சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: நவீன அடிமைகளா மலையகத் தமிழர்கள்? நேரடி ரிப்போர்ட்-15

12th May 2022 07:42 PM | கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

மலையகத் தமிழர் என்பவர்கள் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இரப்பர், காப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும்.

இருப்பினும் இந்த "மலையகத் தமிழர்" எனும் பதத்திற்குள் தமிழரல்லாத தெலுங்கர், மலையாளியினரும் அடங்குவர். மலையகப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழக தமிழரே பெரும்பான்மையாக இருப்பதனால் அவர்களுடன் ஒன்றி வாழ்ந்த தெலுங்கரும் மலையாளிகளும் தமிழ் பேசுவோராக மாறிவிட்டனர். ஆங்கிலேயர் இவர்களை ஒரு அடிமை போன்ற நிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னர் தொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாத அளவில் பின் தள்ளப்பட்ட வகையிலேயே உள்ளது. இந்தப் பின்னடைவு, விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவு துண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களும் இழந்தவர்களாகிப் போயினர்.

பூர்வீக ஈழத்தமிழர் சிக்கல்கள் மற்றும் கோரிக்கைகள் வேறு, மலையக தமிழக வம்சாவளி  மக்களின் பிரச்னைகள்  முற்றிலும் வேறுபட்டது. முன்னாள் அமைச்சர்கள் மனோ கணேசன்,  ராதாகிருஷ்ணனை ஆகியோரை சந்தித்தேன். ஆனால் தொண்டமான் பண்டார்நாயக காலம் முதல் ஜெயவர்தன்னே - இன்றைய ராஜபட்ச வரை அமைச்சர்களாக ஆட்சி இருக்கின்றனர்.                                                                                                                      

ADVERTISEMENT

மலையகத் தமிழர்கள் தமிழகத்திலிருந்து 1823-இல் பிரிட்டிஷ்கார ஆட்சிக்காலத்தில் தோட்ட வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழகத்திலிருந்து மலையகத்தில் குடியேறி, அடுத்த ஆண்டு வந்தால் இவர்களுக்கு 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

இன்றைக்கு மலையகத் தமிழர்கள் அங்கே பாடுபட்டு இலங்கையினுடைய பொருளாதாரத்தை  செழிக்க முக்கிய அங்கமாக திகழ்கின்றனர். இன்றைக்கு அவர்கள் பலர் முன்னேறி வணிகம், தொழில் என கொழும்பு நகரத்தில் குடியேறி இருக்கின்றனர். ஏறத்தாழ 1.5 மில்லியன் இந்திய வம்சாவளி தமிழர்கள் அங்கே  இன்றைக்கு இருப்பதாக ஒரு கணக்கு. 1500 - 1815 வரை சில நாயக்கர் அரசர்களும் அங்கே ஆட்சியில் இருந்ததாக சில செய்திகள். கண்ணுசாமி நாயக்கர் என்ற அரசர் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்து இங்கே இறந்தார் என்ற செய்திகளும் உண்டு. வேலூர் சிறையில் அவருக்கான அடையாள நினைவுச்சின்னங்கள் இருக்கிறது. 1500-ல் நாயக்கர்கள் வம்சம் அங்கு ஆட்சி செய்ததும் , 1815-க்குப் பிறகு இந்த வம்சம் சார்ந்த மன்னர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்ற செய்திகள் உண்டு. 

இதையும் படிக்க: எரியும் இலங்கை: கடனால் சூழ்ந்த லங்கா; நேரடி ரிப்போர்ட்- 10

இந்நிலையில் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் நலன்களையும் கவனிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள மக்கள் இந்திய அரசிடம் வைத்துள்ளனர். 

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இலங்கையில் இந்தியத் தூதரை சந்தித்து இது குறித்து பேசியதாக செய்திகள் வருகிறது.

இலங்கையில் பூர்வீக தமிழர்களாக வாழும் வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழக வம்சாவளியினர் வாழும் மலையகத்திலிருந்தும், அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக கழகத் தலைவர், தமிழக முதல்வரிடம் சொல்லி, திமுக பிரதிநிதிகளை அழைத்து வந்து இங்கே (இலங்கையில்) உள்ள நிலவரத்தை அறிந்து சென்று, தமிழக முதல்வருக்கு அறிக்கையாகக் கொடுத்தால் நல்லது என்றும், அதற்கான முயற்சிகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதைத் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளேன். இது குறித்தான அழைப்பிதழ் கடிதங்களும் முறையாக வந்துள்ளன. இதுகுறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி விட்டேன்.

இதையும் படிக்க: எரியும் இலங்கை: இந்தியாவின் திட்டங்கள் மதிக்கப்படுகிறதா?; நேரடி ரிப்போர்ட்- 11

இலங்கையில் இருக்கிற அசாதாரண நிலையை அறிந்து வந்து, தமிழக முதல்வரிடம் அறிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள் விரும்புகின்றனர். தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில்  கடந்த மே-5 ஆம் தேதி மனோ கணேசன் போன்ற உறுப்பினர்கள் பேசியுள்ள செய்திகளெல்லாம் வந்தது. தமிழக அரசை இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான முடிவுகளை தமிழக முதல்வர் தான் எடுப்பார் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளேன்.

(1) இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பில் தமுகூ என்ன கோருகிறது? ஏன் கோருகிறது?
இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பில் அவர்களின் விருப்ப ஆவணத்தில் தலைப்பே இப்படித்தான் இருக்கிறது.
“இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்பும், சமீபத்தையை இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்”. அதாவது, இலங்கையை விட்டு பிரிய அல்ல, முழு இலங்கையர்களாக மாறவே விரும்புகின்றனர்.  

(2) அதென்ன, இலங்கை இந்திய ஒப்பந்தங்கள் என்றும் கூறுகிறீர்கள்?                    

ஆம். இலங்கை நாட்டு தலைவர்கள், இந்திய நாட்டு தலைவர்களுடன் இதுவரை நான்கு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்கள். ஆனால், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், மக்களும், இரண்டு நாட்டிலும், 1987-ல் செய்யப்பட்ட ராஜிவ்-ஜேஆர் ஒப்பந்தம் மட்டுமே ஒரே ஒப்பந்தம் என்றும், மாகாணசபைகள் மட்டுமே ஒரே பிரதிபலன் என்றும் கணக்கு போடுகிறார்கள்.  

இது பிழை. 1954-ல் நேரு-கொத்தலாவலை, 1964-ல் சிறிமா-சாஸ்த்ரி, 1974-ல் சிறிமா-இந்திரா ஆகிய ஆண்டுகளில் மூன்று ஒப்பந்தங்கள், இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பில் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தங்கள் சரியாக நடைமுறை ஆகியுள்ளனவா என்பதை மீளாய்வு செய்து பார்த்து, தவறுகளை சரி செய்ய வேண்டிய கடமை கையெழுத்திட்ட இலங்கை, இந்திய அரசுகளுக்கு உண்டு.  கடந்த 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலமாககூட, மாகாணசபைகளைக் கொண்டு வந்த  13 ஆம் திருத்தம் மட்டுமல்ல, மொழியுரிமைகளைக் கொண்டுவந்த 16ஆம் திருத்தம் கூட அரசியலமைப்பில் இருக்கின்றன. 
இவை சிலருக்கு மறந்து விட்டது. சிலர் வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி இடம் கொடுக்காது. ராஜிவ்-ஜேஆர் 1987 ஒப்பந்தம் எந்த வகையிலும் தீர்வைத் தராது.

இதையும் படிக்க: எரியும் இலங்கை: காந்தியும் சிலோனும்; நேரடி ரிப்போர்ட்- 12

(3) இது குறித்து இலங்கையுடன் உங்களுக்கு இருக்கும் நல்லுறவை பயன்படுத்தி எங்களுக்கு உதவுங்கள் என இந்தியா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் கோருகிறோம். அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அரசாங்கங்கள் மற்றும் ஐநா அமைப்பு ஆகியவற்றிடமும் தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.   

(4) இந்தியா, பிரித்தானியா ஆகிய நாடுகளை விசேடமாக குறிப்பிடுகிறீர்கள். ஏன்?

ஆம். இலங்கையை போன்று இந்த இரண்டு நாடுகளுக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் இலங்கையர் தொடர்பில் சிறப்பு கடமை உள்ளது. 
1954 ல் நேரு-கொத்தலாவலை, 1964ல் சிறிமா-சாஸ்த்ரி, 1974ல் சிறிமா-இந்திரா ஒப்பந்தங்களின் அந்த பக்க கையெழுத்து இந்திய அரச தலைவர்களின் கையெழுத்து. அன்றைய இலங்கை அரசை சந்தோசமாக வைத்துக்கொள்ளும் தங்கள் தேவைகளுக்காக எமது மக்களை கேட்காமலே ஒப்பந்தம் செய்து எமது ஜனத்தொகையை  குறைத்து எம்மை அரசியல்ரீதியாக இந்தியா பலவீனப்படுத்திவிட்டது எனச் சொல்கின்றனர். 

அடுத்தது, 1954, 1964 ஒப்பந்தங்களின் போது இலங்கை பிரித்தானிய பேரரசின் கீழ்தான் இருந்தது. குடியரசு ஆகி இருக்கவில்லை. மேலும், மலையக மக்களை 1823இல் இங்கே கொண்டு வந்தது, பிரித்தானிய பேரரசுதான்.  அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகப்போகின்றன. மலையக தமிழரின் கடந்தகால தலைவர்கள் இவைபற்றி உரிய காலத்தில் சர்வதேச அரங்கில் கேள்வி எழுப்பவில்லை.

இதையும் படிக்க: எரியும் இலங்கை: ஏமாளியாக்கப்படும் இந்தியா; நேரடி ரிப்போர்ட்- 13
 
(5)குடியுரிமை பிரச்சினை தீர்ந்து விட்டதுதானே? அதென்ன, மலையக தமிழர் முழு இலங்கையர் இல்லையா?  

குடியுரிமை, வாக்குரிமை, இன்று நம் எல்லோருக்கும் உண்டு.  எவருக்கும் இல்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட அக்கறை இன்மைதான். மற்றபடி சட்டப்படி பிரச்னை இல்லை. ஆனால், இந்நாட்டின் ஏனைய மக்களுக்கு சமமான முழு குடியுரிமை இன்னமும் கிடைக்கவில்லை. குடியுரிமை தருவதாக சிறிமா-சாஸ்திரி, சிறிமா-இந்திரா ஆகிய ஒப்பந்தங்கள் ஒப்பமிடப்பட்டதன் நோக்கம் என்ன? குடியுரிமையுடன் ஏனைய மக்களுக்கு சமமான காணியுரிமை, வீட்டுரிமை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவகர் செயலகம் ஆகியவை மூலமான அரச நிருவாக சேவைகளை முழுமையாக பெறும் உரிமை, அரச அலுவலகங்களில் எமது மொழியான, நாட்டின் அரச மற்றும் தேசிய மொழியான தமிழில் கடமையாற்றும் உரிமை, நாட்டின் ஏனையப் பகுதிகளில் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு அமைக்கப்படுவதை போன்று எங்கள் மக்களுக்கும் அதேவிதமான பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள், பிரதேச செயலக பிரிவு செயலகங்கள், கிராமசேவகர் பிரிவு செயலகங்கள் பெறுகின்ற உரிமை.,  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை கிடைக்கும்வரை நாம் இரண்டாம் பட்ச குடிமக்கள்தான். இவற்றை மாற்றத்தான் நாம் கோருகிறோம்.     

குறிப்பாக, தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கக் கூறுகிறோம். அதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்குச் சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேசச் செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை பெருகின்ற முழுமையான மலையகக் குடிமக்கள் சமுதாயம் கோருகிறது.   

(6) தேசிய  நீரோட்டத்தில் முழு இலங்கையராக உள்வாங்கக் கோருவதுடன் “நிலவரம்பற்ற சமூகச் சபை” என்ற ஒரு அமைப்பையும் கூறுகிறீர்களே? அது என்ன? 

நிலவரம்பற்ற சமுக சபை, நாடு முழுக்க சிதறி வாழும் இச்சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் பணியாற்ற அரசியலமைப்பு ரீதியாக உருவாக்கப்பட வேண்டும். மாகாணசபை, பிரதேசபை போன்று நிலவரம்பு இல்லை.

மேலும், இது அன்றைய பிரதமர் மகிந்த ராஜபட்ச நடத்திய முந்தைய சர்வ கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு யோசனையாகும்.  வடக்கில் கிழக்கில் வாழும் தமிழ், இஸ்லாமிய மக்களுக்காக அங்கு மாகாணசபைகள் உள்ளன. தெற்கில் வாழும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் இல்லை. அவற்றை உருவாக்கவும் வாய்ப்பு இல்லை. 
ஆகவேதான் “நிவரம்பற்ற நிலவரம்பற்ற சமூக சபை”யை தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

இதையும் படிக்க: எரியும் இலங்கை: இனி என்ன நடக்கும்? நேரடி ரிப்போர்ட்- 14
   
(7) தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் தொடர்பிலும் விசேச யோசனைகள் உள்ளனவே?

இந்நாட்டில் மலையகத் தமிழர் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். அதில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆவர். அவர்களது குடும்பங்களையும், தோட்டங்களில் வாழும், பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களையும் சேர்த்தால், சுமார் ஐந்து இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். இது எமது ஜனத்தொகையில் மூன்றில் ஒன்று ஆகும்.  இவர்களை கைத்தூக்கி தேசிய மட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும்.

ஆகவே, நிலம், வீடு, தொழில், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இதுவரை காலமும் இந்தப் பிரிவினர் இழந்த வளர்ச்சிகளை எட்டிபிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகள் அவசியம். 

குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட நிலவரம்பற்ற சமுக சபை வேண்டும் எனக் கோருவதற்கும் ஒரு காரணமாகிறது.
இந்த வரலாறு மிகவும் சாதுர்யமாக இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையகத் தமிழர் சந்தித்த துயரங்களை தவிர்த்து எழுதப்பட்டுள்ளது. 
1815-ல் இலங்கையின் கடைசி ராஜ்யம் கைப்பற்றப்பட்டு இலங்கை ஒரே நாடாக மாற்றப்பட்டு,   கண்டியின் கடைசி தமிழக வம்சாவளி தமிழ் மன்னன் பிரித்தானியரால் கைது செய்யபட்டு, ஏழு ஆண்டுகளில் 1823-ல் மீண்டும் தமிழக வம்சாவளி தமிழர் அதே ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.    

1948-ல் சுதந்திரத்தின் பின் முதல் இனவாத அடி அவர்கள் மீதுதான்  விழுந்து மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. அவ்வேளை ஆட்சியில் இருந்த பிரதமர் சேனநாயக்கவின்  அரசில் சேர விரும்பினார்கள்.
அடுத்த இரண்டாம் அடியும், வாக்குரிமை பறிப்பாக  மலையக தமிழர் மீதுதான் விழுந்தது.

அதையடுத்து இந்திய அரசும், இலங்கை அரசும், இந்த மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்து பேசாமலேயே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, மலையகத் தமிழ் மக்களின் பெரும்பகுதியினர் ஆடு, மாடு, கால்நடைகளை போல இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 

அதன்பின்னும் இன்றுவரை தமிழக வம்சாவளி  மலையக தமிழர்கள் நிம்மதியாக வாழ வில்லை. நவீன அடிமைகளான  அவர்களது சோகக்கதைகளை துயரங்களை இன்னமும் நிறைய செல்லலாம். 

                                                                                                                                    -தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT