திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மோதல் போக்கு ஆபத்து!

By ஆசிரியர்| Published: 03rd November 2018 02:50 AM
Advertising
Advertising

மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் பொதுவெளியில் கசிந்திருப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாகத் தெரியவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான விரல் ஆச்சார்யா கடந்த வெள்ளிக்கிழமை ஏ.டி. ஷெராஃப் நினைவு சொற்பொழிவின்போது வெளியிட்ட சில கருத்துகள் நேரடியாகவே ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசு தலையிடுகிறது என்று குற்றம்சாட்டுவதாக அமைந்திருந்தன. தனது உரையின் கருப்பொருளாக ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைக் கையாள ஆளுநர் உர்ஜித் பட்டேல் தந்த ஆலோசனைக்கு ஆச்சார்யா நன்றி தெரிவித்திருப்பதிலிருந்து, இதை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வக் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உலகளாவிய அளவில் எல்லா நாடுகளிலும் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிரச்னைகள் எழுவதுண்டு. அரசியல் தலைமையின் முனைப்பு, வளர்ச்சி, அதிகரித்த வருவாய், கூடுதல் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தவையாக இருக்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் முனைப்பெல்லாம் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பது, வங்கிகளின் செயல்பாடுகளில் ஸ்திரத்தன்மை, பணவீக்கம் ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்டவையாக இருக்கும். 
அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு அவசரம் இருப்பதுபோலவே உடனடித் தீர்வுகளும் தேவைப்படுகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கியைப் பொருத்தவரை, நிலையான வளர்ச்சியும், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நிதி நிர்வாகமும்தான் குறிக்கோளாக இருக்கும். அதனால், அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.
ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும், தன்னிச்சையான செயல்பாட்டையும் மதிக்காத அரசுகள் நிதிச்சந்தையின் எதிர்ப்பை சம்பாதித்து, பொருளாதார சிக்கலில் ஆழ்ந்து தங்களது செயலுக்கு வருந்த வேண்டி வரும் என்கிற விரல் ஆச்சார்யாவின் குற்றச்சாட்டுதான் இப்போது மிகப்பெரிய விவாதப் பொருளாகவும், அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதலாகவும், வெளிப்பட்டிருக்கிறது. ஆச்சார்யா மூன்று தளங்களில் மத்திய அரசின் தலையீடு குறித்துத் தனது உரையில் குறிப்பிடுகிறார். ரிசர்வ் வங்கியின் இருப்பிலிருந்து கூடுதலான பகுதியை அரசுக்கு மாற்றுவது, பொதுத்துறை வங்கிகளின் கண்காணிப்பில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அதிகாரத்தைக் குறைப்பது, வங்கிகளின் மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கியின் பங்கைக் குறைப்பது என்று அரசு செயல்படுத்த நினைக்கும் இம்மூன்று நடவடிக்கைகளும் அவரது உரையில் விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான அணுகுமுறைகள் குறித்துத் துணை ஆளுநர் ஆச்சார்யா நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை அவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. கிரிக்கெட் விளையாட்டில் விரைவாக ரன்களை எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தும் டி-20 குழு கேப்டனின் அணுகுமுறையில் மத்திய அரசும், டெஸ்ட் போட்டிகளின் அணுகுமுறையில் ரிசர்வ் வங்கியும் பொருளாதாரபிரச்னைகளை அணுகுகின்றன என்கிற அவருடைய உவமை சரியான புரிதல். டி-20 விளையாட்டில் வேகமாக ரன்களைக் குவிக்கும் முயற்சியில் ஆட்டம் இழப்பதுபோல, ரிசர்வ் வங்கி நடந்துகொள்ள முடியாது. எந்தவொரு பொருளாதாரமும் நிலைகுலைந்துவிடக் கூடாது என்பதால் டெஸ்ட் பந்தய ஆட்ட அணுகுமுறையைத்தான் ரிசர்வ் வங்கி கையாண்டாக வேண்டும். அதேநேரத்தில், ஆட்சியாளர்களின் அவசரத்தை புரிந்துகொள்ளாமல் செயல்படவும் முடியாது.
மத்திய நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் என்பது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால் பல நிதியமைச்சர்கள் ரிசர்வ் வங்கியின் ஒத்துழைப்பு இல்லாததால் விரக்தி அடைந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை தாங்களே பார்த்துக்கொள்வதாக சவால் விட்டதுண்டு. அதேபோல, வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பல தடவை கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. இந்த கருத்து வேறுபாடுகள் எதிர்கொள்ள முடியாதவை அல்ல. இப்போது பிரச்னை கருத்து வேறுபாடு மட்டுமல்ல, அரசின் தலையீடும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த எடுத்திருக்கும் சில நடவடிக்கைகளும்தான்.
மத்திய அரசின் மூன்று முடிவுகள் இந்திய ரிசர்வ் வங்கியை எரிச்சலூட்டி இருப்பதாகத் தெரிகிறது. பொதுத்துறை வங்கிகளைக் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கிக்கு போதுமான அதிகாரம் இல்லை என்கிற வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் குற்றச்சாட்டு, ரிசர்வ் வங்கியிடம் அளவுக்கு அதிகமாக இருக்கும் வைப்பு நிதியிலிருந்து தனது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசு கோரும் நிதியை வழங்க மறுப்பது, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைக் குறைக்கும் வகையில் ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை உருவாக்க முற்பட்டிருப்பது ஆகிய மூன்றும்தான் ரிசர்வ் வங்கியின் அதிருப்திக்குக் காரணங்கள். அரசுக்கும் ரிசர்வ் வங்கியின் மீது வாராக்கடன் பிரச்னையிலும், வட்டி விகிதக் குறைப்புப் பிரச்னையிலும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. 
சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் காணப்படும் பொருளாதாரக் குழப்பத்திற்கு இடையில் இதுபோன்ற உரசல்கள் ஏற்படுவது நல்லதல்ல. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், அரசின் அவசரத்தை ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஸ்திரத்தன்மை என்பது அரசியலுக்கும், தேர்தலுக்கும் அப்பாற்பட்டது என்பதை மத்திய அரசும் புரிந்துகொண்டு மோதல் போக்கைத் தவிர்த்து இணக்கமாக செயல்படாவிட்டால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும். இதை நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
 

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...