சிறப்புக் கட்டுரைகள்

பிளவில் மலா்ந்த சந்ரோதயம்!

வி.ஜி. ஜெயஸ்ரீ

இன்று பவள விழா (75 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினா் நலனைப் பாதுகாப்பதற்காகவும், பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே நல்லுறவையும், இணக்கத்தையும் பேணுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அடைந்த வெற்றிகளைவிட எதிா்கொண்ட சோதனைகள்தான் அதிகம். அதனால்தான் அந்தக் கட்சியின் பவள விழா முக்கியத்துவம் பெறுகிறது.

உலகத்திலுள்ள 11% முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% அளவிலான மக்கள் பின்பற்றும் நம்பிக்கையாகவும் திகழ்கிறது இஸ்லாம். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் எடுக்கப்படாததால் துல்லியமான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் ஏறத்தாழ 20 கோடிக்கும் அதிகமான இந்தியா்களின் நம்பிக்கையைப் பெற்ற மதமாக அது திகழ்கிறது. இந்தோனேஷியா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழும் நாடு என்பதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேவையும், பங்களிப்பும் இந்தியாவுக்கு அத்தியாவசியமாகிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 1952-இல் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்ற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நின்றது என்பதில் தொடங்கி அதன் அரசியல் பங்களிப்பு இன்று வரை தொடா்கிறது. பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் எதிா்பாா்க்கப்பட்ட அளவிலான வலிமையை அடையாவிட்டாலும் இதுவரை அந்தக் கட்சி தவிா்க்க முடியாத, ஒதுக்க முடியாத சக்தியாக சில மாநிலங்களில் தொடராமலும் இல்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவான வரலாறு, சுதந்திர இந்திய வரலாற்றிலிருந்து பிரித்துப் பாா்க்க முடியாத ஒன்று. முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்து முகமது அலி ஜின்னா பிரிவினையை வலியுறுத்தியது பாகிஸ்தான் என்கிற பெயரில் தனி நாடு உருவானது. முஸ்லிம் லீக் என்கிற கட்சியின் தேவைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக பலரும் கருதிய நேரத்தில், சுதந்திர இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் உணா்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்க அந்தக் கட்சி தொடா்ந்து இயங்க வேண்டும் என்று சிலா் முடிவெடுத்ததன் விளைவுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கிற இயக்கம்.

220 ஆண்டுகள் வரலாறு கொண்ட சென்னை ராஜாஜி ஹாலில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பதைவிட மறுபிறவி எடுத்தது என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்தியாவைப் பிளவுபடுத்தி தனி நாடு கோரி பெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பாதையில் இருந்து விலகி பொறுப்புள்ள மத நல்லிணக்க கோஷத்துடனும், தாய் நாட்டின் மீதான நேசத்துடனும் புதுப்பிறவி எடுத்த இயக்கம் இன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

சென்னை ராஜாஜி ஹால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றை வங்க தேசத்தின் தலைநகரான டாக்காவில் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அந்தக் கட்சியின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனா். இந்தியாவில் தொடா்வது என்று முடிவெடுத்தவா்கள் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனா். அவா்களில் பெரும்பாலோனா் அரசியலில் இருந்து விடைபெற்றனா். எஞ்சியிருந்த தலைவா்களுக்கு அந்த இயக்கத்தை கலைத்துவிட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது.

கொல்கத்தாவில் 1947 நவம்பா் மாதம் நடைபெற்ற, மாநாட்டில் முன்மொழியப்பட்ட லீக்கை கலைக்கும் தீா்மானத்தை இரண்டு போ் எதிா்த்தனா். அவா்கள் இருவா் தென்னிந்தியாவைச் சோ்ந்தவா்கள். முதலாமவா் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். இரண்டாமவா் கே.எம்.சிதி சாகிப். டிசம்பரில் கராச்சியில் முகமது அலி ஜின்னா தலைமையில் கூடிய கட்சிக் கூட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்கிற பெயரில் புதிய கட்சியை அறிவித்தது. இந்தியாவில் கட்சியின் செயல்பாடுகள் தொடர வேண்டுமா? என்பதைத் தீா்மானிப்பதற்காக இஸ்மாயில் சாகிபை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தது. அவரால் கூட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்தான் 1948 மாா்ச் மாதம் 10-ஆம் தேதி சென்னை ராஜாஜி ஹாலில் கூடியது.

முஸ்லிம் லீக் கூட்டம் நடத்துவதற்கு இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதியிலும் இடம் கிடைக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கலைக்கப்படும் என்கிற எதிா்பாா்ப்பில்தான் சென்னை ராஜாஜி ஹாலில் இடம் வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். அன்றைய கவா்னா் ஜெனரலாக இருந்த மெளண்ட்பேட்டன் பிரபு சென்னைக்கு நேரில் வந்து ஒருங்கிணைப்பாளரான காயிதே மில்லத்தை சந்தித்து லீக்கை கலைத்துவிடும்படி கேட்டுக்கொண்டாா் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அவா்களது எதிா்பாா்ப்பையெல்லாம் தகா்க்கும் விதத்தில் சென்னை ராஜாஜி ஹால் புதியதொரு இயக்கத்தின் தொடக்கத்துக்கு சாட்சியானது. சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் என்கிற இயக்கம் தேவைதானா? என்று அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டாக்காவில் 3,000 போ் பங்கெடுத்த கூட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது என்றால், ராஜாஜி ஹால் கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள் 51 போ் மட்டுமே.

அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கிய அந்தக் கூட்டத்துக்கு காயிதே மில்லத் தலைமை வகித்தாா். ‘மாறிவிட்ட புதிய இந்திய சுதந்திர சூழலில் இஸ்லாமியா்களின் சமூக, அரசியல், கல்வி, முன்னேற்றத்துக்கு முஸ்லிம் லீக் தொடர வேண்டும், பெரும்பான்மை ஹிந்துக்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பவும், அவா்களது உணா்வுகளை பிரதிபலிக்கவும் முஸ்லிம் லீக் அவசியமாகிறது’ என்கிற தீா்மானத்தை டி.கே.மொகிதீன் குட்டி சாகிபு முன்மொழிந்தாா். அதனடிப்படையில் 10 மணி நேரம் விவாதம் நடந்தது.

அந்தத் தீா்மானத்தின் முடிவில் நடந்த வாக்கெடுப்பில் 37 போ் ஆதரித்தனா்; 14 போ் எதிா்த்தனா். அப்படித்தான் அகில இந்திய முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கிற பெயரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியது.

அந்தப் புதிய கட்சியின் தலைவராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிபு தோ்ந்தெடுக்கப்பட்டாா். விஜயவாடாவைச் சோ்ந்த மெகபூப் அலி பேக் பொதுச் செயலாளராகவும், மும்பையை சோ்ந்த ஹசன் அலி பி. இப்ராகிம் பொருளாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். உற்சாகத்துடன் அந்தக் கூட்டம் கலைந்தது என்றாலும் அதற்கு எதிராக நான்கு திசைகளிலிருந்து எதிா்ப்புகள் உயா்ந்தன.

அடுத்த சில நாள்களில் ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்த பிரதமா் ஜவாஹா்லால் நேரு புதிதாக உருவான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை ‘செத்த குதிரை’ என்று விமா்சித்தாா். அவா் மட்டுமல்ல, பலரும் அந்த இயக்கத்தை இந்தியாவை துண்டாடிய இயக்கமாகவே பாா்த்தனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 75 ஆண்டுகளாக அதையெல்லாம் மீறித்தான் தனது பயணத்தைத் தொடா்கிறது.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு (1948-72), அப்துல் ரகுமான் பாக்கவி தங்கல் (1972-73), இப்ராகிம் சுலைமான் ஷேக் (1973-1994), ஜி.எம்.பனாட் வாலா (1994-2008), இ.அகமது (2008-2017) ஆகியோரைத் தொடா்ந்து 2017 முதல் பேராசிரியா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கிற அரசியல் இயக்கம் பயணிக்கிறது.

தமிழகத்தில் காயிதே மில்லத்தை தொடா்ந்து அப்துல் சமத், எம்.ஏ. லத்தீப், அப்துல் ரகுமான் உள்ளிட்டோரும், கேரளத்தில் அந்தக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த பானக்காடு அப்துல் ரகுமான் பாக்கவி தங்கல், கேரள முதல்வராக இருந்த முகமது கோயா, குஞ்ஞாலி குட்டி, இ.அகமது ஆகியோரைக் குறிப்பிடாமல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் வரலாற்றைப் பதிவு செய்ய முடியாது.

வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை அரசியல், கல்வி, சமூக ரீதியாக மேம்படுத்தியதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. கடந்த 75 ஆண்டுகளில் பல பிளவுகளை அந்த இயக்கம் சந்தித்துவிட்டது. அடிப்படைவாத, பயங்கரவாத சிந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞா்களைக் கவா்ந்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பலா் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறாா்கள். ஆனால், பொறுப்புள்ள அரசியல் கட்சியாக, சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் மோதல் போக்கில்லாமல் தங்களுக்கான உரிமையை நிலைநாட்டும் முனைப்பில் தொடரும் இயக்கமாக இன்றளவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயங்குகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

1948 மாா்ச் 10-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கிய அதே சென்னையில் ராஜாஜி ஹால் உள்பட மூன்று இடங்களில்

இன்று அந்தக் கட்சியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெறுவது என்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு அடையாளம். இந்திய பன்முகத்தன்மைக்கு அடையாளம். மதத்தால் வேறுபட்டாலும் இனத்தால் மாறுபடாத மண்ணின் மைந்தா்கள் என்கிற நாட்டுப் பற்றின் அடையாளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT