சிறப்புக் கட்டுரைகள்

நவீன கட்டமைப்புடன் கலை, கலாசாரப் பன்முகத்தை வெளிப்படுத்தும் புதிய நாடாளுமன்றம்!

வே.சுந்தரேஸ்வரன்

இந்திய தேசத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், 'ஜனநாயக கோயில்' என்று சிறப்புற அழைக்கப்படும் நாடாளுமன்றம், அதன் புதிய கட்டடத்தில் மே 28-ஆம் தேதி அடியெடுத்து வைத்திருக்கிறது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயகக் குரலும் ஒருசேர சங்கமிக்கும் ஓர் உன்னத இடமான அக்கட்டடம், கலை, பாரம்பரிய, பன்முகத்தன்மை அம்சங்களுடன்கூடிய புதிய வடிவில் தேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. கரோனா நோய்த்தொற்று சூழல், தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தது, ரஷியா - உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமம், நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் என பல சவால்களுக்கு மத்தியிலும்கூட இந்தப் புதிய கட்டுமானப் பணி 2020, ஜனவரி 21-இல் தொடங்கப்பட்டு 26 மாதங்களிலேயே முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் வளத்தையும் கட்டடக் கலையின் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு கலை அம்சத்துடன் கூடிய வடிவங்களில் இதில் அமைந்துள்ளதால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முந்தைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றாக, வளர்ந்து வரும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது இப்புதிய நாடாளுமன்றம் என்று மட்டும் சொன்னால் போதாது! நாட்டின் பல்வேறு கலை, கலாசார அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வகையில், எழில்பாங்குடன் அழகுற பார்த்து, பார்த்து கட்டப்பட்டிருக்கிறது இந்தப் புதிய பிரம்மாண்டம்.


நாட்டின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகப் பரிணமிக்கும் இந்தக் கட்டடம் பல்வேறு மாநிலங்களின் மண்வாசனையை வீசச் செய்திடும் வகையில், தேசத்தின் பல்வேறு பிரபலம் வாய்ந்த இடங்களில் இருந்து உயர்தர பொருள்கள் கொண்டுவரப்பட்டு கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்புதிய கட்டடத்தில், உச்சியில் அமர்ந்த நிலையில் உள்ள நந்தியுடன்கூடிய செங்கோல், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 தளங்கள் கொண்ட முக்கோண வடிவில் அமையப் பெற்றுள்ள இக்கட்டடமானது ஓவியங்கள், கற்சிலைகள், சுவர் அலங்காரம் உள்பட சுமார் 5,000 கலை வேலைப்பாடுகளுடன் காண்போரைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரம், நாகபுரியில் இருந்து தேக்கு, ராஜஸ்தானின் சர்மதுராவில் இருந்து வெள்ளை சலவைக் கற்கள், ஆஜ்மீரின் சிவப்பு கிரானைட் கற்கள் தருவிக்கப்பட்டு கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உத்தர பிரதேச பதோஹி கைவினைஞர்களின் கையால் நெய்யப்பட்ட கம்பள விரிப்புகள் போடப்பட்டுள்ளன. அதேபோல, மக்களவை, மாநிலங்களவை அரங்குகளில் மேல்புற எஃகு அலங்கார கட்டமைப்புகள் டாமன் - டையுவில் இருந்து வரழைக்கப்பட்டிருப்பதுடன், மரச் சாமான்கள் மும்பையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


புதிய கட்டடத்தை அலங்கரிக்கும் கல்சட்ட வேலைபாடுகள், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து பெறப்பட்டவை. ஏற்கெனவே இருந்து வரும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் 545 பேரும், மாநிலங்களவையில் 250 பேரும் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் இருந்தன. இந்நிலையில், தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் எதிர்காலத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, மக்களவையில் 988 இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 இருக்கைகளுடனும் விசாலமான இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்துவதற்காக மைய அரங்கு இருந்தது. அதில் இரு அவை உறுப்பினர்களும் அமர்வதற்கான இட வசதி இருந்தது. ஆனால், புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையிலேயே கூட்டுக் கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 பேர் வரை அமரும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, 6 கமிட்டி அறைகளும், அமைச்சரவை பயன்பாட்டுக்காக 92 அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவை, மாநிலங்களவைகளில் எண்ம வாக்களிப்பு வசதி, மல்டி ஊடக ஒளி, ஒலி அமைப்புமுறை உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. புதிய கட்டடத்தின் மக்களவையின் உள்புறத்தில் தேசிய பறவையான மயிலையும், மாநிலங்களவையின் உள்புறத்தில் தேசிய மலரான தாமரையும் கருப்பொருளாக கொண்டிருக்கும் வகையில் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, அரசியலமைப்பு அரங்கம் முன் உள்ள வளாகத்தில் தேசிய மரமான ஆலமரம் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பில் அசோக சக்கரமும், அதன் கீழே "சத்யமேவ ஜெயதே' எனும் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தின் உச்சியில் சிங்கத் தலையுடன் கூடிய அசோக தேசிய சின்னம் கம்பீரத்துடன் காட்சி தருகிறது.

புதிய நாடாளுமன்றத்தில் தரைத்தளத்தில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில், வேத காலம் தொடங்கி தற்போது வரையிலான நாட்டின் ஜனநாயகப் பயணத்தை எடுத்துக் காட்டும் காட்சி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், இப்பகுதியில் இந்திய அரசியலமைப்பின் எண்ம மற்றும் அசலின் மாதிரியும் இடம்பெற்றுள்ளது. மேலும், குடியரசுத் துணைத் தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமர் ஆகியோர் முறையே வந்து செல்வதற்காக அஸ்வ, கஜ், கருடா ஆகிய த்வார்களும் (வாயில்களும்), நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் வந்து செல்வதற்காக மகர், ஹன்ஸா, சர்துலா ஆகிய த்வார்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 6 வாயில்கள் அல்லது த்வார்களில் அமைந்துள்ள சிலைகள் பழங்கால சிற்பங்களால் உந்தப்பட்டவை.

இவற்றில் பிரதமர் செல்லும் வாயில் பகுதியான கஜ் த்வாரில் இரு யானை சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கர்நாடகத்தின் பனவாசியில் உள்ள மதுகேஸ்வரா கோயிலின் சிலைகளால் ஈர்க்கப்பட்டவை. இதேபோன்று ஒடிஸாவில் உள்ள சூரியக் கோயிலின் சிற்பங்களால் ஈர்க்கப்படும் வகையில் அஸ்வ த்வார் பகுதியில் குதிரை சிலைகளும் இடம்பெற்றுள்ளன. சர்துலா, ஹன்ஸா, மகர த்வார்கள் முறையே அமையப்பெற்றுள்ள சிலைகள் குவாலியர் குஜ்ரி மஹல், கர்நாடகத்தில் உள்ள ஹொய்சாலேஸ்வரா கோயில், ஹம்பியில் உள்ள விஜய் விதலா கோயில் ஆகியவற்றின் சிற்பங்களால் ஈர்க்கப்பட்டவை. கருடா த்வாரில் அலங்கரிக்கப்பட்டுள்ள சிலைகளானது தமிழகத்தில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால சிற்பங்களால் ஈர்க்கப்பட்டவை.

இப்புதிய கட்டடத்தில் பார்வையாளர்களைக் கவரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது ஃபூகோ பெண்டுலமாகும். ஒரு நீண்ட கம்பியால் தொங்கவிடப்பட்ட அதிக எடையைக் கொண்ட ஃபூகோ பெண்டுலம் பூமி சுழல்வதைக் காட்டும் வகையில் ஒரு நிலையான திசையில் ஊசலாடும் சாதனமாகும். இது அரசியலமைப்பு அரங்கின் முக்கோண மேற்கூரையில் இருந்து தொங்கவிடப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த பிரபஞ்சத்துடன் இந்தியாவின் தொடர்பை குறிப்பதாக உள்ளது. இந்த பெண்டுலமும் அதன் தொடர்பு சுழற்சியும் பூமி அதன் அச்சுவைச் சுற்றி சுழற்சி செய்வதன் சான்றாகும். நாடாளுமன்ற அட்சரேகையில், பெண்டுலம் ஒருமுறை சுழற்சியை முடிப்பதற்கு 49 மணி நேரம், 59 நிமிடங்கள் மற்றும் 18 நொடிகளை எடுத்துக்கொள்வதாக அதுபற்றி விவரங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.

புதிய கட்டடத்தில் மகாத்மா காந்தி, சாணக்கியர், சர்தார் வல்லபபாய் பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பித்தளைச் சிற்பங்களும், கோனார்க் சூரிய கோயிலின் தேர் சக்கர மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் இசை, நடனப் பாரம்பரியம், கட்டடக் கலைப் பாரம்பரியம், கைவினைப் பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள், சுவர் அலங்கார பலகைகள், சிற்பங்கள், உலோக சுவர் சிற்பங்கள் என சுமார் 5,000 கலை வேலைப்பாடுகளை இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் பார்வைக்கு விருந்துபடைக்கின்றன. கடமை தவறாமல் நடப்பதற்கும், சேவையின் அடையாளமாகவும் திகழ்ந்த மாபெரும் சோழப் பேரரசின் செங்கோல், இந்தப் புதிய கட்டடத்தின் முக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாகும்.

மூதறிஞர் ராஜாஜி, ஆதீனம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தச் செங்கோல் அதிகாரம் மாற்றத்தின் புனித சின்னமாக மாறியது. துறவிகள் ஆசீர்வாதத்துடன் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் பணிகளை மேற்கொள்வதில் நாடாளுமன்றவாதிகளுக்கு இருந்த சிரமங்களை கருத்தில்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் தற்போதைய புதிய கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களும் திறன்மிக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 150 ஆண்டுகள் வரை இந்த கட்டுமானம் பலமாக இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. உயர்தர சிமெண்ட் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சீதோஷ்ண நிலையைப் பராமரிக்கும் வகையில் வெளிப்புறப் பகுதியில் கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.

இக்கட்டடம் சுமார் ரூ.970 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. பழைய கட்டடத்தில் சூரிய ஒளி வருவதற்கான பாதை ஜன்னல் வலையால் அடைக்கப்பட்டிருந்தது. தற்போதைய புதிய கட்டடத்தில் சூரிய ஒளி உள்ளே வரும் வகையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களைக் கொண்ட இக்கட்டடம் முக்கோண வடிவமைப்புடையதாகும். ஒரு பக்கம் மாநிலங்களவையும், மற்றொரு பக்கம் மக்களவையும், இன்னொரு புறம் திறந்தவெளி முற்றமும் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் ஆலமரம் அமைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் குடிமக்களுக்கான அரசியலமைப்பு அரங்கமும், கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்படவில்லை.

மாநிலங்களவை, மக்களவையின் முறையே தலா 6 பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்த்தளத்திலும் அலுவலகப் பகுதியில் பார்வையாளர் மாடம் உள்ளது.

மேலும், எம்பிகள் அமர்ந்து பேசுவதற்கான ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர, அவர்கள் அணுகிடும் வகையில் உணவுக்கூடங்கள், நூலக அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா கேலரியில் மூன்று இடங்கள் உள்ளன. அதில், இந்திய கலாசாரம், இசை, நடனம், கட்டடவியல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அரங்குகளும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதுடன், மக்களவை, மாநிலங்களவையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், வளத்தையும், பாரம்பரியத்தையும், கட்டடக்கலையின் சிறப்பையும் எடுத்துரைக்கும் சான்றாக இந்தப் புதிய கட்டடம் திகழ்கிறது என்றே கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT