சிறப்புக் கட்டுரைகள்

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! - சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

தினமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரான 70 வயது சீதாராம் யெச்சூரியைப் பேட்டி காண்பது என்பதே ஒரு தனி அனுபவம். சிந்தனையில் தெளிவும் கேள்விகளை எதிர்கொள்ளும் சாதுர்யமும் அவருக்கே உரித்தான தனித்துவம்.

தில்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்ற அவர்மாணவப் பருவத்திலேயே அரசியலுக்குள் நுழைந்தவர். இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த அவர், 1978-ஆம் ஆண்டில் அக்கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவசரநிலையின்போது "மிசாசட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

மார்க்சிஸ்ட் கட்சியிலும் சீதாராம் யெச்சூரியின் வளர்ச்சி சிறப்புமிக்கதாக இருந்தது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த அவர்அக்கட்சியின் 5-ஆவது பொதுச் செயலராக  விசாகப்பட்டினத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் அவர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனுடன் தேசியம், இந்திய அரசியல், இடதுசாரிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீதாராம் யெச்சூரி மனம் திறந்து பேசினார். அந்தப் பேட்டி:


குஜராத்ஹிமாசல் தேர்தல் முடிவுகளையும்சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தேர்தல் முடிவுகள் வியப்பளிக்கவில்லை. சிறுபான்மை முஸ்லிம்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் மதம் சார்ந்த பிரசாரத்தை அடிப்படையாக வைத்து பாஜக ஆதாயம் தேடிக்கொண்டது. குஜராத்தில் ஹிந்து வாக்காளர்களை ஒருங்கிணைத்து பாஜக வெற்றி பெற்றது. அந்த வெற்றி வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஹிமாசலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அங்கு பாஜகவால் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை.

ஹிமாசலில் காங்கிரஸ் வென்றாலும் பாஜகவுக்கும் அக்கட்சிக்கும் இடையேயான வாக்கு விகித இடைவெளி 0.9 சதவீதம் மட்டுமே. அந்த மாநிலத்தில் பாஜக இன்னும் வலிமையாகவே உள்ளதை இது வெளிக்காட்டவில்லையா?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வெற்றியே முக்கியம். ஹிமாசலில் பாஜக இன்னும் வலிமையாகவே உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கு மதரீதியிலான ஒருங்கிணைப்பு காரணமல்ல. மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிமாசலை "தேவபூமி' என அழைத்தார். மேலும் அவர், "பசியோடு இருந்தாலும் வேலையில்லாமல் இருந்தாலும் நமது நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகளை நாம் சகித்துக் கொள்ளமாட்டோம். நம் நம்பிக்கை காக்கப்பட வேண்டுமெனில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என்று பிரசாரம் செய்தார். ஆனால், அதை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மெயின்புரிகதெளலி இடைத்தேர்தல்கள் வெற்றிக்குப் பிறகு சமாஜவாதி-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிகாங்கிரஸ்இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்ளுமா?

உத்தர பிரதேசத்தில் பாஜக அல்லாத கட்சிகள், மதவாத சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைய மறுத்து வருகின்றன. அது முக்கிய பிரச்னையாக உள்ளது. சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும். அது உத்தர பிரதேசத்தில் நடக்கவில்லை.

உத்தர பிரதேசத்தில் மதவாதத்தைவிட ஜாதியவாதம் அதிக முக்கியத்துவம் பெறுவதுதான் கட்சிகள் ஒருங்கிணையாததற்கு காரணமா?

அப்படி கூறிவிட முடியாது. இரு பிராந்திய கட்சிகளின் பிடிவாதமும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுமே அதற்குக் காரணம். பாஜகவுக்கு எதிராகத் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென அக்கட்சிகள் விரும்புகின்றன. அதன் காரணமாகவே கட்சிகள் ஒருங்கிணையாமல் உள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான பிரதமர் வேட்பாளர் முன்னிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறதா?

அப்படி அமைந்தால் அதைவிடச் சிறப்பு வேறு எதுவுமே இல்லை. ஆனால், அவ்வாறு நடைபெற பெரும்பாலும் வாய்ப்பில்லை. பாஜகவுக்கு எதிராக மற்ற அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸை தங்கள் போட்டியாளராகக் கருதுகின்றன. அதன் காரணமாக பொதுவான பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வாய்ப்பில்லை. 


காங்கிரஸ் இல்லாமல் மற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைப்பது சாத்தியமாஅவ்வாறு அமைந்தால், 1989, 1996-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போல நிலையில்லாத அரசு அமையாதா?

1989, 1996, 1997 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ்தான் அப்போதைய அரசுகளைக் கவிழ்த்தது. அதனால் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. 2004, 2009-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போல தேர்தல் முடிவுகளை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது தொடர்பாகவே ஆராய வேண்டியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூன்று இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றால், கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியமே.

திமுக தவிர பெரும்பாலான பிராந்திய கட்சிகள் காங்கிரஸை கூட்டணியில் இணைக்க விரும்பவில்லை. அப்படியிருக்கையில் காங்கிரஸால் அவ்வளவு எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?

இதற்கு பதிலளிப்பது சற்று கடினம். கூட்டணியாகப் போட்டியிடும்போது, அனைத்துக் கட்சிகளும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறவே விரும்பும். தங்களது மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட அளவிலான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பிராந்திய கட்சிகள் நன்கு அறியும். அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்காமல், அதிக அளவில் வெற்றி பெற விரும்புகின்றன. தேர்தலுக்குப் பின் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைய நேரிடும்போது அக்கூட்டணிக்குத் தலைமையேற்று வழிநடத்த வேண்டுமெனில் காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்குமிக்க மாநிலங்களில் அதிக அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

காங்கிரஸ்பாஜக அல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முன்பு இடதுசாரிகள் செய்துவந்தனர். காங்கிரஸுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேயான பாலமாகவும் இடதுசாரிகளே திகழ்ந்தனர். தற்போது இடதுசாரிகள் அத்தகைய வலிமையில் இல்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தற்போது யார் செய்ய வேண்டும்?

தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆராய்ந்தால் இது சரியானதுதான். 1989, 1996 தேர்தல்களில் இடதுசாரிகள் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர். தொகுதி எண்ணிக்கை மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் இடதுசாரிகள் வகித்து வரும் நிலையும் முக்கிய மதிப்பு பெற்று வருகிறது. அப்படி பார்த்தால், தற்போதும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக இடதுசாரிகள்தான் உள்ளனர். இடதுசாரிகள் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் இணைப்பு சக்தி.

அதற்கு போதுமான தொகுதியில் வெல்ல வேண்டியது அவசியமல்லவா?

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் அது சரிதான். ஆனால், இடதுசாரிகளால் நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதன் அடிப்படையிலேயே இடதுசாரிகளின் வலிமை நிர்ணயிக்கப்படுகிறது. 


நாடாளுமன்றத்திலோபெரும்பாலான மாநில சட்டப்பேரவைகளிலோ இடதுசாரிகளுக்குப் போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாதபோதுதேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

விவசாயிகள் பிரச்னை, தனியார்மயமாதல் பிரச்னை, கல்விக் கொள்கை பிரச்னை, அங்கன்வாடி பணியாளர்களுக்கான பிரச்னை என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளே முன்னிற்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மக்களை ஒன்றுதிரட்டி அவர்களது விருப்பத்துக்கு ஆதரவாக இடதுசாரிகள் குரல் கொடுப்பர் என அனைவரும் நம்புகின்றனர். அதனால் இடதுசாரிகளின் முக்கியத்துவமும், இன்றியமையாமையும்  குறைந்துவிடவில்லை. 

இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தேர்தலில் வாக்குகளாக எதிரொலிப்பது இல்லையே?

மக்களின் நம்பிக்கையை போராட்டங்கள் வாயிலாகப் பெறுவதும் தேர்தலில் வெற்றி பெறுவதும் வெவ்வேறானவை. தேசிய அளவில் கொள்கையை வகுப்பதில் இடதுசாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக இடதுசாரிகளே தொடர்ந்து திகழ்கின்றனர்.
     
தில்லிபஞ்சாபைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது. இதனை தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி உருவெடுப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கலாமா?

தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி உருவெடுக்கிறது என்பதை இப்போதே கூறுவது இயலாத ஒன்று. எத்தகைய மக்களை ஆம் ஆத்மி ஈர்க்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் உள்பட சொந்தக் கட்சிகள் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகளே ஆம் ஆத்மி பக்கம் செல்கின்றனர். இத்தகைய சூழலில், காங்கிரஸுக்கு மாற்றான தேசிய கட்சியாக உருவெடுப்பதற்கான எந்தவித சித்தாந்த அடிப்படையும் ஆம் ஆத்மிக்கு இருக்க வாய்ப்பில்லை.

இது மட்டும்தான் ஆம் ஆத்மிக்கான பலவீனமாக இருக்குமா?

நாட்டின் இரண்டு அடிப்படை பிரச்னைகளில் ஆம் ஆத்மியின் அணுகுமுறை பலவீனமாக உள்ளது. ஒன்று, நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற வகையில் மதவாத சக்திகள் எழுச்சி பெற்று வருவது; மற்றொன்று, தேசத்தின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு, ஒரு வகையான பொருளாதார தாராளமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டிலும் ஆம் ஆத்மி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.



ஆனால்தில்லிபஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த பிறகு தேசிய கட்சியாக உயரும் நோக்கத்துடனே குஜராத்தில் ஆம் ஆத்மி கால் பதித்ததாக அறியப்படுகிறதே!

கட்சிக்கு சித்தாந்த நெறிமுறைகள் அடித்தளமாக இல்லாவிட்டால் அது எதையும் குறிக்காது. தனது ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அடுத்த கட்டத்துக்கு வளர்ச்சி பெறுவதற்குமான உறுதியான காரணங்கள் எதுவும் ஆம் ஆத்மியிடம் இல்லை. பாஜகவின் மொழியையே வெவ்வேறு குரல்களில் ஆம் ஆத்மி பேசுகிறதே தவிர, வேறென்ன இருக்கிறது? எனவே, காங்கிரஸுக்கு அல்லது பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மியை நான் பார்க்கவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும்பாஜகவும் ஏறக்குறைய இரு துருவங்களாக உருவெடுத்துள்ள நிலையில்இடதுசாரி கட்சிகள் மீண்டெழுந்து மேற்கு வங்க மக்களின் சிந்தனையைக் கைப்பற்ற முடியுமா?

இது கடினமான இலக்குதான். ஏனெனில், மேற்கு வங்கத்தில் வகுப்புவாத அரசியல் நிலையைக் கடந்து அரசியல் பிரிவினையைத் தூண்டும் நிலை உருவெடுத்துள்ளது. இது உடைக்கப்பட வேண்டும். அதற்காக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் பிரிவினை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் இடதுசாரி கட்சிகள் அதனை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. இது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

மத்தியில் ஒரு மெகா கூட்டணி உருவாகிறபோது திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஒரே அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதா?
 
கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ், பாஜகவின் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. இது ஒரு வகையான பேசி வைத்து நடத்தும் அரசியல் விளையாட்டு போன்றது. அதாவது, பாஜகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்குள்தான் போட்டி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மற்ற கட்சிகள் தலையெடுத்துவிடாத அரசியலை நடத்துகின்றன.

மாநிலக் கட்சிகள் அவர்களின் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டெழுவதை அனுமதிப்பதைக் காட்டிலும்அதற்கு மாற்றாக பாஜகவுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்கிறீர்களா?

அது உண்மைதான். அதே நேரம், காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியில் மிகவும் பலவீனமடைந்து வருகிறது. தமிழகம், ஆந்திரம், ஒடிஸா, தில்லி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை அதற்கு உதாரணமாகக் கூற முடியும். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, பல மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலக் கட்சிகளையே சார்ந்திருக்கும் சூழல் காணப்படுகிறது. பெரும்பாலான மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சிகள். அல்லது திரிணமூல் போல, காங்கிரஸ் வாக்குகளால் உருவான கட்சிகள். 


இந்திய கம்யூனிஸ்ட் போன்று அல்லாமல் மத்தியில் எந்தவொரு கூட்டணியில் இணைவதையும் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் தவிர்த்து வருகிறது. இந்தக் கொள்கையை மார்க்சிஸ்ட் இப்போது மாற்றியிருக்கிறதா?

மத்தியில் ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றுவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் இப்போதைய பிரதான நோக்கம். அதற்காகத்தான் மாற்று அரசை ஆதரிப்போம் என இடதுசாரி கட்சிகள் எப்போதும் கூறி வருகின்றன. நாங்கள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். 1996 அல்லது 2004 என முந்தைய காலகட்டங்களிலும் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்துள்ளோம். அதையும் தாண்டி தவிர்க்க இயலாத சூழல் உருவாகிறபோது, கட்சி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அன்றைய சூழல்தான் தீர்மானிக்கும்.

இடதுசாரி கட்சிகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தனித்தனி கட்சிகளாகவே இருக்கப்போகிறீர்கள்எப்போது ஒன்றிணைந்து வலுவான ஒரே இடதுசாரி கட்சியாக உருவெடுக்கப்போகிறீர்கள்?

இடதுசாரி கட்சிகளின் பழைய வரலாற்றிலேயே அதற்கான காரணங்களும் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது ஒன்றிணைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நேபாளத்தில் முயற்சித்ததுபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலர்கள் கைகுலுக்கி, நாம் ஒன்றிணைந்துவிட்டோம் என அறிவிக்க வேண்டும். ஆனால், நேபாளத்தில் அது பலனளிக்கவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியில் கீழிருந்து ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லையெனில், மேலிருந்து எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை. இரண்டாவது வாய்ப்பு என்பது, கூட்டு முயற்சிகள் மூலமாக கட்சிகளின் கீழ்நிலையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது. இதுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய சபைகள், தொழிலாளர் சங்கங்கள் இதற்காக ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். அதன்மூலம் கீழ்நிலையில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. இது முழுமை பெற சில காலம் ஆகும். தானாக எதுவும் நடந்துவிடாது.

கடந்த நூற்றாண்டில் காங்கிரஸ் குடும்ப ஆட்சியை எதிர்ப்பதில் இடதுசாரிகள் முன்னணியில் இருந்தனர். இப்போது காங்கிரஸ் மட்டுமின்றிபெரும்பாலான மாநிலக் கட்சிகளும் குடும்ப ஆட்சியை நடத்தி வருகின்றன. இடதுசாரி கட்சிகள் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. இது முரணாகத் தெரியவில்லையா?

பரம்பரைச் சொத்து போன்று ஆட்சி செய்வது என்பது துரதிருஷ்டவசமானது. குடும்ப அரசியல் என்பது நிலப்பிரபுத்துவ நடைமுறை போன்றது. இது ஜனநாயக அரசியலுக்கான வழியாகாது. ஒரு தலைவரின் மகன் உண்மையான திறனை வளர்த்துக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை அரசியல் வாரிசாக அடையாளப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட (இடபிள்யுஎஸ்) பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்அதுதொடர்பான நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி ஏன் தெரிவிக்கவில்லை?

இடபிள்யுஎஸ் விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவித ரகசியமும் கிடையாது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டபோதும்கூட, ஜாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யக் கூடாது. மாறாக, பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்தது. கேரளத்திலும் இதைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதற்காக, அந்தச் சமயத்தில் இடதுசாரி கட்சிகளுக்குள்ளேயே நாங்கள் ஓரங்கட்டப்பட்டோம். அப்போது உச்சநீதிமன்றம்தான் "கிரீமி லேயர்' சமூகத்தில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தவர்கள் என்பதற்கான விளக்கத்தை அளித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தை ஆமோதித்தது. அதன் மூலமாகவே, இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலையும் கணக்கில் கொள்ளப்பட்டது. 


அந்த வகையில்இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் தற்போதைய தீர்ப்பிலும் மார்க்சிஸ்ட் கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளதா?

இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு ரூ. 8 லட்சம் என்பது, வருமான வரி ஊதிய உச்சவரம்பைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொழிலாளர்கள் முன்வைத்துவரும் கோரிக்கைகளைவிட மிக மிக அதிகம். திறனில்லாத பணியாளர்களுக்கு மாதம் ரூ. 26,000 ஊதியம் வருகிறது. அவருடைய ஆண்டு வருவாய் ரூ. 3.12 லட்சம் என்ற அளவில்தான் இருக்கும். எனவே, இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான தற்போதைய ஊதிய உச்சவரம்பால், உண்மையாகப் பாதிக்கப்படும் மக்கள் பலன் பெற முடியாத நிலை ஏற்படும். எனவேதான், இதனை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.

திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நல்ல உறவுகொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட ஏன் உதவக் கூடாது?

முல்லைப் பெரியாறு விவகாரம் மாநிலங்களுக்கு இடையேயான நலன் சார்ந்த விஷயம். இதில் கட்சியின் மத்திய தலைமை தலையிடுவதற்கோ அல்லது அறிவுறுத்தல் வழங்குவதற்கோ எந்த அவசியமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களும் ஏற்கெனவே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதன்மூலமாக, இரு மாநிலங்களும் பரஸ்பரம் பலனடையும் வகையில், சுமுகத் தீர்வை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியின் நரேந்திர மோடி போல உருவெடுத்து வருகிறாரா?

மார்க்சிஸ்ட் கட்சியில் நரேந்திர மோடி போன்று யாரும் உருவெடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை தங்களின் பணி மற்றும் பங்களிப்பின் அடிப்படையிலேயே கட்சியின் தலைவர்களும் அரசுகளும் உருவாகின்றன. கேரளத்தில் நாயனார் முதல்வராக இருந்தபோது, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கூடுதல் ஜனநாயகரீதியில் ஆட்சி நடத்தினார் என்றனர். அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, நம்பூதிரிபாட் மற்றும் நாயனார் இருவரும் சிறந்த ஆட்சியை வழங்கியதாகக் கூறினர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிக்கொண்டுதான் இருப்பர். ஆனால், உண்மையில் அனைத்து முடிவுகளும் ஒன்றிணைந்துதான் எடுக்கப்படுகின்றன.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்த உங்களுடைய கருத்து என்னஇந்த நடைப்பயணம் மூலமாக பலவீனமான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு பெருகுமா?

இந்த நடைப்பயணம் குறிப்பிட்ட மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் வலுப்படுத்திக்கொள்ள நிச்சயம் உதவும். முறையான வழிமுறைகள் மூலமாக மக்களை ஒன்றுதிரட்ட முடியும். ஆனால், அதன் பிறகு அமைப்பு ரீதியிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதுதான் முக்கியமானது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் மத்தியில் பாஜக ஆட்சி தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டினாலும்ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையில் எந்தப் பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதற்கு அத்தாட்சியாக உள்ளன. இதனை ஒப்புக்கொள்கிறீர்களா?

அரசுக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், ஹிந்துத்துவ அடையாளம் பெருமளவில் பரப்பப்பட்டிருப்பதால் அது மக்களின் அதிருப்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றே கூற வேண்டும். வகுப்புவாத அரசியல் மற்றும் தீவிர தேசியவாதத்தை மக்களிடையே தொடர்ந்து தூண்டிவிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தீவிர தேசியவாதத்தையும், வகுப்புவாத அரசியலையும் முன்னிறுத்துகின்றனர். ஹிந்துத்துவ அடையாளத்தைப் பட்டைதீட்டும் முயற்சிகள்தான் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சமூக நல்லிணக்கம் ஆகிய உண்மையான பிரச்னைகள் இந்திய அரசியலில் விவாதப்பொருளாக முன்னெடுக்கப்பட வேண்டும். இது நடைபெறுகிறபோது, ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மறைந்துவிடும். இது விரைவில் நடைபெற வேண்டும் என விரும்புகிறேன். 

படங்கள்: டி. ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT