைகளில் இடம் பெறுவதற்கு உடல் வலு மட்டுமே போதாது. எதிரிகளை தொழில்நுட்பத்தின் மூலமும், சாதுர்யமான தாக்குதல் முறைகளாலும் வீழ்த்தும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. அதற்கு ஆணோ, பெண்ணோ நுட்பமான அறிவு படைத்த இளைஞர்கள் தேசத்தின் முப்படைகளிலும் பணியாற்றத் தேவைப்படுகிறார்கள். 

ஏற்கெனவே பெண்கள் விமானப் படையில் போர் விமானிகளாகவும், ராணுவத்தில் போர்க்களத் தளபதிகளாகவும் பணியாற்றும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் சைனிக் பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கும் அனுமதி என்கிற அரசின் முடிவு, இந்தியப் பாதுகாப்புப் படையின் அடுத்தகட்ட நகர்வின் அறிகுறி. நேதாஜியின் கனவு நனவாகிறது!

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...