சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: ராஜபட்ச சகோதரர்களின் சட்ட ஒழுங்கு; நேரடி ரிப்போர்ட்- 26

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

ராஜபட்ச சகோதரர்களின் நீதிமன்றங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சில தீர்ப்புகள்:

அவன்காட் மிதக்கும் ஆயுதக் கிடங்கில் தொடர்புடைய ரூபாய் 35 மில்லியன் மதிப்புடைய மோசடி வழக்கிலிருந்து கோத்தபய ராஜபட்சவின் கூட்டாளிகள் கேட்ளா மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

நாமல்  ராஜபட்ச மற்றும் அவரின் சகோதரர்களால் படுகொலை செய்யப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கின் சகல சந்தேக நபர்களும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பிரேம்லால் விஜயசேகர உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.கோத்தபய  ராஜபட்சவின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸ் 124 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

திவிநெகும துறையில் ரூபாய் 29.4 மில்லியன் பணத்தை திருடிய வழக்கிலிருந்து பசில்  ராஜபட்சவும் கோத்தபய  ராஜபட்சவின் ஆலோசகரான லலித வீரதுங்க மற்றும் அனுஷா பல்பிட்ட ஆகியோர் ரூபாய் 600 மில்லியன் மதிப்புள்ள அரச பணத்தை கையாடல் செய்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்னர்.

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்.

சமூக செயல்பாட்டாளர்கள் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்ட வழக்கின் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு இருந்த கோத்தபய  ராஜபட்ச மேற்குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரூபாய் 208 மில்லியன் மதிப்புள்ள அரச பணத்தை துஸ்பிரயோகம் செய்து மல்வானை பகுதியில் நீச்சல் குளம் மற்றும் மாளீகை கட்டிய வழக்கிலிருந்து பசில்  ராஜபட்ச விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்.

மிக் 29 விமான கொள்முதலில் தனிப்பட்ட கணக்குகளுக்கு 1.5 மில்லியன் அமெரிக்கா டாலர்களை தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றிய வழக்கில் சர்வதேச காவல் துறையில் தேடப்பட்டு வந்த ராஜபட்ச சகோதரர்களின் மைத்துனர் உதயங்க வீரதுங்க அவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்.

மகிந்த ராஜபட்ச-அதிபர் கோத்தபய ராஜபட்ச

ரவிராஜ், சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம், துணைவேந்தர் ரவீந்திரநாத், ஊடகவியலாளர் நடேசன் உள்பட ஆயிரக்கணக்கான கொலைகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்த பிள்ளையான் ஜோசப் பரராஜசிங்கம்  படுகொலை வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிக்கிறார்.

ரூ.1 பில்லியன் வரி மோசடி காரணமாக சீல் வைக்கப்பட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்  மதுபான தொழிற்சாலை உரிமம் எந்த தண்டனையும் இன்றி மீண்டும் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் போன வழக்கில் தொடர்புடைய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2010-2014 காலப்பகுதியில் அரசுக்கு 40 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ராஜபட்சவுக்கு சொந்தமானதும் ரூபாய் 365 மில்லியன் மோசடியுடனும் தொடர்புடைய தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் செயற்பட நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன் ராஜபட்ச சகோதரர்களின் தந்தையருக்கான நினைவு இல்லம் கட்டிய போது ரூபாய் 33 மில்லியன் அரச பணத்தை திருடிய வழக்கில் இருந்து கோத்தபாயா ராஜபட்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன 41.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியது தொடர்பான மோசடி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

36.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பசில் ராஜபட்ச விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க 8 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கிலும் நிலங்கள் மோசடி ஒன்றில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் நீதிபதி மொஹான் பீரிஸ் மீது சுமத்தப்பட்ட வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா நிதாஹஸ் கம்காரு காங்கிரஸ் (Sri Lanka Nidahas Kamkaru Congress) என்கிற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 3.9 மில்லியன் பெறுமதியான பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த விருப்பத்தில் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதிபர் செயலாளர் காமினி செனரத் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க - அதிபர் கோத்தபய ராஜபட்ச

சட்டத்தின் ஆட்சி (rule of law) தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்ததில்லை தான். அறமற்ற சட்டங்களின் (rule by immoral laws) ஆட்சியாலேயே அநியாயம் இழைக்கப்பட்டது. இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சட்ட அடிப்படையே இல்லாமல் இருக்கும் ஆட்சி (lawless regime) அறமற்ற சட்டங்களின் (rule by immoral laws) ஆட்சியை விடக் கொடுமையானது.

இலங்கை எதிர்கொண்டு நிற்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இலங்கை அரசு நிறுவனங்களின் (State Owned Enterprises) தோல்வி மிக முக்கியமான காரணமாக இருக்கிறது .குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 மில்லியன் ரூபாய் நட்டமடைந்தது.

இலங்கை மின்சார துறைக்கு 929 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருந்தது. அதே போல தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) 825 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்தது.

இது மட்டுமின்றி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services) 1,792 மில்லியன் ரூபாய் நட்டமடைந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines) ரூபாய் 24,800 மில்லியன் நட்டத்தை சந்தித்தது.

இது தவிர, அரசு பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) 730 மில்லியன் ரூபாய் நட்டத்தையும்  மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு (Central Engineering Consultancy Bureau) 6 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் அடைந்தது.

அதே போன்று அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான நிறுவனம் (State Development and Construction Corp) 106 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூபாய் 95 மில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டது.

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (Janatha Estates Development Board) 118 மில்லியன்,  களுபோவிடியன தேயிலை தொழிற்சாலைற்கு (Kalubovitiyana Tea Factory) 34 மில்லியன் ரூபாய், இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவை (Independent Television Network Ltd) 244 மில்லியன் ரூபாய்,  இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் (Sri Lanka Rupavahini Corporation) ரூபாய் 56 மில்லியன் நட்டங்களை அடைந்துள்ளது.

இலங்கை கைப்பணி பொருள்கள் சபை (Sri Lanka Handicraft Board) ரூபாய் 58 மில்லியன் நட்டத்தையும் சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) ரூபாய் 151 மில்லியன் நட்டத்தையும் சந்தித்துள்ளன.

மேலும், இலங்கை அச்சக கூட்டுத்தாபனம் (State Printing Corporation) ரூபாய் 226 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் இலங்கை மீன்பிடி கூட்டுத்நிறுவனம் (Ceylon Fisheries Corporation) ரூபாய் 43 மில்லியன்  நட்டத்தையும் சந்தித்து வந்த வேளையில் இலங்கை மீன்பிடி துறைமுக நிறுவனத்திற்கு (Ceylon Fishery Harbour Corporation) ரூபாய் 83 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருந்தது.

இது போதாதென்று ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனத்திற்கு (Hotel Developers Lanka Ltd) ரூபாய் 153 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

இந்த நிலைமை வெறுமனே அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மட்டுமின்றி அரசாங்கத்தின் சகல அமைப்புக்கள், கூட்டுத்தாபனங்கள் என மத்திய அரசின் நிர்வாக அலகுகள், தொடக்கம், மாவட்ட அரசு செயலகங்கள் வரை தொடருகிறது.

குறிப்பாக திறனற்ற நிதி நிர்வாகம், வளங்களின் வீண் விரயம், ஊழல் மோசடிகள், அளவுக்கதிமான அரசு ஊழியர்கள், அரசியல் தலையீடுகள், அரசியல் நியமனங்கள் போன்ற பல காரணங்களினால் அரசு நிறுவனங்கள் தோல்வியடைகின்றன.

தோல்வியடைகின்ற அரச நிறுவனங்கள் சர்வதேச ரீதியாக ஏற்படும் விலை மாற்றங்களை எதிர்கொள்ள முடிவடைவதில்லை.

இதனால் தோல்வியடைகின்ற நிறுவனங்கள் தங்கள் நட்டங்களை பொதுமக்கள் மீது சுமத்தி விடுகின்றார்கள். குறிப்பாக, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 62,000 மில்லியன் ரூபாய் நட்டமடைந்து இருக்கின்ற நிலையில் சர்வதேச விலை மாற்றங்களை தனித்து எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறது. ஆகவே, வெறுமனே கடன்களை பெற்று கொள்ளுவதன் மூலம் மேற்படி நெருக்கடிகளை கட்டுப்படுத்த முடியாது

சக்தி மிக்க நாடுகளாக உருவாகி வரும் ருவாண்டா , பங்களாதேஷ் , வியட்நாம், எத்தியோப்பியா போன்று இலங்கை தனதுசெயல்முறைகளையும் அரசு நிறுவனக் கட்டமைப்புகளையும் மீண்டும் கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் .

                                                                                                                             -தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT