சிறப்புக் கட்டுரைகள்

ஏழ்மையிலும் நேர்மை

DIN

தியாகராஜ சுவாமிகள் இசையில் ஞானம் உடையவராகத் திகழ்ந்தாலும் பணிவும், எளிமையும் நிறைந்தவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதாக அணுகலாம்.

யாரிடமிருந்து சிறந்த இசை வந்தாலும், அதைப் போற்றுவார். வெறுக்கப்பட வேண்டியவர்களிடமும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வார். கோபம் வந்தாலும் கூட மரியாதை தவறாமல் பேசுவார்.

எது வரினும் வரட்டும். நேர்மைப் பாதையினின்றும் வழுவாது நடந்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அன்று நாம் இதை உணரத் தவறினால், அந்த அன்பு நம்மை விட்டு அகலும் என்பதில் அவர் முழு நம்பிக்கைக் கொண்டிருந்தார். எனவே, வறுமையில் வாழ்ந்தாலும் எளிமையான வாழ்க்கை, உயர்ந்த நோக்கு, அன்புத் தொண்டு ஆகியவற்றை லட்சியமாகக் கடைப்பிடித்தார்.

பரம்பரைச் சொத்தான வீட்டின் ஒரு பகுதியையும், சிறிது நிலத்தையும் தவிர அவருக்கு வேறு சொத்து எதுவும் கிடையாது. உஞ்சவிருத்தியின் மூலம்தான் அவர் தனது குடும்பத்தை நடத்தினார்; தனது சீடர்களுக்கும் உணவளித்தார். சீடர்களைத் தவிர பாடகர், பண்டிதர், பாகவதர் போன்றோர் அவரிடம் மேலும் கற்கவும், ஆறுதல் பெறுவதற்காகவும் அவரைத் தேடி வருவர். அவ்வாறு வரும் அவர்கள் வாரக் கணக்கில் அவரது வீட்டிலேயே தங்குவர். அவர்களுக்கும் உஞ்சவிருத்தி மூலம் சேகரிக்கப்பட்ட தானியத்தை உணவாக அளிப்பார். 

சில சமயம் பக்கத்து கிராமங்களிலும் அவரை உஞ்சவிருத்தி பஜனைக்கு அழைப்பதுண்டு. பொறியடக்கம், உடல் வருத்தம், கண்டிப்பும் நிறைந்தவையே உஞ்சவிருத்தி வாழ்க்கை. ஆன்மிகப் பற்றுள்ளவர்கள்தான் உஞ்சவிருத்தி வாழ்க்கையை நடத்துவர். இந்த வழக்கம் பிச்சை இடுபவரையும், ஏற்பவரையும் ஒருங்கே உயர்த்துகிறது.

உஞ்சவிருத்தி பாகவதர்களால் சமூகத்துக்கு நஷ்டம் எதுவும் கிடையாது. முழு மனதுடன் தாராளமாக வழங்கப்படுவதைக் கொண்டு ஜீவனம் செய்வர். பிற்பகலிலும், இரவிலும் சொற்பொழிவுகள் மேற்கொள்வர். இந்த வகையில் மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றனர்.

உஞ்சவிருத்தி பாகவதர்கள் வீதியில் துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டு செல்லும்போது, வீடுகளிலிருந்து குடும்பத்தினர் பயபக்தியுடன் வெளியே வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை அளிப்பர்.

இந்த உஞ்சவிருத்தி மூலம் உப்பு முதல் கற்பூரம் வரை அனைத்துப் பொருள்களையும் சேகரித்ததாக மாளவ ஸ்ரீராகத்தில் 'என்னாள்ளு திரிகேதி' என்ற பாடலில் தியாகராஜர் கூறியுள்ளார்.

நாள்தோறும் அவர் வைகறையில் எழுந்து சிறிது நேரம் தியானம் மேற்கொள்வார். பின்னர், ஆற்றில் நீராடிவிட்டு, சமயச் சடங்குகளில் ஈடுபடுவார். அதைத்தொடர்ந்து, பாகவதம், ராமாயணம் நூலைப் பாராயணம் செய்வார்.

இதையடுத்து, உஞ்சவிருத்தி மேற்கொண்டு உணவுப் பொருள்களைப் பெற்று வருவார். பொதுவாக உஞ்சவிருத்திக்கு செல்பவர்கள் சூரிய வெளிச்சத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேலாடையை முண்டாசாகவும், மேலாடையிலிருந்து தொங்கும் பகுதியைத் தன் முதுகை மறைப்பதாகவும் இருவகையிலும் பயன்படுத்துவர்.

ஆனால், தியாகராஜர் உஞ்சவிருத்திக்கு செல்லும்போது தன் தோளிலிருந்து குறுக்காகத் தொங்குகிற பட்டையின் இறுதி நுனியில் கட்டப்பட்ட சிறு பாத்திரம் இருக்கும். அதில், இல்லறத்தார் ஒரு கை நிறைய அரிசியை இடுவர். அவர் ஒரு கையில் தம்புராவை சுமந்து கொண்டு மற்றொரு கையில் மரத்தாலான இணைத் தாளத்தை ஏந்தியவாறும் அல்லது இரு கைகளிலும் தாளம் மட்டுமே கொண்டவராகவும் செல்வார்.

பாடல் வடிவிலோ, நாமாவளியாகவோ அவர் எப்போதும் இறை புகழையே பாடுவார். அவர் செல்லும்போது சிறு பொழுதே வீட்டின் முன் நிற்பார். வீட்டையோ, வீட்டில் உள்ளவரையோ பார்க்க மாட்டார். தன்னை நோக்கி வந்தார்களா? வரவில்லையா? என்பதையும் அவர் அறிவதில்லை.

தன் தோளில் தொங்கும் பாத்திரத்தில் என்ன இடப்பட்டது என்ற எண்ணமும் அவருக்கு இருக்காது. அவர் சென்று கொண்டே இருப்பார். பாத்திரத்தில் தேவையான அளவு நிறைந்ததும் வீட்டுக்குச் சென்றுவிடுவார். அவர் வாழ்ந்த காலத்தில் மிக எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்தார்.

இப்போதும், ஆராதனை நாளில் பஞ்சரத்ன கீர்த்தனைக்கு முன்பாக உஞ்சவிருத்தி பஜனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT