சிறப்புக் கட்டுரைகள்

பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் - நுண்ணிய பார்வை!

வளவன். அமுதன்


2022 ஆம் ஆண்டு ஜூலையில் 13.73 கோடி பெண் பயணிகள் தமிழக பேருந்துகளில் பயணம் செய்ததற்கு  ரூ. 206 கோடி மதிப்பிலான இழப்பீடு தொகையை தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களுக்கு  வழங்குகிறது. (ஒரு பயணிக்கு ரூபாய் 15/-வீதம்).

பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் என்பது அந்தந்த பிராந்தியத்தில் நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வரப்பிரசாதம். இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான முழுமையான தொலைநோக்குப் பார்வையும் புதிய உத்தியும் கொண்டதாகவும் இருக்கிறது. இலவசக் கட்டணக் கொள்கையானது நடுத்தரக் குடும்பங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்கும்  அதிக பெண் பயணிகளை ஈர்ப்பதற்கும் பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் இணைப்புகளை மேம்படுத்துவதற்கும், ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. 

மேற்கத்திய நாடுகளில், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில்  பெண் பயணிகளுக்கு  அரசு இலவசப் பயணத்திற்கான முதன்மையான காராணிகளாக  காலநிலை மாற்றம்  மற்றும் சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துதல் போன்றவைகளை  எடுத்துக்கொண்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதற்கான காரணத்தை தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

பொதுமக்களின் பார்வையில் பெண்களின் ஓட்டு வங்கியைப் பெறுவதற்காக பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கியதாக நினைக்கின்றனர். ஆனால், கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் 100 நாட்கள் வேலை என்ற திட்டத்தைவிட பெண் பயணிகளுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்து வழங்குவது என்பது சிறந்தது. இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த  முழுமையான தொலைநோக்குத் திட்டம் என்பதையும் மற்றும் சுயசார்பு கொண்ட பெண்களை உருவாக்கும் புதிய உத்தி என்பதையும் பெண்களுக்கான இணைப்பு வசதியை மேம்படுத்துவதாகக் காட்டும் முதலீட்டுத் திட்டம் என்பதையும் அரசு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

அவ்வாறு தெரிவிக்காமல் வெறுமனே பெண்களுக்கு இலவசப் பயணம் அமல்படுத்தும்போது அரசு மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறை ஆகிய இரண்டிற்கும் பெரிய பலன்களைத் தராது.

பெண்கள் கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நகரங்களில் நல்ல வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு இத்திட்டம் மிகவும் பயன்படுகிறது . தமிழக அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், முன்பு இதுபோன்ற தங்குமிடங்களுக்குச் செல்லவோ அல்லது வேலைக்காக நகரத்திற்குச் செல்லவோ முடியாமல் இருந்த பல கிராமப்புறப் பெண்களுக்கு இப்போது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இது அவர்களின் வருவாயைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளது மற்றும் பல பெண்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது.

குறிப்பாக, கிராமங்களில் குறைந்த ஊதியத்திற்கு 10, 12 வகுப்பு வரை படித்த பெண்கள் மாதம் ரூபாய் 4000/- பெற்றுக்கொண்டு சிறிய கடைகளில் அலுவலகங்களில் 12 மணி நேரம் வேலை செய்து பாலியல் சுரண்டல்களுக்கு மத்தியில்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள், இத்திட்டத்தின் மூலம் பெருநகரம் மற்றும் மாநகரங்களில் உள்ள மால்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புககள், பெரிய கட்டிடங்களின் பராமரிப்பு வேலைகளுக்கு கிராமங்களிலிருந்து அல்லது புறநகர்ப் பகுதிகளிலிருந்து  நகரங்களுக்கு பாதுகாப்பாகவும் மற்றும் வருமான உயர்வுடன் கூடிய  (ரூபாய் 16000/- வரை) வேலைகளுக்குச் செல்ல பெண்களுக்கு மிகப்பெரிய முத்தாய்ப்பாக வாய்ப்பாக அமைகிறது என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியும். (உதாரணம் :மெட்ரோசோன், வி.ஆர்.  மால்).

அரசு மாதம்தோறும் ஒரு பெண்ணுக்கு ரூபாய் 900/- செலவு செய்து அவர்களை முந்தைய வருமானமான ரூபாய் 4000/- லிருந்து ரூபாய் 16000/- வரை  வருமான உயர்வு பெற்று கிட்டத்தட்ட 3.5 முதல் 4 மடங்கு வரை கூடுதலாக பெறுகின்றனர். இத்திட்டத்தினால் கிடைக்கப் பெறும் தமிழக பெண்களின் வருமான வரம்பு உயர்வடைந்து அதனால் மாநிலத்தில் முன்னேற்றம் (GDP) ஏற்பட வழி வகை செய்கிறது. 

பேருந்துகளின் கூட்ட நெரிசல் அதிக பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும். பாதுகாப்புக் காரணங்களால், பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கான குறுகிய கால அவகாசம் உள்ளது.  குடும்பஸ்தர்கள், தங்கள் மனைவியை அலுவலகம் செல்வதற்கும் அல்லது குழந்தைகளை முறையே பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும், அழைத்து வருவதற்கும் பாதுகாப்பு காரணம் கருதி கணவர்களையே அதிகம் சார்ந்துள்ளனர். இது பொதுமக்களின் தனிப்பட்ட வாகனப் பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கிறது. பெண்களுக்கு என தனி பேரூந்துகளில் இலவசப் பயணத்தை அறிமுகப்படுத்தும்போது கூட்ட நெரிசல் பயணம் மற்றும் தனிநபர் வாகன பயன்பாடு குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்படுகிறது.

எனவே, தமிழக அரசு பெண்களுக்கென இலவசப் பயணப் பேருந்துகள் தனியாக இயக்கினால் தற்போது பயணம் செய்யக்கூடிய சதவிகிதத்தைவிட பன்மடங்கு  வாய்ப்புள்ளது. பொதுப் போக்குவரத்து நிலையங்களில் பயன்படுத்துவதற்கு வசதி குறைவாக இருந்தாலும், தமிழக பெண்கள் இலவசப் பொதுப் போக்குவரத்தைப் பெரிதாக நம்பியும் எதிர்பார்த்தும் உள்ளனர்.

அதற்கான  காரணங்கள், இன்னும் பலர் பொதுப் போக்குவரத்து மட்டுமே  பெண்களுக்கு  பாதுகாப்பாகவும்  மற்றும் பெரும்பான்மையாக சரியான நேரத்திற்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக அமைகிறது.

குறிப்பாக அதிகாலை 3 மணி அளவில் காய்கறிகளை, கீரையை, கடலில் இருந்து மீன் இறைச்சிகளை கிராமங்களில் இருந்து எடுத்து வந்து நகரங்களுக்கு விற்பனை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் வருமான உயர்வையும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் வழங்குகிறது.

பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து - நன்மைகள் 

• சாலையில் கார்களின் பயன்பாட்டின் எண்ணிக்கை குறைவதால் காலநிலை மாற்ற நிகழ்வுகள் குறையும் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறையவும் உதவுகிறது. 

• பெண்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தும்போது தனிநபர் வாகனப் பயன்பாடு குறைந்து காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது. 

• அரசாங்கத்தின் வேலை குறிப்பாக பெண்களுக்கான சேவைகளை வழங்குவது, இதன் மூலம் பெண்களின் வருமான வரம்பு உயர்ந்து பெண்கள் அதிகாரம் மேம்பட உதவுகிறது. 

• பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது பாலியல் துஷ்பிரயோகம்/ துன்புறுத்தலைத் தடுக்கபடுகிறது. 

• மனித வளச் சந்தையில்  அர்ப்பணிக்கப்பட்ட சிரத்தையுடன் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்கள் கிடைக்க வழி வகை செய்கிறது. 

• பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் நம்பகமானவை, அதன் பாதுகாப்பு பயணத்தை உறுதிசெய்து பெண்கள் ஊக்கமடைவதற்கு வழி வகுக்கிறது.

• உள் நகரங்களில் உள்ள பெண் பயனர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் செயல்திறன், வசதி மேம்படவும் மற்றும் அதன்மேல் ஈர்ப்பினை உருவாக்கவும் வழிவகை செய்கிறது .

• இலவசப் போக்குவரத்து மூலம் பெண்களை குழுக்களாக ஒன்றிணைத்து தனிப்பட்ட வாகனங்களைச் சாராமல்  அவர்களின் நட்பு வட்டாரம் விரிவடைய உதவுகிறது. 

• அதிக பயணச் செலவு  இல்லாததால் நிறைய பெண்களின் சேமிப்பு உயர்வடைந்து  பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் .

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT