சிறப்புக் கட்டுரைகள்

'அக்னிபத்' திட்டம் என்றால் என்ன? அச்சங்களும் அச்சுறுத்தல்களும்

வாணிஸ்ரீ சிவகுமார்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. படைகளுக்கு ஆளெடுக்கும் இந்தப் புதிய முறைக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.  

உள்ளபடியே இந்தத் திட்டம் பயனுள்ளதுதானா? இது பற்றிய விவரங்கள் என்னென்ன?  இளைஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அவர்களின் அச்சத்துக்குக் காரணங்கள் என்னென்ன?

இந்திய முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக  அதிகபட்சம் நாலாண்டுகள் மட்டுமே பணிபுரியும் 'அக்னிபத்' திட்டத்தை  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14 ஆம் தேதி அறிமுகம் செய்தார்.

ஹிந்தி உச்சரிப்பில் 'அக்னிபத்' என்றால், அக்னிப் பாதை, நெருப்புப் பாதை என்று பொருள்.

பெயர்க் காரணமோ என்னவோ, இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதற்கு மறு நாள் முதலே போராட்டங்கள் வெடித்தன.  போராட்டங்கள் என்றால் சாலை மறியலோ, உண்ணாவிரதமோ அல்ல. ரயில்களுக்கு, ரயில் நிலையங்களுக்கு, பேருந்துகளுக்கு, வாகனங்களுக்கு தீவைப்புப் போன்ற அக்னிப் போராட்டங்கள்.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞர்களை சேர்ப்பதற்காக 'அக்னிபத்' திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறுகிறது மத்திய அரசு. ஆனால், ராணுவப் பணி என்ற எங்களது கனவு தகர்ந்ததாகக் கூறி, பிகாரில் ராணுவப் பணிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒட்டுமொத்த இளைஞர்களும் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறார்கள்.

பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பணி நீட்டிப்பு செய்யப்படாமல், 21 அல்லது 23 வயதில் ராணுவப் பணியிலிருந்து வெளியேறும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கேட்டு இளைஞர்கள் கொதித்தெழுகிறார்கள்.

இது ராணுவ வீரர்களை நியமிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால், இந்த திட்டத்தை எதிர்க்கும், ராணுவத்தின் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் சிலர், வேலைவாய்ப்பு திட்டங்களை நாட்டின் ராணுவங்கள் செயல்படுத்துவதில்லை என்று கருத்துக் கூறுகிறார்கள்.

ஏன் இத்தனை எதிர்ப்பு, இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால் என்னவாகும்? 'அக்னிபத்' திட்டம் என்றால் என்ன? 

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் தற்காலிகமாக 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் இளைஞா்களைச் சோ்ப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏராளமான இளைஞா்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் வீரா்கள் ‘அக்னி வீரா்கள்’ என்றழைக்கப்படுவா். அவா்கள் பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள்  மட்டுமே பணிபுரிவாா்கள். இவா்களில் தேவைக்கு ஏற்ப, 25 சதவிகிதத்தினர் மட்டும் நிரந்தரப் பணியில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

வயது வரம்பு


அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 46,000 போ் பணியில் சோ்க்கப்படுவாா்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும்.  கடந்த இரு ஆண்டுகளாக கரோனா காரணமாக ராணுவத்துக்கு ஆளெடுக்காததால், இந்த ஆண்டு மட்டும் 23 வயது வரையிலானோர் தெரிவு செய்யப்படுவார்கள். தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் உரிய மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் குறிக்கோள்


இந்த 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பதன் முக்கிய குறிக்கோள் ஒன்றுதான். நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் மத்திய அரசு, ராணுவத்துக்கு ரூ. 5,25,166 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், ஓய்வூதியத்துக்காக ரூ. 1,19,696 கோடியும் ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ. 2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'அக்னிபத்' திட்டத்தால் இந்த ஊதிய மற்றும் ஓய்வூதியச் செலவைக் குறைக்கலாம் என்பதுதான்.

செலவைக் குறைக்க மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக இந்த அளவுக்கு போராட்டங்கள் வெடிப்பது ஏன்? இளைஞர்களை அது எவ்வாறு பாதிக்கும், காரணம் என்ன?

மிக இளம் வயதில்...

17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால், 10 அல்லது பனிரெண்டாம் வகுப்பு முடித்ததுமே, இந்தப் பணியில் சேரும் இளைஞர்களின் மேற்படிப்பு என்ற வாய்ப்பு / கனவு பறிக்கப்படும். ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் குறைவு. இந்த திட்டத்தால் உயர் கல்வி பயிலாத இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக கண்ணெதிரே அதிகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டமாக இருக்கும்.

மறுபக்கம், ராணுவ வேலை என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெற்றோர் உயர்கல்வி படிக்க வைக்காமல் பிள்ளைகளை அக்னிவீரர்களாக மாற்றும் அபாயமும் உருவாகலாம்.

நிரந்தரமில்லா பணி

ஒவ்வொரு ஆண்டும் 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு  செய்யப்படுவார்கள். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்படும். எஞ்சிய 75 சதவீதம் பேரும் கையில் சேவா நிதியுடன் மீண்டும் வேலையில்லா இளைஞர்களின் கூடாரத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். உயர் கல்வியும் கிடைக்காமல், நாட்டு நடப்புக்கு எந்த தொடர்பும் இல்லாத ராணுவப் பயிற்சி முடித்த இவர்கள் எந்த வேலைகளுக்கு  அமர்த்தப்படுவார்கள்? இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையுமா? கூடுமா?

பல ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள்கூட, முப்படைகளிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் அவரவர் தகுதிக்கு ஏற்ப கல்வி நிலையங்களில் சேர்ந்து மாணவர்களுடன் இணைந்து புதிய பாடம் ஒன்றைப்  படித்து தேர்ச்சி பெற்றால்தான், அவர்கள் ஓய்வுபெறும் வயதை அடையும் வரையிலான காலம் வரை, அதற்குரிய பணி வாய்ப்புகள் வழங்கும் நடைமுறை உள்ளது.

அப்படியல்லாமல், ராணுவத்தில் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் ஓய்வுக்காலத்தில் பல்வேறு நிறுவனங்களிலும் காவலாளியாகப் பணியில் சேர  வேண்டிய நிலையில் இருப்பதை மட்டுமே கண்கூடாகப் பார்க்கிறோம். இத்தகைய நிலைமை, நாலாண்டுப் பணி முடித்து வருவோருக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.  

ஊதியம் மட்டுமே..

அக்னி வீரர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியமும் கிடையாது. முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ. 30,000 நிா்ணயிக்கப்படும். அக்னி வீரா் தொகுப்பு நிதிக்கு ரூ. 9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ. 21,000 கையில் கிடைக்கும். 

இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 

4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ. 5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ. 11.71 லட்சம் வீரா்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத் தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிவோருக்கே பணிக்கொடை கட்டாயம்). அக்னி வீரா்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் பணியாற்றும் இளைஞர்களுக்கு தேசப்பற்று, ராணுவ பலத்தின் முக்கியத்துவம் மீதான புரிதல் ஏற்படலாம். ஆனால், 17.5 வயதில் ராணுவத்தில் இணையும் இளைஞர்கள் எப்படிப்பட்ட பணிகளில் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் கடினமான பயிற்சிகளை ஏற்கும் உடற்கட்டு, திறன், வலிமை, மனத்தெளிவு அவர்களுக்கு இருக்குமா என்பதும் கேள்விக்குறியே. 

பழைய முறை நீடிக்குமா?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபத் திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டால், படிப்படியாக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைமுறையே முற்றிலும் நிறுத்தப்பட்டு, அக்னிபத் திட்டமே தொடரும் அபாயமும் அச்சமும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.

பல லட்சம் இளைஞர்களும் கேட்பது என்ன?

விவசாயமோ, தொழில் நிறுவனங்களோ இல்லாத பல வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரே கனவு ராணுவத்தில் வேலை. இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கேட்பது என்னவென்றால், 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துவிட்டது. தற்போது தங்களுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தால்கூட அதில் கொண்டாட என்னவிருக்கிறது? வெறும் நான்கு ஆண்டுகள்தானே பணியாற்றுவோம். அதன் பிறகு நாங்கள் என்ன செய்வோம்? என்பதுவே.

வெறும் 10 அல்லது 12வது படித்த 21 வயது இளைஞருக்கு சமுதாயத்தில் என்ன வேலை கிடைக்கும்? காவல்துறை, ஆயுதப் படை என வேலைவாய்ப்பும் குறுகிவிடுமல்லவா?

6 மாதம் பயிற்சி போதுமா?

ராணுவ ஒழுங்குமுறைக்கு ஒருவர் பயிற்சி பெற்று அதனை பின்பற்ற 4  ஆண்டுகள் மிகக் குறைவு என்கிறார்கள். வெறும் 6 மாதங்கள் பயிற்சி  அளிக்கப்பட்ட அக்னிவீரர்களை வாகன ஓட்டுநர்கள், காலாட்படை, சமிக்ஞைப் பிரிவுகள் போன்றவற்றில் மட்டுமே ஈடுபடுத்த முடியும். சிறப்புப் பயிற்சிகளை அளிக்க மேலும் காலம் தேவைப்படும். எனவே, இந்த அக்னிவீரர்கள் விமான பைலட்களாகவோ, அதிகாரிகளாகவோ பணியமர்த்தப்படப் போவதில்லை. தரைப்பணிகள், மெக்கானிக் போன்ற பணிகளே ஒதுக்கப்படும். எனவே, அந்த 4 ஆண்டுகளில் அவர்கள் பெரிதாகக் கற்றுக்கொள்ள என்ன இருந்துவிடப்போகிறது?

அரைகுறைப் பயிற்சியால் ஆபத்து?

போதிய அனுபவமில்லாத, மிகக் குறைந்த வயது இளைஞர்களை அக்னிவீரர்களாக தேர்வு செய்யும் போது தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். எப்போதும் போர் மேகங்கள் சூழ்ந்த எல்லைப் பகுதிகளை ஒருபக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் சீனா என பகிர்ந்து கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது சரியா?

ஒருவர் பயிற்சி முடிந்து பணி அனுபவங்கள் பெற்று ராணுவ வீரராக அதுவும் போர் முனையில் பணியாற்றும் அளவுக்கு அனுபவம் பெற 3 - 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் 4 ஆண்டுகளில் ஒருவர் பணியே முடிந்துவிடும் என்றால், நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே ஓர் அச்சுறுத்தலாக மாறிவிடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சமூகத்துக்கும் அச்சுறுத்தல்

ஒவ்வோர் ஆண்டும் கணிசமான அளவில் இளைஞர்கள்  ராணுவத்தில் அரைகுறைப் பயிற்சியோடு இந்த சமூகத்துக்குள் வேலையில்லாத இளைஞர்களாகத் தள்ளப்படும்போது அவர்கள் வேலை கிடைக்காமல் பல்வேறு நிராகரிப்புகளுக்கு ஆளாக நேரிட்டால் மன உளைச்சல் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்னைகளை ஏற்படுத்தாதா? என்று சில அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

படித்து, வேலைக்கேற்ப ஏதோ ஒரு பயிற்சி பெறும் வயதில் ராணுவப்  பயிற்சியை மேற்கொண்டதால் ஏற்படும் சமூக மாற்றத்தை நிச்சயம் இந்தியா எதிர்கொள்ள நேரிடலாம்.

ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்புப் பறிப்பு, இளைய வயதில் மேற்படிப்பு தடைப்படக் காரணம், வெறும் 4 ஆண்டுகள் பணி போன்ற ஒரு சில காரணங்கள் மட்டுமல்ல.. வெளிச்சத்துக்கு வராத வேறு பல காரணங்களும் இன்று 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான அக்னிப் போராட்டங்களுக்குக் காரணங்கள் எனக் கூறப்படுகின்றன.

வேளாண் சட்டங்களைப் போல இழுத்துக் கொண்டிராமல், அக்னிபத்  திட்டத்துக்கு எதிரான இந்த அக்னிப் போராட்டங்களை  மத்திய அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு உகந்த முடிவை எடுக்க வேண்டும்  என்று எதிர்பார்க்கிறார்கள் இளைஞர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT