சிறப்புக் கட்டுரைகள்

உலக இசை விழா

11th Jan 2023 04:30 AM | வி.என். ராகவன்

ADVERTISEMENT

கர்நாடக இசை உயிர்த்துடிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கானோர் பாடிப் பரவ காரணமாக இருப்பவர் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்.

அவரது தாய்மொழி தெலுங்கு என்பதால், அவர் அந்த மொழியிலேயே கீர்த்தனைகளை இயற்றினார். சம்ஸ்கிருதத்திலும் சில பாடல்களை எழுதினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் தெலுங்கு மொழியே பிரதானமாகப் போற்றப்பட்டு வந்தது. அதனால், அப்போதெல்லாம் தெலுங்கு மொழியில் பாடல்களை இயற்றுவதும், பாடுவதும் வழக்கமாக இருந்தது.

சத்குரு தியாகராஜ சுவாமிகள்

அவர் 700-க்கும் அதிகமான கீர்த்தனைகளை இயற்றினார். கால வெள்ளத்தில் மறைந்து கிடைக்கப் பெறாமல் போன கீர்த்தனைகள் ஏராளம். ஆனால், அவர் வெவ்வேறு ராகங்களைக் கையாண்டார். அதில் பெரும்பாலானவை அரிய ராகங்கள். அவருக்கு சிஷ்யர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், அவரது கீர்த்தனைகள் உலகம் முழுவதும் பரவின.

ADVERTISEMENT

எனவே, கர்நாடக இசைக்கு அவரது கீர்த்தனைகளே அடிப்படையாகத் தொடர்கின்றன. கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிரதானமாகப் பாடப்படுவது தியாகராஜரின் கீர்த்தனைகளே. இதனால், கர்நாடக இசையின் பிதா மகராக தியாகராஜர் போற்றப்படுகிறார்.

பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி

அதனால் ஆண்டுதோறும், அவர் இறைவனடி சேர்ந்த புஷ்ய பகுள பஞ்சமி திருநாளில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் காவிரிக்கரையோரம் அந்த மகானின் சமாதியின் முன் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் கலையைக் கற்றுத் தருபவரை குருவாக ஏற்று போற்றுவது வழக்கம். ஆனால், அந்த குருக்களுக்கும் குருவாகத் திகழ்பவர் தியாகராஜ சுவாமிகள். இசைக் கலைஞர்கள் அனைவரது நெஞ்சத்திலும் தியாகராஜ சுவாமிகள் மானசீக குருவாகவே நிறைந்துள்ளார்.
எனவே, வாழ்நாளெல்லாம் அவருடைய கீர்த்தனைகளை பாடி இசை நிகழ்ச்சிகள் நடத்துகிற ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் தன்னெழுச்சியாக இங்கு வந்து அந்த மகானுக்கு அஞ்சலி செலுத்துவதை ஒரு புனிதக் கடமையாகக் கருதுகின்றனர்.

தியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம முகப்பு

உலக அளவில் இப்படியொரு விழா வேறெங்கும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதையான லுட்விக் வான் பீத்தோவன் பல அற்புத இசை வடிவங்களை உலகுக்கு வழங்கியதாகக் கூறுவர். இவரது இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், அவருக்குக் கூட இதுபோன்ற இசை அஞ்சலி நடத்தப்படுவதில்லை. இவரைப் போன்று உலகப் புகழ்பெற்ற இசை அறிஞர்கள் யாருக்கும் ஆராதனை விழா நடத்தி இசை அஞ்சலி செலுத்தப்படுவதில்லை.

இசையைக் கற்றுத் தந்த தங்களது குருவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இசை அஞ்சலி செலுத்துவது சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு மட்டுமே தொடர்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதிலிருந்தும், கேரளம், ஆந்திரம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் சென்னையிலிருந்து கலைஞர்கள், ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டில் குடியேறிய ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர். 

ஆராதனை விழாவின்போது அமைக்கப்படும் பிரம்மாண்டமான பந்தலின் முகப்பு.

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் உள்பட எல்லோருமே அழைப்பிதழ் எதுவும் இல்லாமல், தாங்களாகவே முன் வந்து பாடி தியாகராஜ பெருமானுக்கு இசை அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றனர். குறிப்பாக, பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி, அனைத்து கலைஞர்களும், ஆர்வலர்களும் சரி சமமாக மண் தரையில் அமர்ந்து, குரு பக்தியுடன் ஆத்மார்த்தமாகப் பாடுகின்றனர்.

அக்காலத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, பிருந்தா, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், சந்தானம், மதுரை சோமு, குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, ஹரிகதை அண்ணாசாமி பாகவதர், எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார், குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட மிகப் பெரும் கலைஞர்கள் தியாகராஜ ஆராதனை விழாவில் பங்கேற்று பாடி இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த மரபு இப்போதும் தொடர்கிறது. பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், சீர்காழி ஜி. சிவசிதம்பரம், கே.ஜே. யேசுதாஸ், மஹதி, மகாநதி ஷோபனா, சேலம் காயத்ரி, பாம்பே ஜெயஸ்ரீ, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, பாபநாசம் அசோக் ரமணி, சந்தீப் நாராயணன், அரித்துவாரமங்கலம் கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், ஷேக் மெகபூப் சுபானி, இஞ்சிக்குடி இ.பி. கணேசன், பிரபஞ்சம் பாலச்சந்திரன் உள்பட ஏராளமான கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆண்டு முழுவதும் கச்சேரிகளில் பாடும் அவர்கள் தியாகராஜ சுவாமிகளின் சன்னதியில் பாடுவது ஆத்ம திருப்தியாகக் கருதுகின்றனர். இதன் மூலம், வாழ்க்கையில் முன்னேற்றமும், வாய்ப்பும் கிடைப்பதாக அவர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

இப்போது, 176 ஆம் ஆண்டாக இந்த ஆராதனை விழா நடைபெறுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தப்பட்டு, இசை அஞ்சலி செலுத்தப்படுவது சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT