சிறப்புக் கட்டுரைகள்

தியாகராஜருக்காக தியாகம் செய்த நாகரத்தினம்மாள்!

தினமணி

பெங்களூரு நாகரத்தினம்மாள் 1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவரது தந்தை வழக்குரைஞர் சுப்பராவ். தாய் புட்டலட்சுமி அம்மாள். இவர் சிறு வயதிலேயே கிரிபட்டா திம்மையா என்பவரிடம் சம்ஸ்கிருதமும், இசையும் பயின்றார். இவருடைய மாமா வெங்கடசாமி அப்பாவிடம் வயலின் கற்றார். பின்னர், வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரிடம் சீடரானார்.

பெங்களூரு கிட்டண்ணாவிடம் பரதம் பயின்றார். மேலும், சென்னை வெங்கடாசாரியிடம் அபிநயம் தனியாகப் பயிற்சி பெற்றார். சிறு பெண்ணாக இருந்த நாகரத்தினம் 9 வயதுக்குள்ளேயே இசையிலும், நாட்டியத்திலும், வடமொழியிலும் புலமைப் பெற்றார். தன்னுடைய 15 ஆம் வயதில் வீணை சேசண்ணா இல்லத்தில் முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

இவர் இசையோடு கூடிய கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் கதாகாலட்சேபத்தை ஆண்கள் மட்டுமே செய்து வந்த நிலையில், முதல் முதலாகப் பெண் கதாகாலட்சேபம் செய்த பெருமை நாகரத்தினத்தையே சாரும்.

பின்னர், நாகரத்தினத்துக்கு சென்னையிலும் ஆதரவு பெருக எல்லோரும் இவரை பெங்களூரு நாகரத்தினம் என அழைக்கத் தொடங்கினர். இவர் தமிழ்நாடு, ஆந்திரம் முழுவதும் பயணம் செய்து 1,235-க்கும் அதிகமான கச்சேரிகள் செய்தார். 

திருவையாறு தியாகராஜசுவாமிகள் ஆஸ்ரமத்தில் தியாகராஜ சன்னதிக்கு எதிரே நாகரத்தினம்மாள் சமாதியில் உள்ள அவரது சிலை. 

இவர் தியாகராஜ சுவாமிகளுக்கு செய்த சேவை மிகப் பெரியது. இந்த அம்மையாருடைய பெயரைத் தியாகராஜர் பெயரும், அவரது இசையின் பெருமையும் உள்ள வரை மறக்க முடியாது.

பராமரிப்பின்றி இருந்த தியாகராஜர் சமாதிக்கு விமோசனம் கொடுத்தார். நாகரத்தினம்மாள் வருவதற்கு முன்பு தியாகராஜர் சமாதி, கட்டடம் இன்றி பிருந்தாவனம் மட்டுமே இருந்தது. அதுவும் பராமரிப்பின்மைக் காரணமாக யாரும் செல்ல முடியாத அளவுக்குப் புல், புதர்கள் மண்டின.

அங்குள்ள பல சமாதிகளுக்கு இடையில் இருந்த தியாகராஜருடைய சமாதியை நாகரத்தினம்மாள் கண்டுபிடித்தார். பின்னர், 1921 ஆம் ஆண்டு அக். 27-ம் தேதி சமாதியைக் கட்டினார். 1925 ஆம் ஆண்டு ஜன. 7-ம் தேதி தியாகராஜர் ஆஸ்ரமத்துக்கு குடமுழுக்கு நடத்தினார்.

தியாகராஜர் விழாவாக நடைபெற்று வந்த நிகழ்ச்சியை முதல் முதலில் ஆராதனை விழாவாக 5 நாள்கள் நடத்திய பெருமை நாகரத்தினத்தையே சாரும். தியாகராஜருக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் நாகரத்தினம் அம்மாள். இவர் தன்னுடைய இறுதி காலத்தில் திருவையாற்றிலேயே கழித்தார். தன்னுடையே செல்வம், நகைகள் எல்லாம் தியாகராஜருக்கே கொடுத்தார். மேலும், தன்னுடைய இசை, ஆற்றல் மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் தியாகராஜருக்கே அர்ப்பணித்து, இசையைப் பரப்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவர் 1952 ஆம் ஆண்டு காலமானார். தன்னுடைய கடைசி ஆசையாக தன்னுடைய சமாதியை தியாகராஜருக்கு எதிரில் அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி, இவரது சமாதி தியாகராஜரின் சமாதிக்கு எதிரில் வைக்கப்பட்டுள்ளது. ஆராதனை அன்று இவருக்கும் தீபம் காட்டி வருவது இன்றும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT