சிறப்புக் கட்டுரைகள்

பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்

DIN

சத்குரு ஸ்ரீதியாகராஜருடைய நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளில் பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும், ஒரு சில சம்ஸ்கிருதத்திலும் பாடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பல்வேறு அரிய ராகங்களில் பாடிய பெருமை தியாகராஜருக்கு உண்டு.

அவர் வெளியூர் செல்வதென்பது அபூர்வம். சிலருடைய அழைப்பை ஏற்று, அவர் சில வெளியூர்களுக்கும் செல்ல நேர்ந்தது. அங்கெல்லாம் கூட இவர் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினார். குறிப்பாக கோவூர் பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்தினம், திருவரங்க பஞ்சரத்தினம் ஆகியவற்றை இயற்றித் தன் பக்தி மார்க்கத்துக்கு இசையைப் பயன்படுத்தினார். இவற்றுடன் நாரத முனிவரைப் புகழ்ந்தும் ஒரு பஞ்சரத்னம் பாடினார். 

தியாகராஜ சுவாமிகள்

திருவையாறில் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகள் இப்போது அவருடைய ஆராதனை நாளில் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடி வருகின்றனர். அவை ஐந்தும் அரிய ராகங்களான நாட்டை, ஆரபி, கெளளை, வராளி, ஸ்ரீ ராகம் ஆகியவற்றில் பாடப்பட்டவை. அவற்றின் சிறப்பையொட்டி அந்த ஐந்து கீர்த்தனைகளையும் பஞ்சரத்னம் என்ற பெயரில் அவரது ஆராதனையில் பாடி இறைவனைத் துதிக்கின்றனர். 

இதில், நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் முதலாவதாகப் பாடப்படுகிறது. உலகின் இன்பத்திற்கெல்லாம் மூலாதாரமானவனும், சீதாதேவியின் உயிர்த் துணைவனும், சூரிய குலத் தோன்றலும், நற்குண சித்தி பெற்றவனுமான இராமபிரானை வணங்கிப் போற்றுகிறார். 

பஞ்சரத்ன கீர்த்தனையின்போது தியாகராஜ சுவாமிகளுக்கு நடைபெறும் அபிஷேகம்

இதைத் தொடர்ந்து, இரண்டாவதாக கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலில் ஐம்புலன்களின் வழிபோய் துடுக்குத்தனம் படைத்தத் தன்னை திருமகளின் இதயத் தாமரையில் மலர்ந்திருக்கும் அந்த இராமபிரான் தன் துடுக்குத் தனத்தை அடக்கிக் காப்பாற்றுவான் என்கிறார்.

மூன்றாவதாக ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலில் ஸ்ரீ தியாகராஜர் தன் மனத்தை விளித்து இறைவன் தான் எண்ணியதை சாதித்துவிட்டான் என்று போற்றி மகிழ்கிறார்.

நான்காவதாக வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலில் ராமபிரானைத் தினந்தோறும் ஆர்வத்துடன் நினைக்குந்தோறும் மனம் இனிக்கிறது என்கிறார். 

தியாகராஜ சுவாமிகள்

இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' என்ற பாடலில் இவ்வுலகில் உள்ள அத்தனை பேரருளாளர்களையும் வணங்குகிறார். நிலவைப் போன்ற குளிர்ந்த வண்ணமுடைய இறைவனின் அழகைத் தன் இதயத் தாமரையில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும் அத்தனை பேருக்கும், மனமெனும் குரங்கை அடக்கி பரம்பொருளின் பேரொளியை தரிசிக்கும் அத்தனை மேலோரையும் வணங்கி போற்றுகிறார்.

இவற்றில் முதலாவது கீர்த்தனையான ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் மட்டும் சம்ஸ்கிருத மொழியிலும், அடுத்துள்ள 4 கீர்த்தனைகளும் தெலுங்கு மொழியிலும் இயற்றியுள்ளார்.

இவருடைய கீர்த்தனைகளில் எல்லாம் மிக உயர்ந்த பக்தி நெறிகளையும், கருத்துக்களையும் வைத்துப் பாடியிருக்கிறார். காலத்தால் அழியாத அரிய கீர்த்தனைகள் தியாகராஜரின் கீர்த்தனைகள். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆராதனை நடத்துகிறபோது, அவர் எந்த மொழியில் பாடினாரோ, அந்தப் பாடல்களை அதே மொழியில் பாடி ஆராதனை செய்வதென்பது வழக்கத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT