சிறப்புக் கட்டுரைகள்

சர் ஆர்தர் காட்டன்: போற்றத் தவறிய தமிழகம்

15th May 2022 11:37 AM | வி.என். ராகவன்

ADVERTISEMENT


இந்தியாவை ஏறத்தாழ 300 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்து, ஏராளமான வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றது பிரிட்டிஷ் அரசு. இதை எதிர்த்து போராடிய மக்களை அடித்து துன்புறுத்திய ஆங்கிலேய அதிகாரிகள் பலர் இருந்த நிலையில், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் இந்திய நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்த பென்னி குயிக்கை போல, காவிரி பாசனப் பகுதியில் பராமரிப்பின்மையால் சீரழிந்து கிடந்த நீர் நிலைகளை ஒழுங்கமைத்துக் கொடுத்தவர் சர் ஆர்தர் காட்டன்.

இங்கிலாந்து நாட்டின் செஸ்ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803 ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பத்தாவது மகனாகப் பிறந்தார் சர் ஆர்தர் காட்டன். சிறு வயதிலிருந்தே பொறியியல் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம், பின்னாளில் அவரை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றது.

அவர் தனது 15-ஆவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியேற்றார். பின்னர், 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்புத் துறையில் கண்காணிப்புப் பொறியாளருக்கு உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் வாய்ப்பு காட்டனுக்கு கிடைத்தது.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில் 1829 ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்ற ஆர்தர் காட்டனை காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனி பொறுப்பாளராக நியமித்தது ஆங்கிலேய அரசு. தொடர்ந்து, பல்வேறு பதவிகளை வகித்த அவர் சென்னை மாகாண பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார்.

இதனிடையே, கரிகால சோழனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணையில் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. இதனால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளம், வறட்சி காரணமாக செழிப்பற்று இருந்தது. இப்பகுதி மக்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். மிகப் பெரும் சவாலாக அமைந்த இந்த பிரச்னைக்கு தீர்வு காண முனைந்தார் ஆர்தர் காட்டன்.

இந்தப் பணி 1830 ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆர்தர் காட்டன் நீண்ட நாள் விடுப்பு எடுத்து ஐரோப்பாவுக்குச் சென்றார். என்றாலும், ஓய்வுக்குப் பின்னர் அவர் அந்த முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து அப்பணியை மேற்கொண்டார். பயனற்று இருந்த கல்லணையில் துணிச்சலாகச் சிறு பகுதியைப் பிரித்து எடுத்து அங்கே மணல் போக்கிகளை அமைத்தார்.

அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர் பழந்தமிழரின் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். அதுமட்டுமல்லாமல், அதற்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.
'
இது மட்டுமல்லாமல், 'ஆழம் காண முடியாத மணல் படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தைத் தமிழர்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த அந்நாளைய மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' எனவும் பெருமிதத்துடன் பதிவு செய்தார் ஆர்தர் காட்டன்.

கற்குவியல்களால் அமைக்கப்பட்ட அந்த அணையின் அடித்தளத்தின் உறுதித்தன்மையைப் பற்றிக் கூறிய அவர் எந்தக் காலத்திலும் இது சேதமடையாது என்ற உறுதியையும் அளித்தார். இந்த அடித்தளத்தில் எதிர்காலத்திலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி டெல்டா பகுதி மீது மிகுந்த கவனம் செலுத்திய அவர் பல்வேறு பாசனத் திட்டங்களையும் நிறைவேற்றினார். கல்லணையை முன் மாதிரியாக் கொண்டு காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புக்கு வரும் தண்ணீர் நேராகக் கடலில் கலந்து விரயமாகிக் கொண்டிருந்தது. இதனால், காவிரி பாசனப் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. இதைத் தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணையைக் (மேலணை) கட்டினார். இதன் மூலம், காவிரி நீர் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், வெள்ள காலத்தில் உபரி தண்ணீரை கொள்ளிடத்தில் விடுவதற்கும் இந்த அணைப் பயன்படுகிறது.

இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரை என்ற இடத்தில் கி.பி. 1840 ஆம் ஆண்டில் கீழணையை முழுமையாகக் கட்டியதும் அவரே. இதனால், தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து வீராணம் ஏரிக்குச் சென்று அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆர்தர் காட்டன் காவிரி டெல்டா பகுதியில் நீர் பாசனத்துக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இந்தப் பகுதியில் பாசனத்துக்கான வடிவமைப்பு, பராமரிப்பு, பாசன முறை போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்ததே ஆர்தர் காட்டன்தான். அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சமமாகக் கிடைக்கும் விதமாகப் பாசன முறையை வடிவமைத்தார். இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.

வெண்ணாறு, வெட்டாற்றில் தண்ணீர் விரயமாகாமல் முழுவதும் பாசனத்துக்குப் பயன்படும் விதமாகத் திட்டங்களை வகுத்தார். அதைத்தொடர்ந்து, பலகையில் தடுப்புகள் அமைத்து பாசன நிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் விதமாக ஏற்படுத்தினார். அவர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி வெண்ணாறு, வெட்டாற்றில் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காவிரி நீர் கடலில் கலந்து விரயமாவதைத் தடுத்து, முழுமையாகப் பாசனத்துக்குப் பயன்படும் விதமாக மாற்றி அமைத்தவர் ஆர்தர் காட்டன்தான். இந்த மகத்தான பணியால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

கல்லணையில் கற்ற பாடத்தை ஆந்திர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தினார். கல்லணை கட்டுமானத்தைப் பயன்படுத்தி கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டி, அப்பகுதியைச் செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றினார் ஆர்தர் காட்டன். இதன் மூலம், ஏறத்தாழ 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்க்கையையும் கொடுத்தது.

இதன் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் அமைத்து கொண்டாடுகின்றனர். அவரது பிறந்த நாளன்று ஆர்தர் காட்டன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வழிபடுகின்றனர்.

ஆனால், காவிரி பாசனத்தை ஒழுங்கமைத்துக் கொடுத்த ஆர்தர் காட்டனுக்கு கல்லணையில் மட்டுமே சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது.

கல்லணையில் உள்ள ஆர்தர் காட்டன் சிலை

கடந்த 1899 ஆம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி தனது 96-ஆவது வயதில் உயிரிழந்த ஆர்தர் காட்டன் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்கு ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி, அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். அவரைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்லனையிலும், அணைக்கரையிலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

(மே 15-ஆம் தேதியான இன்று சர் ஆர்தர் காட்டனின் 220-ஆவது பிறந்த நாள்)
 

ADVERTISEMENT
ADVERTISEMENT